நீதிபதி சரவணராஜா

நீதிபதி சரவணராஜா

“முல்லைத்தீவு நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர். அவருடைய பதவி விலகலுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.” – சரத்வீரசேகர

முல்லைத்தீவு நீதிபதிக்கு நான் அச்சுறுத்தல் விடுத்திருந்தால், என்னை அந்த நேரத்திலேயே கைது செய்திருக்கலாம் என நாடாளுமன் உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

”2 ஆயிரம் வருடங்கள் பழைமையான எமது பௌத்த புராதானச் சின்னத்தில், பொங்கல் வைத்து வழிபட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது. அப்போது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன், முல்லைத்தீவு நீதிபதியுடன் பேசிய காரணத்தினால், நானும் எனது கருத்துக்களை முன்வைக்க நீதிபதியிடம் அனுமதி கேட்டிருந்தேன். எனினும், எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.நான் முன்னாள் இராணுவ அதிகாரி என்பதாலும், எனக்கு சட்டங்கள் தெரியும் என்பதாலும், நீதிபதியொருவர் கருத்து வெளியிட மறுத்தமையால், நானும் அமைதியாகிவிட்டேன்.

நாடாளுமன்றிலும், குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த அனுமதியளித்தமை தவறு என்றும் இது இந்து- பௌத்த மக்களிடையே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றுதான் கூறியிருந்தேன். இதனை நான் இன்றும் கூறுவேன். இது எப்படி அச்சுறுத்தலாகும்?

 

அந்த சம்பவத்திற்குப் பின்னர் நான் குறித்த நீதிபதியை சந்திக்கக்கூட இல்லை. முல்லைத்தீவு, நீதிபதிக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் 5 வழக்குகள் உள்ளன.இந்த வழக்குகள் தொடர்பாக நீதிச்சேவை ஆணைக்குழு ஊடாக தனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சட்டமா அதிபரிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில், அவரது தீர்ப்பை மாற்றுமாறு ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது தெரிவித்துள்ளது.

 

அப்படி அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்தால், அவர் இதுதொடர்பாக பிடியாணையொன்ற பிறப்பித்திருக்கவும் முடியும்.

அவர் வெளிநாடு செல்வதற்கு ஒருவாரத்திற்கு முன்பாக, அவரது வாகனத்தை விற்பனை செய்து, வெளிநாட்டுத் தூதுவர்கள் இருவரை அவர் சந்தித்துள்ளார். பொலிஸ் பாதுகாப்பும் அவருக்கு குறைக்கப்படவில்லை என பொலிஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவரது மனைவியோ, இவரால் தனக்கு தொடர்ந்தும் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுவதாக நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றையே அளித்துள்ளார். முல்லைத்தீவு பொலிஸிலும், இதுதொடர்பாக அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளார். இதில், குறித்த நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் மனநல வைத்தியர்கள், இவருக்கு வைத்தியம் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நீதிபதி கூறுவாராயின், யாரால் என்பதை அவர் வெளிப்படையாகக் கூறவேண்டும். ஜனாதிபதி, பொலிஸ் அமைச்சர் உள்ளிட்டோர், இந்த விடயம் தொடர்பாக விசாரணை செய்ய குழுக்களை நியமித்துள்ளனர்.

 

இந்தக் குழுக்கள் உடனடியாக இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை செய்து, உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று நாமும் கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் விவகாரம் – நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விசாரணைக் குழு நியமனம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம் நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விசாரணைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலுக்கான காரணங்கள் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் தொடர்பாக ஆராய்ந்து நீதிமன்ற செயல்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளை களைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதிச்சேவை ஆணைக்குழு, பிரதம நீதியரசரிடமும் நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்த பாெறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம்.” – நாடாளுமன்றில் நீதி அமைச்சர் !

“முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்த பாெறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம். நீதிவான் தொடர்பான பிரச்சினையை விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்துகோ ஜனாதிபதிக்கோ எந்த அதிகாரமும் இல்லை. அது தொடர்பான விசாரணை நடத்தும் அதிகாரம் இருப்பது  நீதிச் சேவை ஆணைக்குழுவுக்காகும்.“ என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் பாரியவிடயம். அதேபோன்று நீதிமன்றத்தின் சுயாதீனம் தொடர்பான பயங்கரவிடயமாகும். நீதிபதி வழங்கிய உத்தரவுகள் காரணமாக அவருக்கு மரண அச்சுறுத்தல் உட்பட பல்வேறு அழுத்தங்கள் தொடர்பாக மிகவும் பயங்கரமான அறிவிப்போன்றை அவர் விடுத்திருக்கிறார்.

அதனால் அவரின் அறிவிப்பு தொடர்பாக சுயாதீன விசாரணை மேற்கொண்டு  இதன் பின்னணியில் இருக்கும் மறைமுக சக்திகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

அமைச்சர் தாெடர்ந்து பதிலளிக்கையில்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி வெளிநாடொன்றுக்கு சென்ற பின்னரே அவரிடமிருந்து நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்று கிடைக்கிறது. அதில் அவருக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக தான் பதவி விலகுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மன அழுத்தம், அச்சுறுத்தல் இருக்குமானால் அவர் வெளிநாடொன்றுக்கு சென்று கடிதம் அனுப்பவேண்டியதில்லை.

