நேட்டோ

நேட்டோ

நேட்டோ அமைப்பில் 31 ஆவது நாடாக இணைகிறது பின்லாந்து !

நேட்டோ அமைப்பில் 31 ஆவது நாடாக பின்லாந்து இணைய இருக்கிறது என நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் அறிவித்து இருக்கிறார். உலகின் மிகப்பெரிய இராணுவ கூட்டமைப்பாக நேட்டோ அமைப்பு இருக்கிறது. வரும் மாதங்களில் பின்லாந்தை தொடர்ந்து ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோவில் சேரத்துடிக்கும் பின்லாந்து; வரவேற்கும் நேட்டோ... எச்சரிக்கும்  ரஷ்யா! | Russia warning Finland about its idea of joining NATO - Vikatan

“இது ஒரு வரலாற்றுப்பூர்வமான வாரம். நாளை முதல், பின்லாந்து கூட்டமைப்பின் முழு நேர உறுப்பினர் ஆகிறது. நேட்டோ தலைமையகத்தில் முதல் முறையாக நாளை நாங்கள் பின்லாந்து கொடியை ஏற்ற இருக்கிறோம். பின்லாந்து பாதுகாப்பு, ஆர்டிக் பாதுகாப்பு மற்றும் நேட்டோ அமைப்பு முழுவதிற்கும் நல்ல நாளாக இருக்கும்,” என்று ஸ்டால்டன்பர்க் தெரிவித்துள்ளார்.

பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய ஆட்சேபனை இல்லை என கடைசி நாடாக துருக்கி நாளை கையெழுத்திட இருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பான ஆவணங்களை அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோனி ப்ளிங்கனிடம் துருக்கி ஒப்படைக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் ஃபின்லாந்து அதிபர் சௌலி நினிஸ்டோ மற்றும் பாதுகாப்பு துறை மந்திரி அண்டி கைகொனென் மற்றும் வெளியுறவு துறை மந்திரி பெக்கா ஹாவிஸ்டோ ஆகியோர் கலந்து கொள்கின்றனர். “இது எங்களுக்கு பெருமை மிக்க தருணம் ஆகும். சந்திப்பின் போது, ரஷ்யாவின் தொடர் சட்டவிரோத நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டு வரும் உக்ரைனுக்கு அதிக ஆதரவு அளிக்க நேட்டோவை வலியுறுத்துவதே பின்லாந்துக்கு மிக முக்கிய குறிக்கோள் ஆக இருக்கும். ஐரோப்பா மற்றும் அட்லாண்டிக் பகுதி முழுக்க பாதுகாப்பை பலப்படுத்தவே நாங்கள் நினைக்கிறோம்,” என்று ஹாவிஸ்டோ தெரிவித்துள்ளார்.

குர் ஆனை தீ வைத்து எரித்த ஸ்வீடன் அரசியல்வாதியை தீ வைத்து எரிப்பேன் – துருக்கி எழுத்தாளர் கொலை மிரட்டல் !

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து மாதக்கணக்கில் போர் நீடித்து வருகிறது. இந்த போரையடுத்து ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ இராணுவ அமைப்பில் இணைய விண்ணப்பித்துள்ளன. அமெரிக்காவை தலைமையாக கொண்ட நேட்டோ ராணுவ அமைப்பில் துருக்கி உறுப்பு நாடாக உள்ளது.

 

உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொண்டால் மட்டுமே புதிய உறுப்பு நாடுகள் நேட்டோவில் சேர முடியும். ஆனால், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைய துருக்கி  முட்டுக்கட்டையாக உள்ளது. “நாங்கள் பயங்கரவாத இயக்கமாக கருத்தும் குர்திஷ்தான் அமைப்பின் ஆதரவாளர்களுக்கு ஸ்வீடன் ஆதரவு கொடுப்பதாக துருக்கி குற்றஞ்சாட்டிவருகிறது. மேலும், தங்கள் நாட்டில் உள்ள குர்திஷ் அமைப்பு ஆதரவாளர்கள் சிலரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஸ்வீடனிடம் துருக்கி வலியுறுத்தி வருகிறது.

இதன் காரணமாக ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைவதை துருக்கி தடுத்து வருகிறது. இதனால், துருக்கி – ஸ்வீடன் இடையே தூதரக ரீதியில் உரசல் நீடித்து வருகிறது.

இதனிடையே, நேட்டோவில் தங்கள் நாடு இணைய விடாமல் தடுக்கும் துருக்கிக்கு எதிராக ஸ்வீடனில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்வீடனின் ஸ்டேம் குர்ஸ் கட்சி தலைவர் ரஸ்முஸ் பலுடன் தலைமையில் துருக்கிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்லாமில் உள்ள துருக்கி தூதரகம் முன் ரஸ்முஸ் பலுடன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது துருக்கி மற்றும் அந்நாட்டின் அதிபர் எர்டோகனுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது, ஸ்வீடனில் கருத்து சுதந்திரத்தை ஒடுக்க துருக்கி அதிபர் எர்டோகன் முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவும் அவர் கோஷங்களை எழுப்பினார். அப்போது, இஸ்லாமிய மதத்தின் புனித நூலான குர் ஆனை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இஸ்லாமிய மதத்தின் புனித நூலான குர் ஆனை தீ வைத்து எரித்த ஸ்வீடன் அரசியல்வாதி ரஸ்முஸ் பலுடனை கைது செய்ய வேண்டும் என்று துருக்கி தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்வீடனுக்கு துருக்கி தெரிவித்துள்ளது. மேலும், நேட்டோ அமைப்பு இணைப்பு தொடர்பாக ஸ்வீடன் அதிகாரிகள் துருக்கி வரவிருந்த நிலையில் அந்த பயணத்தை துருக்கி ரத்து செய்துள்ளது.

