தையிட்டியை வைத்து மீண்டும் ஓர் கறுப்பு ஜூலை – பா.உ அர்ச்சுனா வழியில் பயணிக்குமா தமிழ்தேசியம்..?
தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சியமைத்த நல்லாட்சி அரசு காலத்தில் உருவாக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையை இடிப்பதை ஊதிப்பெருசாக்கி எதிர்வரும் தேர்தல்களில் என்.பி.பியை தோற்கடித்து தமது வாக்குவங்கியை மீண்டும் நிலைநிறுத்த தமிழ்த்தேசியக் கட்சிகள் முயல்கின்றமை தமிழ் குறுந்தேசியவாதத்தின் அரசியல் வறட்சியின் வெளிப்பாடு என மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கட்டி முழுமைப்படுத்தப்பட்ட தையிட்டி விகாரையை உடைக்குமாறு கூறுவது மொக்குத்தனமான முடிவு எனவும் மீண்டும் தெற்கில் ஓர் ஜூலைகலவரம் ஏற்பட வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கும் இராமநாதன் அர்ச்சுனா, மீளவும் மக்களை உசுப்பேற்றி குளிர்காய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிறிதரன் ஆகியோர் முற்படுகின்றனர் என தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள இராமநாதன் அர்ச்சுனா,
விகாரை கட்டி முழுமைப் படுத்தும்வரை தூங்கி விட்டு இப்போது வந்து விகாரையை இடிக்க கேட்பது அறிவில்லாததன் வெளிப்பாடு. அரசியல்வாதிகள் தூண்டிவிட்டு ஒதுங்கி விடுவார்கள் பாதிக்கப்படுவது அந்த காணி உரிமையாளர்களும், இவர்களுக்காக திரளும் மக்களுமே. தையிட்டி விகாரையின் விகாராதிபதியுடன் நான் நேரில் சென்று சந்தித்தேன். அவர் மக்கள் தன்னுடன் அன்னியோன்யமாக பழகுவதாகவும் அவர் அப்பகுதி பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிப்பதாகவும் தெரிவிக்கிறார். சிங்களவர்கள் பற்றி போலியான விம்பம் ஒன்றை தமிழ்தேசிய தலைவர்கள் கட்டமைத்துள்ளார்கள். அந்த மக்கள் அருமையான மக்கள் – அரசியல்வாதிகள் தான் தூண்டி விடுகிறார்கள். தமிழ் மக்கள் இந்த பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும். அரசியல் கதிரைகளுக்காக மக்களை தூண்டி விட பார்க்கிறார்கள். சுகாஸ் உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் சைக்கிள் கட்சியில் இருக்கிறார்கள். இதுவரை ஒரு வழக்கு கூட விகாரைக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பவர்களும் போடவில்லை. பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட மக்களும் போடவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலதிகமாக போராட்டங்கள் கவனயீர்ப்புகள் செய்த யாருமே இதை சட்ட ரீதியாக அணுகாது போதே தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் இது முழுக்க முழுக்க அரசியல் சதுராட்டம். இனிமேல் விகாரைகள் கட்டுவதை தடுக்க வேண்டுமே தவிர கட்டிய விகாரையை உடை என்பது மடத்தனம் என தெரிவித்துள்ளார்.
மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம், தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரத்தில் பா.உ இராமநாதன் அர்ச்சுனாவின் நிலைப்பாடு சரியானதாக உள்ளது எனவும், அவர் கூறுகின்ற வழிமுறைகள் சாலப்பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளமையும் கவனிக்கத்தக்கதது.
தையிட்டி விகாரை விவகாரம் மீண்டும் ஓர் பதற்றமான சூழலை தமிழ் – சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது. தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடமேறியது முதல் இனவாதக் கருத்துக்கள் செயலிழக்கும் சூழல் உருவான போதும் கூட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இனவாத சூழல் ஒன்றை உருவாக்குவதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சாடியுள்ளார்.
இதேவேளை, யாழ். தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மீது தமிழர்கள் எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டோம்” என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியாது என தெரிவித்துள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி , தையிட்டி விகாரை எந்தக் காணியில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்தக் காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் நாட்டில் அமைந்துள்ள எந்த மதத் தலங்களையும் அகற்ற முடியாது. அது மத ரீதியான, இன ரீதியான வன்முறைகளுக்கே வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ். தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்கும் என்று கூட்டணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் , தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டியதுடன் அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு நாம் ஆதரவு வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.