அத்துடன் நீதிபதி ஒருவருக்கு அச்சுறுத்தல் இருக்குமானால் அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்தவர் யாராக இருந்தாலும் அவரை நீதிமன்றத்துக்கு அழைப்பு விடுக்கலாம், பிடியாணை கட்டளை விடுக்கும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது. அதேபோன்று குறித்த நபருக்கு எதிராக வழக்கு தொடுக்கும் அதிகாரம் நீதிபதிக்கு இருக்கிறது. அந்த அதிகாரத்தை அவர் பயன்படுத்தாவிட்டால் அதன் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மேலும் நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்த பாெறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம். ஏனெனில் நீதிவான் நீதிபதிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரம், நியமன அதிகாரம் என அனைத்தும் நிர்வகிக்கப்படுவது நீதிச்சேவை ஆணைக்குழுவினாலாகும். நீதிச்சேவை ஆணைக்குழு அரசியலமைப்பின் பிரகாரம் அமைக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவாகும்.

அதனால் முல்லைத்தீவு நீதிவான் தொடர்பான பிரச்சினையை விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்துகோ ஜனாதிபதிக்கோ எந்த அதிகாரமும் இல்லை. அந்த அதிகாரம் இருப்பது நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு மாத்திரமாகும்.

எனவே யாருக்காவது இது தொடர்பில் பிரச்சினை இருக்குமானால் அவர்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்து, அது தொடர்பில் பதில் ஒள்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பிரதம நீதியரசர் தலைமையிலான அந்த ஆணைக்குழுவுக்கு உத்தரவிடவோ அதில் தலையிடவோ அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆணைக்குழு தேவையெனில் அது தொடர்பில் விசாரணை நடத்தி பதில் ஒன்றை வழங்கும் என்றார்.

புகலிடக்கோரிக்கைக்காகவே பதவியில் இருந்து விலகியுள்ளார் நீதிபதி சரவணராஜா – சரத்வீரசேகர

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பாரதூரமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் எனது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி அவரை நான் அச்சுறுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

புகலிடக் கோரிக்கைக்காக நீதிபதி இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரா..? என்பது சந்தேகமளிப்பதாகவும் நீதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கலாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நீதிபதி சரவணராஜா பதவி விலகிய விவகாரம் – ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள உத்தரவு !

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினருக்கு அல்லது நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு நீதவான் ஒருபோதும் அறிவிக்காத காரணத்தினால் ஜனாதபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

எனவே, இந்த சம்பவத்திற்கான மூல காரணத்தை உடனடியாக ஆராயுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருடன் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன், இதற்கு முன்னர் மரண அச்சுறுத்தல்கள் தொடர்பில் நீதவான் முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

கடந்த 24ஆம் திகதி வெளிநாடு சென்ற நீதவான், தனது பதவி விலகல் கடிதத்தை செப்டெம்பர் 23ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார் என ஜனாதிபதி செயலக தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு அனுசரணையாக, நீதிபதி சரவணராஜா வளைந்து கொடுக்க மறுத்ததினால்தான் தான் அவருக்கு இந்த கதி !

குருந்தூர் மலை ஆலய விவகாரம் தொடர்பான வழக்கினை கையாண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி, தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியதற்கான முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையே சார்ந்தது என்பதை தயக்கம் எதுவும் இன்றி கூறிவைக்க விரும்புவதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந.ஶ்ரீகாந்தா தெரிவித்தார்.

 

இது தொடர்பில் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில்,

நாடாளுமன்றத்துக்கு உள்ளே எழுப்பப்பட்ட இனவெறிக் கூச்சல்களுக்கு அப்பால், அதிகாரத் தரப்பினால், நேரடியாகவும் மறைமுகமாகவும் நீதிபதி மீது பிரயோகிக்கப்பட்ட உளவியல் ரீதியான அழுத்தங்களே, அவரை இந்த முடிவுக்கு தள்ளியிருக்கின்றன என்பது தெட்டத் தெளிவானது.

பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு அனுசரணையாக, நீதிபதி சரவணராஜா வளைந்து கொடுக்க மறுத்திருந்த காரணத்தினால் தான், அவருக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்கின்றது.

தமது கடமையை நேர்மையுடன் செய்ய விரும்பும் சகல நீதிபதிகளுக்கும் இது ஓர் சிவப்பு எச்சரிக்கை என்பதை, தமிழ், முஸ்லீம் மக்கள் மட்டுமல்லாமல், சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வேண்டிய நிலைமைக்குள் முழு நாடும் இப்போது தள்ளப்பட்டிருக்கின்றது.

 

நீண்ட பல வருடங்களாக நிலவி வரும் அரச பயங்கரவாதம் என்பது, இப்பொழுது புதிய களம் ஒன்றை திறந்திருக்கின்ற நிலைமையில், சட்டத்தின் ஆட்சி தொடர்பில் எஞ்சியிருந்த நம்பிக்கைகளும் சிதறத் தொடங்கியுள்ளன.

எமது மக்களைப் பொறுத்தமட்டில், குருந்தூர் மலை விவகாரத்தில் சிலுவையில் அறையப்பட்டிருக்கும் நேர்மையான நீதிபதிக்கு ஆதரவாகவும், அதற்கும் மேலாக, நீதித் துறையின் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் பாரிய சவாலுக்கு எதிராகவும், எமது ஒன்றுபட்ட எதிர்ப்பை நாம் வெளிப்படுத்தியே ஆக வேண்டும். உலக அரங்கின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அது நிச்சயமாக வெளிப்படுத்தப்படும்.

என்று குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.