நாகராசா அலெக்ஸ்

நாகராசா அலெக்ஸ்

வட்டுக்கோட்டை இளைஞன் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட வழக்கு – யாழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

யாழ்., வட்டுக்கோட்டை இளைஞன் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண விசாரணை தொடர்பான கட்டளை எதிர்வரும் ஜனவரி 2ம் திகதி வழங்கப்படவுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன், பொலிஸாரின் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய பொலிஸார் மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட சிலர் சாட்சியம் வழங்கினர்.

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த முன்னர் உயிரிழந்தவர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெல்லிப்பழை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

மேலும், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவில் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த நபரை அனுமதித்தமை தொடர்பான மருத்துவ அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு அவர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

மரண விசாரணை தொடர்பான கட்டளைக்காக எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கில் உயிரிழந்த இளைஞன் சார்பில் பெருமளவான சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

யாழில் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் மக்கள்  நீதி கேட்டு போராட்டம் !

யாழ் – வட்டுக்கோட்டைப்  பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் அப்பகுதி மக்கள்  நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த  இளைஞனின் இறுதி கிரியைகள் சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகன கிரியைக்காக மயானத்திற்கு எடுத்து செல்லும் போது  அப்பகுதி மக்களால் குறித்த கவனயீர்ப்புப்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ” அலெக்ஸ் இறந்து 48 மணி நேரம் கடந்தும் இது வரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸ் விசாரணைக்குழு 48 மணி நேரத்திற்கு மேலாக  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் பொலிசாரின் விசாரணை மீது எமக்கு திருப்தி ஏற்படவில்லை. மாறாக அவர்கள் மீது சந்தேகம் தான் வலுத்து வருகின்றது” எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.