Turkish author issues death threats on Twitter, the micro-blogging platform  takes no actionஇந்நிலையில், இஸ்லாமிய மத புனித புத்தகமான குர் ஆனை எரித்த ஸ்வீடன் அரசியல்வாதி ரஸ்முஸ் பலுடனுக்கு துருக்கி எழுத்தாளர் ரம்ஜான் இசொல் கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக துருக்கி எழுத்தாளர் ரம்ஜான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

ஸ்வீடனில் முறைதவறி பிறந்தவர் இன்று குர் ஆனை தீ வைத்து எரித்துள்ளார். இஸ்லாமியர்களாக நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? குர் ஆனை எரித்த அந்த போக்கிரியை நான் பிடித்தேன் என்றால் நான் அவரை உயிருடன் தீ வைத்து எரித்துவிடுவேன்’ என பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு உக்ரைனில் இரு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை! திடீர் திருப்புமுனை!!!

இன்று யூன் 9, முன்னாள் பிரித்தானியா இராணுவ வீரர் ஒருவர் உட்பட பிரித்தானியர் இருவருக்கு ரஷ்ய ஆதரவோடு இயங்கும் டொனேஸ்க் படைகள் மரண தண்டனை விதித்துள்ளன. பிரித்தானியர்கள் இருவருக்கும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குமாக மூவருக்கு பயங்கரவாதிகள் எனக் குற்றம்சாட்டி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னதாகவே 2018இல் பிரித்தானியர்கள் இருவரும் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. பிரித்தானியாவில் இருந்து உக்ரைன் இராணுவத்தில் இணைந்த மற்றையவர் எய்டன் அஸ்லின், பெட்போர்ட்செயரைச் சார்ந்தவர். இவரும் மொரோக்கோ நாட்டு பின்னணியை உடையவர்.

மரியோபோலில் சரணடைந்த பல நூற்றுக்கணக்கான ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் இவர்கள் மூவரும் அடங்குகின்றனர். டொனேஸ்க் படைகள், சரணடைந்த உக்கிரைன் படைகளை சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய யுத்தக்கைதிகளாக நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரித்தானியர்கள் இருவரும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவரும் நாடுவிட்டு நாடுவந்த கூலிப்படைப் பயங்கரவாதிகள் என்றும் அவர்களுக்கு சர்வதேசச் சட்டங்கள் பொருந்தாது என்று குறிப்பிட்டுமே மரண தண்டனை அழிக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதற்கான காnணொலியும் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய சம்பவம் நடப்பதற்கு இருவாரங்களுக்கு முன் ரஷ்ய ராங்கர் படையைச் சேர்ந்த ஒருவர் தங்களால் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் அப்பாவி உக்ரைனியர்களைக் கொன்றதாக ஒப்புக்கொண்ட காணொலியை உக்ரைன் மற்றும் பிரித்தானிய நேட்டொ அணி நாடுகள் தொடர்ச்சியாக வெளியிட்டன. குறிப்பிட்ட ரஷ்ய படை வீரருக்கு எதிராக யுத்தக் குற்றங்கள் சுமத்தப்பட்டு அவர் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டு வந்தார். அதே பாணியில் பிரித்தானியாவுக்கு ஒரு பாடம் புகட்டுவதற்காகவும் யுத்தக்கைதிகளை பரிமாறுவதற்காகவும் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே நடக்கின்ற யுத்தத்தில் ஒரு நாளைக்கு 250 பேர் கொல்லப்படுவதாக மதிப்பிடப்படுகின்றது. பிரித்தானியாவில் இருந்தும் சில நூறுபேர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்துகொண்டுள்ளனர். யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லிஸ் ரஸ் உக்ரைன் இராணுவத்துடன் சென்று போராடும் பிரித்தானியர்களை ஊக்கப்படுத்தியும் வரவேற்றும் இருந்தார். உக்ரைன் இராணுவத்துடன் இணைந்துகொண்ட சில நூறு பிரித்தானியர்களில் இதுவரை 20 பிரித்தானியர் கொல்லப்பட்டு இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு பிரித்தானியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை பிரித்தானிய அரசை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஏற்கனவே பிரித்தானிய அரசு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாகின்றது. “பிரித்தானிய பிரஜைகளுக்கு ஏதாவது நடந்தால் …” என்றெல்லாம் தொனிகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ரஷ்யாவுக்கோ “தலைக்கு மேலால் தண்ணி போய்விட்டது. இனி சான் ஏறினாள் என்ன முழம் ஏறியால் என்ன?” என்ற நிலையே. மேலும் ரஷ்யா ஒடிசா துறைமுகத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் தானிய ஏற்றுமதி முற்றாகத் தடைப்பட்டுள்ளது. தற்போது இவை இரண்டையும் ரஷ்யா தனக்கு சார்பாகப் பயன்படுத்தி யுத்தக் குற்றவாளிகளை பரிமாறுவது, ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை தளர்த்துவது போன்ற பேரம் பேசலுக்கு தயாராகலாம்.

