தையிட்டி விகாரை

தையிட்டி விகாரை

தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து அருண் சித்தார்த் தலைமையில் பேரணி சென்ற மக்கள் !

தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று (13) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு ஆதரவு தெரிவித்து, ‘அனைத்து மதங்களையும் ஒன்றாக மதிக்க வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் இப்பேரணி தையிட்டி சந்தியிலிருந்து விகாரை வரை முன்னெடுக்கப்பட்டது.

அருண் சித்தார்த் தலைமையில் தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பேரணி | தினகரன்

இதன்போது 200இற்கும் மேற்பட்ட மக்கள் விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

இதன்போது யாழ்ப்பாண சிவில் சமூக நிலைய தலைவர் அருண் சித்தார்த் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் அனைவருக்கும் அனைத்து மதங்களையும் மதிக்கின்ற மத வழிபாடுகளை மேற்கொள்ளும் சுதந்திரம் உண்டு. தையிட்டி விகாரை யாழ்ப்பாண மாவட்ட வரைபடத்தில் 1959ஆம் ஆண்டு விகாரைக்குரிய பகுதி என குறிக்கப்பட்டுள்ள நிலமாகும். இது பொதுமக்களின் காணிகள் அல்ல. விகாரை அழிவடைந்த காலத்தில் பொதுமக்கள் அக்காணியை கையகப்படுத்தி தமது குடியிருப்புகளை அமைத்துள்ளனர். ஆனாலும், அது விகாரைக்குரிய நிலமாகவே காணப்படுகிறது. பொதுமக்களின் காணியில் விகாரை அமைக்கப்பட்டால், அவர்கள் நீதிமன்றத்தினை நாட முடியும்.

ஒவ்வொரு மதத்தையும் இனத்தையும் கூறி இனவாதம் மற்றும் மதவாதத்தினை எவரும் தூண்ட முயற்சிக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தீர்வுகள் ஏதுமின்றி முடிவுக்கு வந்தது தையிட்டி கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டம், நேற்று இரவு 8 மணியளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்தக்கட்ட செயற்பாடு தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தையிட்டி எமது நிலம், புத்த விகாரை வேண்டாம், இராணுவமே வெளியேறு என போராட்டகாரர்கள், கடந்த மூன்று நாட்களாக பதாகைகளை தாங்கியவாறு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

14 குடும்பங்களுக்கு சொந்தமான அண்ணளவாக 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்த மயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டவிரோதமான விகாரையை அகற்று – தையிட்டியில் தொடரும் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் இறுதி நாளான இன்று காலை போராட்டம் ஆரம்பித்துள்ளது.

மழைக்கு மத்தியிலும் போராட்டக்காரர்கள் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 14 குடும்பங்களுக்கு சொந்தமான 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்த கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்தமயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டு, தொடரச்சியாக மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறான நிலையிலேயே தற்போது இறுதி நாள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தையிட்டி விகாரையில் வெசாக் தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் காணிக்குள் பௌத்த விகாரை – யாழ், வலிவடக்கு தையிட்டியில் கவனயீர்ப்பு போராட்டம் !

பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழ், வலிவடக்கு தையிட்டியில் கவனயீர்ப்பு போராட்டம் ஓன்று முன்னெடுக்கப்பட்டது.

இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பில் இன்று பிற்பகல் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பேரணியாக நகர்ந்து தையிட்டி விகாரை வரை சென்றது.