பாலியல் இலஞ்சத்தையும் ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் ஊடாக குற்றமாகவே தாம் கருதுவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிடடுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாம் மீண்டும் இந்த சட்டமூலத்தை கொண்டுவந்துள்ளோம். இதற்காக கடந்த ஒருவருடமாக பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களையும் நாம் நடத்தினோம்.
சர்வதேச நாணய நிதியமும் சில யோசனைகளை இதற்காக முன்வைத்துள்ளன. உயர்நீதிமன்றிலும் பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எவரேனும், சட்டவிரோதமாக சொத்து சேர்த்து இருந்தால் இந்தச் சட்டத்தின் ஊடாக அதனை தாராளமாக கைப்பற்றலாம்.
20 வருடங்களுக்குள் இடம்பெற்ற குற்றங்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுக்கும் வழிவகை தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தில் உள்ளது. அதனை இந்த சட்டமூலத்திலும் கொண்டுவந்துள்ளோம். ஆனால், புதிதாக ஒரு சட்டத்தை இயற்றி, அந்த சட்டத்திற்கு எதிராக கடந்த காலங்களில் ஒரு செயற்பாடு இடம்பெற்றிருந்தால், அதற்கெதிராக எம்மால் சட்டநடவடிக்கையை இதன் ஊடாக மேற்கொள்ள முடியாது.
உதாரணமாக பாலியல் இலஞ்சத்தை, இந்தச் சட்டமூலத்தின் ஊடாக குற்றமாக நாம் கருதுகிறோம். எனினும், கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் இலஞ்சம் தொடர்பாக, தற்போது நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனெனில், அந்த குற்றம் அன்று இடம்பெற்றபோது அது குற்றமாக கருதப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.