பிரித்தானிய வீரர்கள் உட்பட தினமும் 250 படையினர் கொல்லப்படுகின்றனர்!! உக்ரெய்ன் இன்னுமொரு வன்னி!!!

பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் லிஸ் ரஸ், உக்ரெய்ன்னுக்கு சென்று யுத்தத்தில் ஈடுபடுபவதை தான் ஆதரிப்பதாக அறிவித்ததையடுத்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்றுள்ளனர். இவர்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தினமும் உக்ரெயினில் நடைபெறும் யுத்தத்தில் இரு தரப்பிலும் 250 படையினர் கொல்லப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் லிஸ் ரஸ், யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட சில தினங்களிலேயே இந்த அறிவிப்பை வெளிளிட்டார். இதுவரை மரணித்துள்ள 20 பிரித்தானியர்கள் பற்றி பிரித்தானிய பிரதமரோ அமைச்சர்களோ எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.

உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்றவர்களில் பிரித்தானிய இராணுவத்தில் பணிபுரிந்தவர்களும் அடங்குகின்றனர். ஆனால் இவர்கள் யாரும் பிரித்தானிய அரசு அனுமதியோடு சென்றதாகச் சொல்லப்படவில்லை. உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்று அங்குள்ள இராணுவச் செயற்பாடுகளால் விரக்தியடைந்து நாடு திரும்பிய இருவரை பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி இன்று மே 31 நேர்கண்டு ஒளிபரப்பி இருந்தது. இந்நேர்காணல்களைத் தொடர்த்து பிரித்தானிய தொலைக்காட்சி தனது செய்திகளில் உக்ரெய்ன் வெற்றிபெற்று வருவதாக கூறுவதை நேற்றைய தினம் மே 30 முதல் அடக்கி வாசிக்கின்றது.

உக்ரெய்ன் யுத்தத்தில் உக்ரெய்ன் இராணுவத்துடன் சேர்ந்து யுத்தம் புரியச் சென்ற 18 வயதேயான இளைஞர், தங்களுக்கு உறுதியளித்தது போல் எவ்வித ஆயதப் பயிற்சியும் வழங்கப்பட வில்லை என்றும் உக்ரெய்ன் இராணுவத்திடம் எவ்வித இராணுவ ஒழுங்கமைப்புகளும் இருக்கவில்லை என்றும் அடிப்படை பாதுகாப்பு அங்கிகளே தங்களுக்கு தரப்படவில்லை என்றும் தெரிவித்தார். தன்னையும் தன்னைப் போன்ற வேறுநாடுகளில் இருந்தும் இராணுவத்தில் சேர வந்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தின் மீது மறுநாள் ரொக்கற் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்த இளைஞன் தெரிவித்தார். இத்தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக உக்ரெய்ன் தெரிவித்து இருந்தபோதும் இதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றும் அதில் நூறுபேர்வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் அவ்விளைஞர் தெரிவித்தார்.

இதே போல் பிரித்தானிய இராணுவத்தில் பணியாற்றிய ஒருவரும் அங்குள்ள நிலைமைகளை கடுமையாக விமர்சித்ததுடன் அங்கு எவ்வித இராணுவ கட்டுப்பாட்டு விதிமுறைகளும் இல்லையென்றும் ஒழுங்கற்ற கும்பலாகவே அவர்கள் இயங்குவதாகவும் அவர்களுடைய தொலைபேசி உரையாடல்களை வைத்தே ரஷ்யா தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். அங்கு யுத்தத்தில் பயிற்சிபெற்ற அனுபவமிக்கவர்களை காணமுடியவில்லை என்றும் பெரும்பாலும் எவ்வித பயிற்சியுமற்ற இளைஞர்களும் ஆர்வத்தால் உந்தப்பட்டவர்களுமே களமுனைகளில் நிற்பதாகத் தெரிவித்தார். மேலும் முன்னைய இளைஞர் குறிப்பிட்டது போல் அடிப்படைப் பாதுகாப்பு அங்கிகள் மற்றும் உணவுக்கே தட்டுப்பாடு நிலவுவதாகவும் சாதாரண மக்கள் இராணுவ நிலைகளை தங்கள் செல்போன்களில் படமெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று மே 30 முதல் பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி உக்ரெய்ன் யுத்தம் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் பிற்பகுதியில் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இந்தியாவில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் கிழக்கு உக்ரெய்ன் ரஷ்யாவிடம் வீழ்ந்துவிடும் என்ற தொனியிலேயே குறிப்பிட்டு இருந்தார். உக்ரெய்ன் யுத்தத்தில் தோல்வியைத் தழுவலாம் என்றும் கோடிகாட்டி இருந்தார். ஆனால் நாடுதிரும்பியதும் மீண்டும் வீரமுழக்கங்களையே வெளியிட்டார்.

