நரேந்திர மோடி

நரேந்திர மோடி

மூன்றாவது தடவையாகவும் இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு!

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது தடவையாகவும் இன்று(09) பதவிப் பிரமாணம் செய்தார்.

அதற்கமைய இந்தியாவின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவிற்கு பின்னர், தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக இந்தியப் பிரதமராக பதவியேற்று நரேந்திர மோடி இந்திய வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்ரபதி பவனில் இந்தியப் பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இன்றிரவு 7.15 அளவில் நரேந்திர மோடி மற்றும் அமைச்சரவையில் இடம்பெறவுள்ள உறுப்பினர்கள் விழா அரங்கிற்கு வருகைதந்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட உலகத் தலைவர்களும் அதிதிகளும் விழாவில் கலந்துகொண்டனர்.

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விழா அரங்கிற்கு வருகைதந்ததை அடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

பின்னர் இந்திய குடியரசுத் தலைவர் முன்னிலையில் நரேந்திர மோடி பிரதமராக பதவிப் பிரமாணம் செய்தார்.

இந்தியாவில் மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி  பிரதமராக !

இந்தியாவில் மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி  பிரதமராக பொறுப்பேற்க பதவியேற்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 292 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது.இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.

இந்த நிலையில் பா.ஜ.க. தலைமையில் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியினர் இன்று மாலை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோர உள்ளனர்.

இதனையடுத்து, வரும் 8ம் திகதி மாலை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை மோடி, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து தனதும் தனது அமைச்சரவையினதும் பதவி விலகலை சமர்ப்பித்தார். அப்போது அவர் பதவியேற்பு வரை பதவியில் நீடிக்குமாறு அதிபரால் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

3ஆவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர் – மோடி

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.

தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 160க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.

இவர் 6,12,970 வாக்குகள் பெற்றார். 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி.

 

நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தேர்தல் வெற்றி கொடுத்துள்ளது.

 

இவ்வளவு பெரிய அளவிலான தேர்தல் பயிற்சியை நடத்திய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.

 

இந்தியாவின் தேர்தல் செயல்முறை மற்றும் முறையின் நம்பகத்தன்மை குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள்.

 

இந்தப் புனித நாளில் தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. மக்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்திய வாக்காளர்களுக்கு நான் பெரும் கடன்பட்டுள்ளேன்.

 

ஒடிசா, அருணாசலப் பிரதேசத்தில் பாஜக வென்றுள்ளது. ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றுள்ளது. கேரளாவில் பா.ஜ..க காலூன்றி உள்ளது என தெரிவித்தார்.

மோடி தொடர்பில் சர்ச்சை கருத்து வெளியிட்ட இ.மி.சபையின் தலைவர் இராஜினாமா!

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

இந்நிலையில் அவர் சமர்ப்பித்த இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக நலிந்த இளங்கோகோன் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

எரிசக்தி முதலீட்டுத் திட்டங்களை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக இவர் முன்னதாக கூறியிருந்தார்.

இருப்பினும் காற்றாலை மின் திட்டத்தை வழங்குவது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் நேற்றைய தினம் தான் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் பெர்டினான்டே மன்னிப்பு கேட்டிருந்த நிலையில் இன்று இராஜினாமாவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையை சுமப்பதற்கு நரேந்திர மோடியும் தயாராகவுள்ளார்.” – மலையகத்தில் அண்ணாமலை புகழ்ச்சி !

“அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையை சுமப்பதற்கு நரேந்திர மோடியும் தயாராகவுள்ளார்.” என இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவரான அண்ணாமலை தெரிவித்தார்.

இலங்கையில் தொழிலாளர் தின விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்புஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வு இன்று (01) கொட்டகலை சி.எல்.எவ்.வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது சாதாரணக் கட்சி கிடையாது. ஆரம்பிக்கப்பட்ட அடையாளத்தை இன்னும் அக்கட்சி மறக்கவில்லை. தொழிலாளர்களை மையப்படுத்தியே அது பயணிக்கின்றது. சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா, இலங்கையர்களுக்கு மட்டும் அல்ல, தமிழ்நாட்டில் இருந்த தமிழர்களுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளார். குரல் அற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலித்துள்ளார்.

1947 இல் நடைபெற்ற தேர்தலில் 8 மலையக பிரதிநிதிகள் நாடாளுமன்றம் சென்றனர். அதன்பின்னர் குடியுரிமை மற்றும் ஏனைய உரிமைகள் பறிக்கப்பட்டன. அவற்றை மீட்டெடுப்பதற்கு தொண்டமான் பாடுபட்டார். வெற்றியும் கண்டார். தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார். அமரர் ஆறுமுகன் தொண்டமானும் மக்களுக்காகவே அரசியல் செய்துள்ளார். தனது மக்களின் நில உரிமைக்காக போராடியுள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின்கீழ் முழு உலகமும் இந்தியாவை திருப்பி பார்க்கின்றது. இந்தியா என்பது வல்லரசு நாடாக மாறியுள்ளது. உலகில் 5ஆவது மிகப்பெரிய பொருளாதார பலமுடைய நாடாக மாறியுள்ளது. ரஷ்யா, உக்ரைனுக்கிடையில் மோதல் ஏற்பட்டபோதுகூட, உக்ரைனில் வாழ்ந்த இந்தியர்களை சிறு காயமின்றி மீட்டெடுத்தார்.

