த.ஜெயபாலன்

த.ஜெயபாலன்

“தமிழ் மக்களுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளாத தமிழ் தலைமைகள் எவ்வாறு அத்தமிழ் மக்களுக்கு அரசிடமிருந்து நியாயத்தைக் கோர முடியும்?” முன்ஜன்கிளப்பாக்கில் “வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை” நூல் அறிமுகம்

“தமிழ் மக்களுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளாத தமிழ் தலைமைகள் எவ்வாறு அத்தமிழ் மக்களுக்கு அரசிடமிருந்து நியாயத்தைக் கோர முடியும்?” என்று வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நூலில் த ஜெயபாலன் முன்வைத்த விமர்சனம் இன்னமும் நிதர்சனமாகவே உள்ளது. லண்டன், கிளிநொச்சி, பாரிஸில் நடந்த நூல் அறிமுக விழாக்களின் தொடர்ச்சியாக ஜேர்மனியின் முன்ஜன்கிளப்பாக் நகரில் இந்நூல் வெளியீடு ஒக்ரோபர் 29 ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருக்கின்றது. மலை 4 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் புலத் தமிழர்கள் தாயகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் உலகக் கலாச்சாரப் போக்கும் மீள் சிந்தனையும் என்ற தலைப்பிலான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

நூல் அறிமுகம், கலந்துரையாடல், விருந்துபசாரம் என்று இந்நிகழ்வு சிந்திக்கவும் சுவைக்கவும் ஏற்றாற் போல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் சமூகக் கலாச்சார கல்வி அமைப்பின் தலைவி திருமிகு ஜெ கங்கா தெரிவிக்கின்றார். இந்நிகழ்வில் அரசியல் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்துகொள்வார்கள் எனக் குறிப்பிட்ட ஜெ கங்கா முன்ஜன்கிளப்பாக்கில் அண்மைக்காலத்தில் நிகழ்கின்ற முதல் நூல் அறிமுக நிகழ்வு இதுவெனத் தெரிவித்தார்.

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் யுத்தம் ஏற்படுத்திய உணர்வலையின் தாக்கத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல் போன்றதொரு நூல் இனிமேல் வெளிவருவதற்கு வாய்ப்பிலை என ஹொலன்டில் வாழும் அரசியல் ஆர்வலரான ஆர் சிறிகாந்தராஜா தெரிவிக்கின்றார். நாளைய நிகழ்வில் கலந்துகொள்ள உள்ள இவர் இவ்வாறான பக்கசார்பற்ற வரலாற்றுப்பதிவுகள் எமக்கு மிக அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.

“நாங்கள் கடந்து வந்த காலகட்டம் தொடர்பாக காத்திரமான சில பதிவுகள் மட்டுமே வெளிவந்துள்ளன. வெளிக்கொணரக் கூடிய விடயங்கள் ஏராளமானவை. யுத்தம் முடிந்து ஆண்டுகள் பலவாகியும் இந்த யுத்தத்தின் அடிப்படைத் தகவல்களே சேகரிக்கப்படாத நிலையே காணப்படுகின்றது” என்று த ஜெயபாலன் தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை “எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? எத்தனை பேர் ஊனமுற்றனர்? எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர்? எவ்வளவு சொத்துக்கள் இழக்கப்பட்டது? எவ்வளவு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? போன்ற பல கேள்விகளுக்கு இன்னமும் சரியான பதில் இல்லை” என்று தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ள நூலாசிரியர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தலைமைகள் தங்கள் மக்களுக்கு நியாயமாகவும் அரசியல் நேர்மையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

“இலங்கையின் இனவாத அரசு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு தலைமை வழங்குவதாக மக்களை ஏமாற்றும் தரப்பும் விமர்சனத்திற்குரியதே. தமிழ் மக்களுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளாத தமிழ் தலைமைகள் எவ்வாறு அத்தமிழ் மக்களுக்கு அரசிடமிருந்து நியாயத்தைக் கோர முடியும்?” என்ற கேள்வியையும் நூலாசிரியர் முன்வைத்துள்ளார்.

விமர்சனபூர்வமான இந்நூல் கடந்தகாலம் பற்றிய மதிப்பீட்டை மேற்கொண்டிருப்பதாக பல விமர்சகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். இந்நூல் வெளியீடு பற்றிய விபரங்கள் கீழே: