நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டியத் தேவை இல்லை.” – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டியத் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன்று சபையில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தீர்மானத்தை தான் நாம் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளோம்.

ஆனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்ய நாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுகிறது.

இது முற்றிலும் பொய்யான ஒரு விடயமாகும். எமக்கு அப்படி செய்ய வேண்டிய தேவையும் கிடையாது.

நாம் செய்ய முடியுமான செயற்பாடுகளை மட்டும்தான் செய்வோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

பேச்சு சுதந்திரம் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது என்பதற்காகவே நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்கிறார் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச !

சமூக ஊடகங்களை முடக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை. அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது என்பதற்காகவே நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற நிகழ்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை முழுமையாக ஆராயாமல் ஒரு தரப்பினர் அதற்கு எதிரான கோசங்களை எழுப்ப ஆரம்பித்துள்ளார்கள்.

சமூக ஊடகங்களை முடக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு கிடையாது.அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்தை அனைவரும் முறையாக பயன்படுத்துகிறார்களா என்பதை ஆராய வேண்டும்.பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளது என்பதற்காக சமூக வலைத்தளங்களில் ஒருவரின் கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எவரும் செயற்பட முடியாது.

பிறருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த கூடாது என்பதற்காகவே நிகழ்நிலை காப்பு சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்துவேன். சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நாட்டு மக்களும் உள்ளார்கள்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் தற்போது விமர்சிக்கப்படுகிறது. சகல தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் சட்டமூலத்தை தயாரிக்க முடியாது. ஆகவே, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் சகல தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார் என்றார்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆகியவற்றை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

சனல் 4 புலம்பெயர்ந்த அமைப்புகளிற்கு ஆதரவானது – நீதியமைச்சர் விஜயதாச விசனம்!

சனல் 4 புலம்பெயர்ந்த அமைப்புகளிற்கு ஆதரவானது என நீதியமைச்சர் விஜயதாச தெரிவித்துள்ளார்.

 

2019 உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சனல் 4 இன் ஆவணப்படம் குறித்து நம்பிக்கையின்மை வெளியிட்டுள்ள அமைச்சர்,  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்விற்கு முன்னாள் புலம்பெயர்ந்த அமைப்புகள் இலங்கை குறித்து சர்ச்சைக்குரிய விடயங்களை வெளியிடுவது வழமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டம் – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

தேசிய பாதுகாப்பு சட்டத்தை அடுத்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதி அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விஜயதாஸ ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்து குறித்த தேசிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவரவுள்ளதாக கூறினார்.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் காலம் காலமாக காணப்படும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காது என்றும் தெரிவித்தார்.

மேலும் உண்மையான நல்லிணக்கத்தை ஸ்தாபிக்கும் வகையில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை போன்று ஒரு விசேட ஆணைக்குழுவை உருவாக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக இலங்கைக்கான தென்கொரிய உயர்ஸ்தானிகர் மற்றும் ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“இனப்பிரச்சினை தீர்க்கப்படும்போது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள்.”- நீதி அமைச்சர்

இனப்பிரச்சினை தீர்க்கப்படும்போது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பான செயல்முறை ஒழுங்கு நீதியமைச்சிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போதும், காணாமல் போனோர் அலுவலகம் நீதி அமைச்சின் கீழேயே பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள அனைத்து கோப்புகளையும் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதிக்குள் முடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். காணாமல் போனவர்களுக்கான இழப்பீடாக ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

சொத்து இழப்பீடு குறித்தும் தற்போது பரிசீலித்து வருகிறோம்.

யுத்தம் காரணமாக பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளை இழந்த சுமார் 11 ஆயிரம் பேர் வடக்கில் இருந்தனர். அவற்றை மீண்டும் பெற்றுக் கொடுத்துள்ளோம்.

அத்துடன், நீதியமைச்சின் கீழ் வட மாகாணத்தில் பல இணக்கப்பாட்டு மத்தியஸ்த நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தனர். இப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் போது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தற்போதும் செயற்பட்டு வருகிறது.

இவ்விடயத்தில் தங்களுக்கு தென்னாபிரிக்க அரசாங்கம் ஆதரவளித்து வருகின்றது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றில் இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் பத்து எம்.பி.க்கள் – பறிபோகுமா பதவி .?

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, 22வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வந்தால் தமது எம்பி பதவிகளைத் தக்கவைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் கூற்றுப்படி, தற்போதைய நாடாளுமன்றில் இரட்டைக் குடியுரிமை கொண்ட சுமார் பத்து எம்.பி.க்கள் உள்ளனர்.

ஒரு சிலரைத் தவிர, அந்த எம்.பி.க்கள் யார் என்பது தனக்குத் தெரியாது என்று அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூறினார்.

சிறிய திருத்தங்களுடன் இந்த திருத்தத்தை அங்கீகரித்தமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், நாட்டின் ஜனநாயகத்திற்கு இது ஒரு முக்கியமான தருணமாக அமையும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு தருவார்.”- ஜெனீவா சென்றுள்ள நீதி அமைச்சர் விஜயதாஸ !

“ரணில் அரசாங்கம் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை முன்வைத்தே தீரும்.” என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜெனிவா சென்றுள்ள இலங்கை அரசாங்க குழுவிலுள்ள முக்கியஸ்தரான நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை மீண்டெழ புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளும், ஒத்துழைப்புக்களும் கட்டாயம் தேவை. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணாமல் புலம்பெயர் தமிழ் மக்களுடன் இலங்கை அரசாங்கம் நெருக்கமாகச் செயற்பட முடியாது என்று தெரிவிக்கப்படும் கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஓர் ஒழுங்குமுறையில் தீர்வுகளைக் காணும் பணியை அரசாங்கம் முன்னெடுக்கும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை முன்வைத்தே தீரும்.

மேலும் சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நல்ல தீர்வு முன்வைக்கப்படும். அந்தக் கைதிகளில் ஒரு தொகுதியினர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர். அத்துடன் காணி விடயம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கும் தீர்வுகள் முன்வைக்கப்படும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி நடத்திய பேச்சின் போது இதற்கான உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.