ஆனால் இப்போது உக்ரெய்ன் பற்றி பேசுவதற்கே நேரம் இல்லாத அளவுக்கு பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் குடியும் கும்மாளமும் கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. தான் வரைந்த அமைச்சரவை ஒழுக்கவிதிகள் தனக்கே ஆபத்தாகும் என்றதால் அவற்றை நேற்று மே 30 அழித்துவிட்டார். சூ கிரே இன் சுயாதீன விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து தற்போது பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கட்சியைச் சேர்ந்தவர்களே அவரை பதவி விலகும்படி கோரிக்கை வைக்கின்றனர். இலங்கை ஜனாதிபதி வீட்டிற்கு போவதற்கு முன்னரே பிரித்தானிய பிரதமர் வீட்டிற்குப் போக வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

யுத்தம் என்பது அழிவை ஏற்படுத்தும். யுத்தத்தால் எதனையும் சாதித்துவிட முடிவதில்லை. அமெரிக்கா வியட்நாமில் தொடுத்த யுத்தம், அமெரிக்கா அப்கானிஸ்தானில் தொடுத்த யுத்தம், அமெரிக்கா ஈராக்கில் தொடுத்த யுத்தம், அமெரிக்கா சிரியாவில் தொடுத்த யுத்தம், பிரித்தானியா லிபியாவில் தொடுத்த யுத்தம் இவை எல்லாமே அந்நாடுகளைச் சீரழித்தது மட்டுமல்லாமல் அங்கு யுத்தத்திற்கு வழங்கப்பட்ட ஆயதங்கள் அமெரிக்க, பிரித்தானிய படைகளுக்கு எதிராக திருப்பப்பட்டது மட்டுமல்லாமல் அங்கு பயிற்சி பெற்றவர்கள் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குள்ளளும் ஊடுருவி தாக்குதல்களை நடத்தினர்.

இப்போது ரஷ்யாவுக்கும் உக்ரெயினுக்கும் இடையேயான யுத்தம், படையெடுப்பிற்கு முன்னதாகவே ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையேயான யுத்தமாக மாற்றப்பட்டு விட்டது. பிரித்தானியாவில் இருந்து உக்ரெய்ன் இராணுவத்துடன் இணையச் சென்றவர்களின் தகவல்களின் படி நேட்டோ நாடுகள் வழங்கிய ஆயதங்கள் ஏதும் அவர்களைச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நேட்டோ நாடுகளில் உள்ள ஊடகங்களோ தினம் தினம் ஆயதங்கள் அனுப்பப்படுகிறது என்றும் அந்த ஆயதங்களைக் கொண்டு உக்ரெய்ன் ரஷ்ய இராணுவத்தை பின்னடையச் செய்வதாகவும் செய்திகள் வெளியிடுகின்றன. உக்ரெய்ன் ஜனாதிபதி ஸ்லென்ஸ்கி தாங்கள் கிழக்கு உக்ரெய்னின் மரியோபோலை மீண்டும் கைப்பற்றுவோம் என்று குறிப்பிட்ட சில தினங்களிலேயே மரியோபோல் இரும்புத் தொழிற்சாலையில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரெய்ன் இராணுவத்தினர் (இவர்களில் ஒரு பகுதியின் தீவிர வலதுசாரிகள் என்றும் கூறப்படுகின்றது) ரஷ்ய இராணுவத்திடம் சரணடைந்தனர்.

பிரித்தானிய மற்றும் நேட்டோ நாட்டு ஊடகங்கள் உசுப்பிவிட்டதேயல்லாமல் உக்ரெய்னின் நிலைமைகள் மோசமானதாகவே உள்ளது. பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் ஜனாதிபதி ஜோ பைடனும் உள்ளுர் அரசியலில் தங்களைத் தக்கவைக்க உசுப்பிவிட்டதில் உக்ரெய்ன் மிக மோசமான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவில் இருந்து எரிவாயு, மற்றும் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதை முற்றாக தடை செய்வதாகக் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் இன்று அந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளது. ஜேர்மன் உக்ரெய்ன் க்கு கனரக யுத்த தளபாடங்களை வழங்குவதாக கூறப்பட்டது. அதுவும் தற்போது கைவிடப்பட்டு உள்ளது. அமெரிக்க நெடுந்தூர ஏவகணைகளை வழங்கமாட்டோம் என தற்போது அறிவித்துள்ளது. உசுப்பிவிட்டவர்களை நம்பிய உக்ரெய்ன் இப்போது கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரிலும் இந்த நேட்டோ நாடுகளில் வாழ்ந்த புலம்பெயர்ந்த புலிகளின் பிரதிநிதிகள் மிகக் கச்சிதமாக தமிழீழ விடுதலைப் புலிகளை உசுப்பிவிட்டனர். இந்த உசுப்பலால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்பதால் அவர்கள் அதனை கச்சிதமாகச் செய்தனர். அங்குள்ள மக்கள் போரின் வலியை அனுபவிக்க வேண்டிவரும் என்று எண்ணம் பெரும்பாலும் வரவில்லை. 2009 ஜனவரியில் இருந்தே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து சரணடைவதே ஒரே வழியென்று தேசம்நெற் இல் பல கட்டுரைகள் வெளிவந்தது. மே 17 2009 வரை தமிழீழத்தை நாங்கள் நெருங்கிவிட்டோம் என்று தான் புலிசார் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஒரு சமயத்தில் கட்டுடைக் குளத்தை புலிகள் தகர்த்தால் அந்த வெள்ளத்தில் ஆயிரக் கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இராணுவத்தின் உடல்கள் இறக்கப்படுவதாகவும் செய்திகள் பரப்பப்பட்டது. இதே மாதிரியான செய்திகளை தற்போது பிரித்தானிய ஊடகங்களிலும் கேட்க முடிகின்றது, உக்ரெய்ன் பற்றி.

