அரசியலமைப்பின் பிரகாரம், 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க நாளை முதல் தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் அடிப்படையில் ஒக்டோபர் 16ஆம் திகதி புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.
அதற்கான பிரதான பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக தற்போது, முன் ஆயத்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஊடகங்கள் ஊடான விளம்பரங்கள் நாளை முதல் வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.
வழக்கமாக ஆண்டு தோறும் தேருநர் இடாப்பு மீளாய்வுப் பணிகள் பெப்வரி முதலாம் திகதியிலிருந்தே ஆரம்பிக்கப்படுகிறது.
எனினும், இந்த ஆண்டு தேர்தல் காலமாக இருப்பதனால் ஆணைக்குழுவானது அப்பணியை முற்கூட்டியே ஆரம்பித்துள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.