இலங்கையை அருகிலுள்ள நாடு, எமது சொந்தங்கள் வாழும் நாடு என இரு கோணத்தில் இந்தியா பார்க்கின்றது. அதனால்தான் நெருக்கடியான கட்டங்களில் உதவிகள் வழங்கப்படுகின்றன. உயிர் காப்பு மருந்து தேவை என்று சொன்னபோது, 107 வகையான 760 கிலோ மருந்துகளை அனுப்பி வைத்துள்ளோம். எதிர்காலத்திலும் உதவுவோம். மலையக மக்களுக்கான உதவிகளும் தொடரும். நாம் வளரும் அதேவேளை, எமது தொப்புள்கொடி உறவுகளையும் வளர வைப்போம். மலையகம் கல்வியால் உயர வேண்டும். அதற்கான உதவிகளும் தொடரும்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நீண்டகாலத்துக்கானது அல்ல. விரைவில் நிலைமை மாற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது. அன்று அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கின்றார் என்றார்.

“இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களை உறுதி செய்வதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது” – இந்திய பிரதமர் நரேந்திர மோடி

“இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களை உறுதி செய்வதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது” என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மோடி மேலும் உரையாற்றுகையில்,

தமிழர்கள் உரிமை தொடர்பில் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம். அவர்கள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவத்துடன் வாழ்வதை உறுதி செய்வது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

இலங்கையின் தமிழ் சகோதரர்கள், சகோதரிகளின் நலன்கள் அபிலாசைகளை இந்திய அரசாங்கம் என்றும் கருத்தில் எடுத்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஒரேயொரு இந்திய பிரதமர் என்ற பெருமை எனக்குள்ளது. இலங்கையில் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் நாங்கள் இலங்கை தமிழர்களின் நலன்களை உறுதி செய்துவருகின்றோம்.

கடந்த காலங்களை விட எங்கள் அரசாங்கம் அதிகவளங்களை வழங்கியுள்ளது. இலங்கையின் வடகிழக்கில் இடம்பெயர்ந்தவர்களிற்கு 50,000 வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளோம்.

இலங்கையின் மலையகத்தில் 40,000 வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளோம். இலங்கைத் தமிழர்களின் சம உரிமை மற்றும் மரியாதையோடு வாழ்வதை இந்திய அரசு தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறதென தெரிவித்துள்ளார்.

தொடரும் உலக அரசியல் பிரபலங்களின் ட்விற்றர் கணக்கு முடக்கங்கள் . – இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ட்விற்றர் கணக்கு முடக்கம் !

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ட்விற்றர் கணக்கு, ஹெக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவருடைய தனிப்பட்ட இணையத்தள ட்விற்றர் கணக்கை, ஹெக்கர்கள் முடக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவரது தனிப்பட்ட இணையத்தளத்திற்கான @narendramodi_in என்ற ட்விற்றர் கணக்கு செயல்பட்டு வருகிறது. இதனை 25 இலட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ட்விற்றர் கணக்கை, ஹெக்கர்கள் சிலர் முடக்கியுள்ளனர். இதையடுத்து தொடர்ச்சியான பல்வேறு பதிவுகளை இட்டனர்.
அதில் கொவிட்-19 பாதிப்பிற்கான பிரதமரின் தேசிய நிவாரண நிதியத்திற்கு அனைவரும் நிதியுதவி செலுத்துங்கள். இந்தியாவில் தற்போது கிரிப்டோ கரன்சி முறை பரவலாக தொடங்கியிருக்கிறது. எனவே பிட்காயின் மூலம் நிதியுதவி செலுத்துங்கள் என்று கூறி குறிப்பிட்ட குறியீடும் பதிவிடப்பட்டிருந்தது.
இது பற்றி தகவலறிந்த ட்விற்றர் நிறுவனம் உடனே மீட்பு நடவடிக்கையில் இறங்கியது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ட்விட்கள் நீக்கப்பட்டுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஈ-மெயில் வாயிலாக ட்விற்றர் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட இணையத்தளத்திற்கான  ட்விற்றர் கணக்கை முழுவதுமாக மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். வேறு ஏதேனும் ட்விற்றர் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறதா? என விசாரணை நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விற்றர் கணக்கிற்கும், பிரதமர் அலுவலகத்தின் ட்விற்றர் கணக்கிற்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.’’ எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், இது தொடர்பாக பிரதமர் அலுவலகமோ அல்லது அவரது தரப்பிலோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம் முதல் உலகின் பல்வேறு பிரபலங்களின் ட்விற்றர் கணக்குகள் ஹெக் செய்யப்பட்டன. இதில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரபல கோடீஸ்வரர் எலன் மாஸ்க் உள்ளிட்டோர் அடங்குவர். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரோந்திர மோடியின் தனிப்பட்ட இணையத்தளத்திற்கான ட்விற்றர் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.