உக்ரெய்ன் மீது படையெடுப்பதற்கு ரஷ்யாவுக்கு எவ்வதி தார்மீக உரிமையும் கிடையாது. ஆனால் ரஷ்யா படையெடுத்தபின் அழிவை எப்படி குறைத்துக்கொள்ளளலாம் என்பது பற்றி சிந்தித்து செயற்படுவதே உக்ரெய்ன் மக்களுக்கு நன்மையளிக்கும். உசுப்பிவிட்டு தங்கள் தங்கள் நலனை எட்டுவது நேர்மையற்றது. தற்போது உக்ரெய்ன் மிக நீண்ட கால அழிவுக்குள் தள்ளப்பட்டு உள்ளது. உக்ரெய்னுக்குள் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் கொட்டும் ஆயதங்கள் பல்வேறு நாடுகளிலும் செயற்படும் சட்டவிரோதமான ஆயதக் குழக்களிடம் சென்றடையும். உக்ரெய்ன் ஆயதக் கருப்புச் சந்தையின் மையம். இவ்வாயுதங்கள் மீண்டும் தீவிரவாத சக்திகளால் நோட்டோ நாடுகளிலேயே தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுவே கடந்த காலங்களிலும் நடந்தது. இனிமேல் நடக்காது என்பதற்கு எவ்வித உத்தவவாதமும் இல்லை.

நேட்டோ நாடுகளால் குவிக்கப்படும் ஆயதங்கள் உக்ரெய்னில் ஆயுதக் கலாச்சாரம் ஒன்றைத் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறது. அங்கு எல்லோரும் விரும்பி ஆயதம் ஏந்தவில்லை. பதினெட்டு வயதிற்கும் நாற்பது வயதிற்கும் உட்பட்டவர்கள் தங்கள் பிரதேசங்களைவிட்டு வெளியேறத் தடைவிதிக்கப்பட்டு கட்டாய ஆட்சேர்ப்பிற்கு உட்படுத்தப்படுகின்றனர். நேட்டோ நாடுகளின் உந்துதலால் ஒரு சிறு பிரிவினர் தொடர்ந்தும் ரஷ்யாவுக்கு எதிரான யுத்தத்தை தொடர்வார்கள். ஆனால் இந்த யுத்தத்தை உக்ரெய்னால் நீண்ட காலத்திற்கு முன்னெடுக்க முடியாது. அதற்கான உள்ளுணர்வையும் ஆட்பலத்தையும் உக்ரெய்ன் இழந்து வருகின்றது.

அதேசமயம் ரஷ்யாவுக்கும் இதுவொரு சிக்கலான பலப்பரீட்சையே. ரஷ்யா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பிரதேசங்களை நேட்டோ உதவியோடு உக்ரைன் படைகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தும். இந்த யுத்தம் மிக நீண்ட யுத்தமாக மாறிவருகின்றது என்பதை உணர முடிகின்றது.

உக்ரைன், ரஷ்யாவோடு உடன்பாட்டை எட்டுவது அல்லது சரணடைவதே அறிவுபூர்வமானது!

பாறாங்கல்லை தலையால் அடித்து உடைப்பது ஒன்றும் கெட்டித்தனமான காரியம் அல்ல. அப்படிச் செய்ய நினைப்பது முட்டாள்தனமானது. இந்த முட்டாள் தனத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் செய்து அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை நிரூபித்துச் சென்றனர். சாட்சிக் காரனின் காலில் வீழ்வதைக் காட்டிலும் சண்டைக்காரனின் காலில் வீழ்ந்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதே புத்திக் கூர்மையுடையவர்கள் செய்யக் கூடியது. இதில் நியாயம், நீதி, தர்மம் எல்லாம் எங்கட பக்கம் இருக்கு என்று கதை சொல்லிக் கொண்டிருக்கவும் கேட்கவும் நல்லாத்தான் இருக்கும் ஆனால் அதனால் எந்தப் பிரயோசனமும் கிடையாது.

நாங்கள் இந்த ஹோமோ சப்பிபயன்ஸ் சப்பியன்ஸ் கள், எங்களுடைய முதாதையர்களை கொன்றொழித்தே இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். சார்ள்ஸ் டாவினின் ‘தக்கன பிழைக்கும்’ என்ற விதி இன்றைக்கும் மிகப்பொருத்தமானதே. சார்ள்ஸ் டார்வின் நியாயம் பிழைக்கும், நீதி பிழைக்கும், தர்மம் பிழைக்கும் என்றெல்லாம் ரீல் விடவில்லை. ‘செர்வைவல் ஒப் தி பிற்றஸ்ற்’ என்று தான் சொல்லி இருக்கின்றார். அந்தந்தச் சூழலில் தன்னை தக்கவைத்து இனவிருத்தி செய்யக் கூடிய இனங்களே தங்களை தக்க வைத்துக்கொள்ளும் என்பதே கூர்ப்புக் கொள்கை. இதனையே ‘ஆலமரமும் நாணல் புல்லும்’ கதையில் சிறு வயதில் படித்துக்கொண்டோம். அது தமிழர்களுக்கும் பொருந்தும் உக்ரேனியர்களுக்கும் பொருந்தும்.

