நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

யுக்திய நடவடிக்கைகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் – நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

சிறைச்சாலைகள் நிரம்பி வழிவது தொடர்பில் உரையாற்றிய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, ​​அதற்கு தற்போது இடம்பெற்று வரும் யுக்திய நடவடிக்கையே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வதில் இந்த நடவடிக்கை வெற்றியடைந்தாலும், கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் இது பங்களித்துள்ளது என நிதியமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த அமைச்சர், சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், வழக்குகளில் தேவையற்ற தாமதங்களைத் தடுக்கவும் சட்ட நடவடிக்கைகள் இயற்றப்பட்டுள்ளதாக மேலும் வலியுறுத்தியுள்ளார்.

பிற்போடப்பட்டது பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்!

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு அமைய, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பெருமளவில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதி அமைச்சர், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்பவே அரசாங்கம் பாராளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்குவதாகவும் பலரதும் கருத்துகளைப் பெற்று, தேவையான திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னரே அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சர்வதேச தரத்திற்கு முரணாக உள்ளது – அமெரிக்கா

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பான விரிவான, பொது மற்றும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பில் இதனைத் தெரிவித்ததாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தரத்திற்கு, புறம்பாக முன்மொழியப்பட்ட, சட்டமூலத்தின் சில விடயதானங்கள் தொடர்பில், கவலை வெளியிட்டதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக, பொது மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரண்டிலும் விரிவான விவாதங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற தங்களது ‘வலுவான விருப்பத்தை’ பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிவில் சமூகம், கல்வியாளர்கள் மற்றும் சட்டம் இயற்றுபவர்கள் உட்பட அனைவரது கருத்துச் சுதந்திரம் அல்லது ஒன்றுகூடலை கட்டுப்படுத்தாமல், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சிறந்த கருவியாக, குறித்த சட்டமூலம் செயல்படுவதை உறுதிப்படுத்துவது முக்கியமானதாகும் எனவும் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் பரீட்சைக்கு தோற்ற நடவடிக்கை!

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் (சிங்கள/தமிழ்) பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பில் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டக்கல்லூரியின் அபிவிருத்திக்காக தாம் செயல்பட்டு வருவதாகவும், சட்டக் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்பும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை – நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் போதை பொருள் களஞ்சியத்தில், 3 ஆயிரம் கிலோகிராம் எடையுடைய போதை பொருட்கள் உள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்பும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

மேலும், அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் காணப்படுகின்ற போதை பொருளை எரித்து அழிப்பதற்கு சட்ட ரீதியாக புதிய முறையொன்று உருவாக்கப்படும் என குறிப்பிட்டார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது – நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தலையிட மாட்டோம் எனவும் அவர்களின் நிகழ்ச்சி நிரலை திருத்த முயற்சிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திரமான அமைப்பான தேசிய தேர்தல் ஆணையம் தனது செயல்பாடுகளை தொடர வேண்டும் என்றும், அரசின் தலையீடு இருக்காது என்றும் அவர் கூறினார்.

‘எதிர்க்கட்சிகளின் உதவியுடன், தேர்தல்கள், தேர்தல் திகதி மற்றும் தேர்தல் செயல்முறைகளை விவரிக்கும் அரசியலமைப்பின் 21 வது திருத்தத்தை நாங்கள் நிறைவேற்றினோம். இதன் மூலம், இந்த விவகாரங்களில் சுதந்திரமான தேர்தல்கள் ஆணைக்குழு செயல்படும்’ என கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் திருத்துவதற்கு அரசாங்கத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை எனவும் அமைச்சர் கூறினார்.

சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையினால் பல நாடுகள் இலங்கையை தனிமைப்படுத்தியுள்ளன – நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையினால் பல நாடுகள் இலங்கையை தனிமைப்படுத்தியுள்ளன விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே சர்வதேச நாணய நித்தியத்திடம் இருந்து கடனை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனறும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் உறவுகளை தொடர்ந்தும் பேணுவதற்கு விரும்பவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் குறித்து தாம் விமர்சித்தமையால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2 மாதங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைத்தாலும் அதனை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

ஆகவே சர்வதேச முதலீட்டாளர்களை வரவழைக்க இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.