சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதமான நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் நீதி அமைச்சினாலேயே முன்னெடுக்கப்பட்டன. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அவசியமான சட்டங்கள், தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம், ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சட்டங்களை நாமே தயாரித்தோம் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயற்பாடுகளை மக்களுக்கு பயனுள்ள வகையில் மேலும் வலுப்படுத்துவது குறித்த நீதியமைச்சின் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வொன்று நேற்று சனிக்கிழமை (13) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே நீதியமைச்சர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாம் அனைவரும் ஒவ்வொரு மட்டத்திலிருந்து நாட்டு மக்களுக்கு சேவையாற்றி வருகிறோம். நாம் வகிக்கும் பதவியும், எமக்குரிய பொறுப்புக்களும் வேறுபடலாம். இருப்பினும், எம் அனைவரினதும் இலக்கு ஒன்றுதான்.
நாடு என்ற ரீதியில் நாம் அபிவிருத்தி அடைய வேண்டுமானால், முதலில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும். சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படாததன் விளைவாக தங்கச் சுரங்கங்களைக் கொண்ட பல ஆபிரிக்க நாடுகளால் இன்னமும் அபிவிருத்தி அடைய முடியவில்லை. தற்போது நாமும் அந்நாடுகளை ஒத்த நிலையிலேயே இருக்கின்றோம்.
எமது நாட்டில் இல்லாத வளம் என்று எதனையும் கூறமுடியாது. எம்மிடம் உள்ள வளங்கள் இந்தியாவில் கூட இல்லை. இருப்பினும், நாம் இன்னமும் உரிய இடத்தை அடையவில்லை. ஜப்பான், கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகள் பொருளாதார ரீதியில் எம்மை விடவும் பின்னடைவான நிலையிலேயே இருந்தன. அந்நாடுகளின் தலா வருமானம் எமது நாட்டை விட குறைவான மட்டத்திலேயே காணப்பட்டன.
கல்வியறிவு வீதம், சிசு மரண வீதம், கர்ப்பிணித்தாய்மாரின் மரணவீதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குமிடத்து எமது நாடு முன்னேற்றகரமான மட்டத்தில் உள்ளது.
எது எவ்வாறிருப்பினும், பொருளாதார நெருக்கடியின் விளைவாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி பெறவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுவதென்பது ஏனைய நாடுகளுக்கு இலகுவானதொரு விடயமாக இருக்கவில்லை. இருப்பினும், இலங்கையை பொறுத்தமட்டில் நிதியமைச்சும் திறைசேறியும் மிகச் சரியாக செயற்பட்டு, இந்தக் கடனுதவிக்கான இணக்கப்பாட்டை எட்டியிருக்கின்றன என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. ஆனால், இவ்விடயத்தில் நீதியமைச்சு சரியாக செயற்பட்டிருக்காவிட்டால் இந்த இணக்கப்பாட்டை எட்டுவதில் மேலும் ஒரு வருட காலதாமதம் ஏற்பட்டிருக்கும் என்ற விடயம் மக்களுக்குத் தெரியாது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதமான நிபந்தனைகளை பூர்த்திசெய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் நீதியமைச்சினாலேயே முன்னெடுக்கப்பட்டன.
அதேபோன்று எமது நாடு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழந்திருந்த காலப்பகுதியில், அதனை மீளப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான நிபந்தனைகளில் நூற்றுக்கு அறுபது சதவீதமான நிபந்தனைகள் எமது அமைச்சினாலேயே நிறைவேற்றப்பட்டன.
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அவசியமான சட்டங்கள், தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம், ஊழல் மோசடிகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சட்டங்கள் எமது அமைச்சினாலேயே தயாரிக்கப்பட்டன என்று சுட்டிக்காட்டினார்.