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின்னணிக்கு வருவதற்கு முன் ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பானது மிக மோசமானது. மிலேச்சத்தனமானது. அப்பாவி உக்ரைன் மக்களின் நாளாந்த வாழ்வியலைத் தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பும் யுத்தமும் மிகப் பாரிய மனித அவலத்திற்கு இட்டுச் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உக்ரைன் மக்களின் பக்கம் நீதி, நியாயம், தர்மம் எல்லாம் இருக்கின்றது. ஆனால் யுத்தம் தொடர்ந்தால் அவர்களைக் காப்பாற்ற எந்தக் கடவுளரும் வர மாட்டார்கள். உக்ரைனை உசுப்பி விடும் அமெரிக்கா – பிரித்தானியா உட்பட்ட நேட்டோ நாடுகளும் வரமாட்டார்கள். அவர்களால் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவையே நிறுத்த முடியவில்லை. தங்களுடைய எரிபொருள் தேவைக்கு ரஷ்யாவிலேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில் ‘அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது’ போலாகிவிட்டது உக்ரைனுக்கு. இது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடக்கும் யுத்தம் அல்ல. இது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் நடக்கின்ற யுத்தம். அதற்கு உக்ரைன் களப்பலியாகி உள்ளது.

பெப்பரவரி; 21: ரஷ்யாவின் ஆட்சித் தலைவர் விளாடிமீர் பூட்டின் மேற்குலகின் பின்னணியில் இருக்கும் உக்ரைனின் கிழக்குப் பிராந்திய பிரதேசங்களான டொனேற்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிரதேசங்களை தனிநாடாக அங்கீகரித்தார்.

பெப்பரவரி 22 ரஷ்ய மக்களுக்கு ஆற்றிய ஒரு மணிநேர நீண்ட தொலைக்காட்சி உரையில் டொனேற்ஸ்க் மக்கள் குடியரசு லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றின் இறையான்மையை அங்கீகரிப்பதாக ரஷ்யத் தலைவர் அறிவிதார். அத்தோடு ரஷ்யாவுக்கு வெளியே நாட்டுப்படைகளை பயன்படுத்துவதற்கு ரஷ்ய பாராளுமன்றம் அங்கீகரித்தது.

பெப்ரவரி 23: உக்ரைன் நாடுதழுவிய அவசரகாலச் சட்டத்தை அறிவித்தது.

பெப்ரவரி 24: ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்தன. பெப்ரவரி 16 அன்று ரஷ்ய படைகள் உக்ரைனை ஆக்கிரமிக்கும் என மேற்கு நாட்டு உளவு ஸ்தாபனங்கள் கணிப்புகளை வெளியிட்டு இருந்தன.அதற்கு ஒரு வாரம் களித்து ரஷ்யா தனது தாக்குதலை ஆரம்பித்தது. இதனை ஒரு விசேட இராணுவ நடவடிக்கையாக ரஷ்யா அறிவித்தது. உக்ரைன் மீது படையெடுப்பு அல்லது ஆக்கிரமிப்பு என்ற பதங்கள் தற்போது ரஷ்யாவில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்ரை மீது படையெடுக்கும் என உக்ரைன் அரசோ உக்ரைன் மக்களோ எதிர்பார்க்கவில்லை. தங்களை மிரட்டுவதற்காகவே ரஷ்யா கடந்த எட்டு ஆண்டுகளாக தங்கள் எல்லைகளில் படைகளை குவித்து வருவதாகத் தெரிவித்து வந்தனர். ரஷ்யப் படைகள் உக்ரைனுள் நுழைவதற்கு சில தினங்கள் முன்பாகவும் உக்ரைனின் நாளாந்த வாழ்வு அவ்வளவு பதட்டத்துடன் காணப்படவில்லை. ஆனால் லண்டன், பாரிஸ், நியூயோர்க் நகரங்கள் மிகுந்த பதட்டத்துடனேயே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் இந்நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகளை சரிக்கட்டுவதற்கு அவர்களுக்கு உக்ரைன் மீது ரஷ்யப் படையெடுப்பு மிக வாய்ப்பானதாக அமைந்தது.

பிரித்தானிய பிரதமரின் வீட்டுக்கு வர்ணம் அடிக்க நிதியயை வழங்கியவருக்கு அரச ஒப்பந்தம் ஒன்று வழங்குவது பற்றியும் பேசப்பட்டு இருந்தது. அத்தோடு கோவிட் லொக் டவுன் காலத்தில் தனது உத்தியோக பூர்வ வாசஸ்தலமான நம்பர் ரென் டவுனிங் ஸ்ரீற்றில் 17 வரையான குடியும் கும்மாளமும் இடம்பெற்றிருந்தது. இதில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் கலந்துகொண்டிருந்தார். அதற்கு எதிரான விசாரணைகள் முடக்கி விடப்பட்டு பொறிஸ் ஜோன்சன் அம்பலப்பட்டு இருந்த சமயத்திலேயே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கப் போகின்றது என்ற துருப்புச் சீட்டை பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வீசி தன் இருப்பை தக்க வைத்துக்கொண்டார்.

