தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் ஆராய நடவடிக்கைகள் !

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 452 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 3 இலட்சத்து 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது மொத்த வாக்குகளில் 2.24 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. எனவே, இந்த முறை அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது.”- தேர்தல்கள் ஆணைக்குழு

திட்டமிட்டவாறு மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இல்லையெனில் எல்லை நிர்ணயம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டால் மட்டுமே வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உள்ளூராட்சித் மன்றத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என இதுவரை குறிப்பிட்ட அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை எனவும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திகதியில் அதனை நடத்துவதில் உள்ள சிரமம் குறித்து மாத்திரமே உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக ளுக்காக 770 மில்லியன் ரூபா வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை !

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இது தொடர்பான கடிதம் நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் செலவினங்களுக்காக முன்னர் நிதியமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் பணம் விடுவிக்கப்பட்டதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து அத்தொகையை ஒதுக்குவதற்கு பாராளுமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் !

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இன்று (19) பாராளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று இரவே ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பெண்களுக்காக அரசியலில் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள 25வீத ஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்தி பெண்கள் போராட்டம் !

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சிமன்ற பெண்களினால் பெண்களுக்காக அரசியலில் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள 25வீத ஒதுக்கீட்டை அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வலியுறுத்தி மட்டக்களப்பில் கையெழுத்துப்போராட்டமும் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி மையம் ஏற்பாட்டில் 16நாள் செயற்பாட்டு வாரத்தினை முன்னிட்டு இந்த கையெழுத்துப்பெறும்போராட்டம் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு காந்திபூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.

பெண்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தவும் என்னும் தலைப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள மாநகரசபை,நகரசபை,பிரதேசசபைகளில் உள்ள பெண் உறுப்பினர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறுபட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.

பெண்களுக்கான 25வீத ஒதுக்கீடு கடந்த ஆட்சிக்காலத்தில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ளாத காரணத்தினால் பெண்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையே காணப்படுவதாகவும் அதனை உறுதிப்படுத்துமாறும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது ஜனாதிபதி,பிரதமர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு என்பனவற்றுக்கு மகஜர்கள் அனுப்புவதாற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

கையெழுத்துப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பெண்கள் உரிமையினை வலியுறுத்தும் வகையில் கலந்துகொண்ட அனைத்து பெண்களும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டதுடன் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் கலந்துகொண்டனர்.

இரட்டை குடியுரிமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இரட்டைக் குடியுரிமை தொடர்பான முடிவுகளை நீதிமன்றத் தீர்மானங்கள் மூலம் மட்டுமே எடுக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் கீழ் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகச் செயற்பட முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர் இரட்டைக் குடியுரிமை உள்ளவரா இல்லையா என்பது குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது என்று கூறியுள்ள தேர்தல் ஆணைக்குழு, அத்தகைய நபர்கள் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் போது இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அவ்வாறான வேட்பாளர்கள் இது தொடர்பில் அறிக்கையொன்றை வழங்கினால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

“அனைவரும் சவப்பெட்டியிலிருந்து கொண்டும் அரசியலும் ஜனநாயகமும் பேச வேண்டும்.” – மஹிந்த தேசப்பிரிய

“அனைவரும் அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும். சவப்பெட்டியிலிருந்து கொண்டும் அரசியலும் ஜனநாயகமும் பேச வேண்டும்.” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாணசபைகளை நிர்வகித்துச் செல்வது மக்களின் அடிப்படை உரிமை மீறல் என்பதோடு , அது பாரிய தவறுமாகும். இன்று அனைத்து மாகாணசபைகளையும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுனர்கள் தனித்து நிர்வகித்துக் கொண்டிருக்கின்றனர்.

மாகாண ஆளுனர்கள் இன்றும் பதவியில் உள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் இன்றி இவர்கள் தனித்து மாகாணசபைகளை நிர்வகித்துக் கொண்டிருக்கின்றனர். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 9 ஆளுனர்களும் , அந்தந்த மாகாணங்களில் முழுமையாக நிதி முகாமைத்துவத்தை செய்து கொண்டிருக்கின்றனர்.

எந்தவொரு அரச நிறுவனத்தையும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி நடத்திச் செல்வதானது பாவமாகும். அது தவறுமாகும். இவ்வாறு மக்கள் பிரதிநிதிகள் இன்றி உள்ளுராட்சி சபைகளும், மாகாணசபைகளும் நிர்வகிக்கப்படுகின்றமை மக்களின் அடிப்படை உரிமை மீறலாகும் என்று வழக்கொன்றில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

எனவே மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாணசபைகளை நிர்வகித்துச் செல்வது முற்றிலும் சடத்திற்கு முரணானது. மக்களின் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் , முறைமைகளிலும் அரசியல்வாதிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

அனைவரும் அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும். சவப்பெட்டியிலிருந்து கொண்டும் அரசியலும் ஜனநாயகமும் பேச வேண்டும். இவற்றை குரல் பதிவு செய்து நான் இறந்த பின்னர் அதனை ஒலிபரப்பச் செய்வேன் என்றார்.

தேர்தல்களின் கட்டமைப்பில் திருத்தங்களை முன்மொழிய பாராளுமன்ற சிறப்புக் குழு !

தேர்தல் மற்றும் தேர்தல்களின் கட்டமைப்பில் திருத்தங்களை முன்மொழிய பாராளுமன்ற சிறப்புக் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை அமுல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுவான உடன்பாட்டுக்கு வந்துள்ளன.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள முதல் தேர்தலுக்கான வாக்கெடுப்புக்கு முன்னர் அதன் பரிந்துரைகளை ஏற்று நடைமுறைப்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அவற்றில், தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துதல், முன்கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் வாக்கெடுப்பு நாளில் விசேட வாக்கெடுப்பு நிலையங்களை அமைத்தல், மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

தேர்தல் காலத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் ஊடக உப-நடவடிக்கைகளை அமுல்படுத்துவது அந்த பரிந்துரைகளில் ஒன்றாகும்.

மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளின் உறுப்பினர்களின் பதவிக் காலம் முடியும் வரை தேர்தல் ஆணைக் குழு வெளியிடும் நெறிமுறைகள் செல்லுபடியாகும் என்றும் அதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்குவதும் அதில் அடங்கும்.