போட்டியிடாமலேயே மண் கவ்விய ஊசி, சங்கு , மான் குறூப் – யாழ் உட்பட வடக்கு கிழக்கில் வீடா ? திசைகாட்டியா ?
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் பல முன்னணி தமிழ்தேசிய மற்றும் அரசியல்வாதிகளின் கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமலேயே மண் கவ்வியுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் ஊசி கட்சி சார்பாக களமிறங்கிய சுயேட்சைக்குழுவின் வேட்பு மனுக்கள் பருத்தித்துறை நகரசபை தவிர்ந்த யாழ்ப்பாணத்தின் அனைத்து சபைகளிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. யாழ் மாநகர சபையில் முதல்வர் வேட்பாளர் கௌசல்யா நரேன் வேட்புமனுவில் கையெழுத்திடாமையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்த பணம் அனுப்புமாறு அர்ச்சுனா கோரியதையடுத்து புலம்பெயர் தமிழர்கள் பலர் அவருக்கு பணம் அனுப்பியிருந்தனர். வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்களின் கட்டுப்பணம் மீள அவர்களிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில் அர்சுனா அவற்றை புலம்பெயர் தமிழர்களுக்கு திருப்பி அனுப்புவாரா எனவும் பலர் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னாள் யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனு யாழ்.மாநகர சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மணிவண்ணனின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. வலிகாமம் தெற்கு, பருத்தித்துறை பிரதேச சபையிலும் அவர்களுடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சங்குச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் வேட்புமனுக்கள் யாழ் மாநகர சபை உட்பட பெருமளவான இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி நகர சபை, காரைநகர் பிரதேச சபை, ஊர்காவற்றுறை பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வலி.மேற்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை, நல்லூர் பிரதேச சபை ஆகிய இடங்களிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே நிராகரிப்பு தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உயர் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ள அதேவேளை தமிழ்க் கட்சிகள் சார்பாக நான் நீதிமன்றில் ஆஜராக மாட்டேன் என சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்புமனுக்கள் பருத்தித்துறை பிரதேச சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் களமிறக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனுக்கள் வலிகாமம் கிழக்கு மற்றும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் தேசிய மக்கள் சக்தி, தமிழரசு கட்சி ஆகிய இரு கட்சிகளினது வேட்பு மனுக்கள் மட்டுமே அனைத்து இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எனவே யாழில் திசைக்காட்டியா..? வீடா என்ற போட்டியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.