ஒஸ்பென் மெடிக்கல் மற்றும் அவுஸ்ரேலியாவில் நடந்ததாக தெரிவிக்கப்படும் சந்தேகத்திற்குரிய பணமோசடி குறித்து தமது குடும்பத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் நிர்மாணப்பணியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிப் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை சர்வதேச ஊடகமான ஏபிசி நியூஸ் செய்தி நிறுவனமானது அம்பலப்படுத்தியுள்ளது.
குறித்த வைத்தியசாலைக்கு உபகரணங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்கும் 18.8 மில்லியன் டொலர் திட்டத்திற்கு ஒஸ்பென் மெடிக்கல் நிறுவனம் அவுஸ்ரேலிய அரசாங்கத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளது.
இலங்கையில் ஒஸ்பென் மெடிக்கலின் முதல் 2.1 மில்லியன் டொலர் பரிவர்த்தனையானது பிரித்தானிய விர்ஜின் தீவுகளின் பதிவு செய்யப்பட்ட நிறுவனமான சேபர் விஷன் ஹோல்டிங்ஸ் இடையில் இடம்பெற்றுள்ளது. இலங்கையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் நிமல் பெரேராவுக்குச் சொந்தமான இந்த நிறுவனம் இலங்கையில் உள்ள ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளதாக ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்பு வைத்திருந்த நிமல் பெரேரா என்ற இடைத்தரகருக்கு இந்த நிறுவனம் இரகசியமாக சொந்தமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டில், பண தூய்தாக்கல் குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்சவை கைது செய்ய அது வழிவகுத்ததாகவும் ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் குறித்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான பரிவர்த்தனையில் எவ்வித சம்பந்தமும் கிடையாது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் முன்வைத்த இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இன்னும் தான் நீதிமன்றத்திற்கு செல்வதாகவும் இதில் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.