அதே போல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனாலும் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியை அவரால் தக்க வைக்க முடியாத நிலையில் இருந்தார். பொருளாதாரப் பிரச்சினைகள் அதனைத் தொடர்ந்து அவருக்கான அதரவும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தது. மேலும் அடுத்த தேர்தலிலும் அவர் டொனால் ட்ரம்மை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சமும் அவருக்கு இருந்தது. வழமையாக உள்நாட்டில் தங்கள் செல்வாக்குகள் சரியும் போது அதனை நிமிர்த்துவதற்கு அமெரிக்க, பிரித்தானிய தலைவர்களுக்கு ஒரு யுத்தம் தேவைப்படும். இத்தடவை இவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் பூட்டின் நல்ல வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பு ரஷ்யாவுக்கு எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் ஜோ பைடனுக்கும் பொறிஸ் ஜோன்சனுக்கும் சுக்கிரன் உச்சத்தில்.

உலக இயக்கம் என்பது கள்ளன் – பொலிஸ் விளையாட்டுப் போன்று அவ்வளவு கருப்பு – வெள்ளை அளவுக்கு தெளிவான வேறுபாடுடையது அல்ல. இப்பொழுதெல்லாம் இந்த மேற்குலக ஆங்கில ஊடகங்களில் ரஷ்யாவை ‘பறையா ஸ்ரேற் – Pariah State’ என்ற அடைமொழியோடே அழைக்கின்றனர். ‘பறையா – Pariah’ என்பது தமிழில் இருந்து ஆங்கில மொழியால் தத்தெடுக்கப்பட்ட சொல். இந்தியாவில் தீண்டத்தகாதவர்களாகக் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு சாதியயைக் குறிக்கின்ற இச்சொல்லையே இவர்கள் தங்களுக்கு எதிரானவர்களை கேவலப்படுத்தும் நோக்கத்தோடு பயன்படுத்துகின்றனர். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் வெளியார் தீண்டத்தகாதோர் என்போரை குறிப்பிட்டு பயன்படுத்தப்படும் இச்சொல்லை தற்போது விளாடிமீர்பூட்டினுக்கும் ரஷ்ய அரசுக்கும் எதிராக மேற்குலகம் பிரச்சாரப்படுத்தி வருகின்றது. சாதியம் இன்னும் கொழுந்துவிட்டெரியும் தெற்காசியப் பிராந்தியத்தில் இவ்வாறான சாதிய அடைமொழிகள் குறிப்பிட்ட சமூகங்களின் மீதான அழுத்தங்களை இன்னும் பல ஆண்டுகளுக்கு மேலும் ஒடுக்குவதற்கே உதவியாக அமையும்.

இதுவரை யாரும் செய்யாத அநீதியை ரஷ்யா செய்துவிட்டது போன்று மேற்கு நாடுகளும் மேற்கு நாட்டு ஊடகங்களும் ஒப்பாரி வைக்கின்றன. உண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் முடிவுகளை மீறி தம் இஸ்டத்திற்கு எந்த நாட்டின் மீதும் படையெடுக்கலாம் எந்த நாட்டின் ஆட்சியையும் வீழ்த்தி தங்களுக்கு சாதகமான ஆட்சியை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தை உலகிற்கு வழங்கியதே அமெரிக்காவும் பிரித்தானியாவும் இவற்றினது ஜால்ரா கோஸ்டியும் தான். ஈராக், அப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் இந்த மேற்கு நாடுகள் புரிந்த யுத்தக் குற்றங்கள் பல லட்சங்கள், கோடிகள். இவர்கள் தங்களது பிரச்சினை என்று வருகின்ற போது ஜனநாயகம் பற்றியோ மனித உரிமை பற்றியோ சுயாதீன ஊடகங்கள் பற்றியோ மூச்சுவிடுவதில்லை. ஈராக் யுத்தத்திற்கு எதிராக ஒரு மில்லியன் பிரித்தானியர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். மேற்குலக யுத்த வெறியர்களான ஜோர்ஜ் புஷ்சோ ரொனி பிளேயரோ அதற்கு செவிசாய்க்கவில்லை. இவர்களின் யுத்தக் குற்றங்களை அம்பலப்படுத்திய எட்வேர்ட் சுனோடன், யூலியன் அசான்ஜ் ஆகியோரை பிரித்தானியாவும் அமெரிக்காவும் அவர்களுக்கு மரணத்தை வழங்கத் துடித்துக்கொண்டுள்ளனர். எதற்காக? குவான்டனாமோ பேயிலும் ஈராக்கிலும் சிறைக்கைதிகளை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்திய தகவல்களை அம்பலப்படுத்தியதற்காக.

