நூல்கள்

நூல்கள்

வடக்கு – கிழக்கு எதிர்காலக் கல்விக்கு 22 மில்லியன் ரூபாய் பெறுமதியான 50000 வரையான நூல்கள் – லிற்றில் எய்ட்!

மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கல்வியில் வீழ்ச்சியடைந்த தமிழ் சமூகத்தை மீண்டும் மேன்நிலைப்படுத்த; லிற்றில் எய்ட் பல்வேறு கல்வி நடவடிக்கைகளிலும் மாணவர்களின் ஆளுமை விருத்தியிலும் மிகக் கவனம் எடுத்து வருகின்றது. அதன் ஒரு முக்கிய நகர்வாக இன்று அதிகாலை 11,000 கிலோ கிராம் நிறை கொண்ட 50,000 வரையான சிறுவர்களுக்கான ஆங்கில நூல்கள் லிற்றில் எய்ட் நிறுவனத்தைச் சென்றடைந்தது. இந்நூல்களின் இலங்கைச் சந்தைப் பெறுமதி 22 மில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடபடுகின்றது. ஸ்கொட்லாந்தில் உள்ள புக் அப்ரோட் என்ற சர்வதேச நிறுவனத்துடன் கடந்த பத்து ஆண்டுகளாகச் செயற்பட்டு வரும் லிற்றில் எயட், காலத்திற்குக் காலம் தமிழ் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் நூலகங்களுக்கு சிறுவர்களுக்கானபல்வேறு துறைசார்ந்த ஆங்கில நூல்களை அனுப்பி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக இன்று கிளிநொச்சியயை வந்தடைந்த நூல்கள் தமிழ் பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட பாடசாலை மற்றும் நூலகங்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.

எம் வி ரக்னா என்ற கப்பலில் டிசம்பர் 22இல் இலங்கை வந்தடைந்த நூல்கள் இன்று கிளிநொச்சியில் உள்ள லிற்றில் எய்ட் நிறுவனத்தில் இறக்கப்பட்டது (படங்கள்). 22 ‘பலட்களில்’ கொண்டுவரப்பட்ட நூல்கள் தறகாலிகமாக லிற்றில் எய்ட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் துளசிகன் மேற்பார்வையில் இறக்கப்பட்டது, வடக்கில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்துவரும் சிறகுகள் அமைப்பினர் லிற்றில் எய்ட் நிறுவனத்தோடு கரம்கோர்த்து இந்தப் பணிகளில் ஈடுபட்டனர். நடுநிசியில் மழையயையும் பொருட்படுத்தாமல் நூல்கள் பத்திரமாக லிற்றில் எய்ட் நிறுவன மண்டபத்தில் இறக்கப்பட்டது.

இப்பணிகளில் லிற்றில் எய்ட் அறங்காவல் சபை உறுப்பினர்கள் குகன், தயாளன் ஆகியோரும் ஈடுபட்டு இருந்தனர். தமிழ் பகுதிகளில் நூல்களும் நூலகங்களும் நூலகவியலாளர் என் செல்வராஜாவின் ஈடுபாடு இல்லாமல் இல்லை. 2012இல் நூலகவியலாளர் என் செல்வராஜா லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் ஆகியோர் இஸ்கொட்லாந்திற்கு நேரடியாகச் சென்று அவ்வமைப்பினருடன் இறுக்கமான உறவை ஏற்படுத்தி இருந்தோம். அதன் பயனாகவே இவை சாத்தியமாகி வருகின்றது. இந்நூல்களை சேகரித்து கொழும்புத்துறைமுகம் வரை அனுப்பி வைப்பதற்கு ஏற்பட்ட பத்து இலட்சம் ரூபாய்கள் வரையான செலவை புக் அப்ரோட்டே பொறுப்பேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு சுங்கத் திணைக்களத்தில் ‘கிளியரன்ஸ்’ அனுமதி பெற்று லிற்றில் எய்ட் நிறுவனத்திற்கு இவ்வளவு தொகையான நூல்களைக் கொண்டு சேர்ப்பது லிற்றில் எய்ட் பொறுப்பாக இருந்தது, அதற்கான நிதியயை சேகரிப்பதில் லிற்றில் எய்ட் தலைவர் என் கதிர் செயலாளர் என் சுகேந்திரன் ஆகியோருடைய உழைப்பு குறிப்பிடத்தக்கது.

நல்ல நூல்கள், நல்ல நண்பர்கள்!
வாசிப்பதால், மனிதன் பூரணமடைகின்றான்!!
ஆகவே வாசிப்பை நேசிப்போம்!!!

லிற்றில் எய்ட்.