ஆனால் இப்போது எந்தவொரு ஜனநாயக நாடும் இன்னொரு நாட்டின் மீது படையெடுக்குமா? மனித உரிமைகள் மீறப்படுகின்றது யுத்தக் குற்றங்கள் நிகழ்கின்றது, ஊடக சுதந்திரம் இல்லை என்றெல்லாம் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் உக்ரேனியர்களின் கைகளில் ஆயதங்களைக் குவிக்கின்றனர். அதனை மேற்கு நாட்டு ஊடகங்கள் கொண்டாடுகின்றனர். சாதாரணர்களின் கைகளில் சக்தி வாய்ந்த ஆயதங்கள் வழங்கப்படுவதன் மூலம் இவ்வாயுதங்கள் தகாதவர்களின் காடையர்களின் கைகளையும் அடைந்துள்ளது. அங்கு களவு, கொள்ளை, தனிப்பட்ட பழிவாங்கல்களிலும் இவ்வாயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றது. இன்னும் சில வாரங்களில் உக்ரைன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் வாரி வழங்கப்பட்ட இந்த ஆயதங்களும் மேற்குலகம் அங்கு தொடர்ச்சியாக விநியோகிக்கும் ஆயதங்களும் உக்ரைனின் எதிர்காலத்தை இருளாக்கும் என்பது மட்டும் உறுதியாகி வருகின்றது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான பிரச்சினை இவ்வாறு யுத்த மூலம் வன்முறையால் தீர்க்கப்பட முடியாதது. உக்ரைன் ரஷ்யாவோடு நல்லுறவாக இருந்த காலப்பகுதியில் மட்டுமே உக்ரைனால் பொருளாதார வளர்ச்சியை அடைய முடிந்தது. 50 மில்லியன் மக்களைக் கொண்ட உக்ரைனில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வீதமாக உள்ளது. இளம்தலைமுறையினரால் முந்தைய தலைமுறையினரை பராமரிப்பதற்கான செலவை (வரியை) ஈட்ட முடியவில்லை. இளம் தலைமுறையினர் உக்ரைனை விட்டு வேகமாக வெளியேறி வருக்னிறனர். இவர்களது முதலாவது இலக்காக ரஷ்யாவே இருக்கின்றது. மேலும் உக்ரைனின் 17 வீதமானவர்கள் ரஷ்யர்கள்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பானது மிகத்தவறான அணுகுமுறையே. ஆனாலும் அந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மீது வைக்கின்ற எந்தவொரு அருகதையும் மேற்கு நாட்டு தலைமைகளுக்கு கிடையாது. இவர்கள் சர்வதேச ரீதியாக மேற்கொண்டு வரும் அடாவடித்தனங்கள் விளாடிமீர்பூட்டினது அடாவடித்தனங்களிலும் பார்க்க எவ்விதத்திலும் குறைந்தது அல்ல. உண்மையில் சொல்லப் போனால் மேற்கு நாட்டு தலைமைகள் மேற்கொள்ளும் அடாவடித்தனங்கள் அராஜகங்கள் விளாடிமீர்பூட்டினைக் காட்டிலும் மோசமானது. இந்த மேற்கு நாட்டு தலைமைகளின் பூரண ஆதரவுடனேயே இஸ்ரேல் பாலஸ்தீனர்களை வகைதொகையின்றி கொன்றொழிக்கின்றனர். சவுதிய அராபிய யேர்மன் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டை சின்னாபின்னாமாக்கி வருகின்றது. பர்மிய அரசு ரொஹிஞ்சா மக்களைக் கொன்றொழித்த போது இந்த மேற்கு நாட்டு அரசுகள் எல்லாம் பர்மிய அரசோடு வியாபாரத்தில் ஈடுபட்டுத்தானே இருந்தனர். இப்போது உக்ரைன் மீது தாக்குதல் நடப்பதற்கு முன்னமே இந்த நேட்டோ அணிகள் உரு வந்தது போல் ஜிங்கு ஜிங்கு என்று ஆடுகிறார்கள்.

சோழியன் குடுமி சும்மா ஆடுமா? 1949 இல் 12 நாடுகள்: அமெரிக்கா, பிரித்தானியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லண்ட், இத்தாலி, லக்ஸ்சம்பேர்க், நெதர்லாந், நோர்வே போரத்துக்கல் ஆகியன இணைந்து நேட்டோவை உருவாக்கின. 1997 இல் இந்த நேட்டோ விஸ்தரிப்பு ரஷ்யாவின் எல்லையை நெருங்கியது. ஹங்கேரி, செக் ரிபப்ளிக், போலந்த், பல்கேரியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவெனியா, ரொமேனியா, சுலொவேனியா, அல்பானியா, குரொவேசியா ஆகிய ரஷ்யாவின் எல்லை நாடுகள் அல்லது எல்லையை அண்மித்த நாடுகள் நேட்டோவோடு இணைக்கப்பட்டு நேட்டோ விஸ்தரிக்கப்பட்டது.

இந்நாடுகள் சுதந்திரமான இறைமையுள்ள நாடுகள் தான். தாங்கள் யாராடு இணையலாம் என்பதை தீர்மானிக்கும் உரிமை இந்நாடுகளுக்கு உள்ளது என்பது உண்மையே. அப்படியானால் அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் ரஷ்ய சார்பான கியூபாவில் ரஷ்யா ஏன் படைத்தளத்தை உருவாக்க முமயாது. ரஷ்யாவின் நட்பு நாடான லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுவெலாவில் ரஷ்யா ஏன் தனது இராணுவத்தளத்தை நிறுவ முடியாது. நேட்டோ அணிகள் அதனை அனுமதிக்கத் தயாரா. இந்த விடயத்தில் சீனா மிகத் தெளிவாக அறிவித்துள்ளது. பிராந்திய பாதுகாப்புப் பற்றிய ரஷ்யாவின் விசனத்தில் நியாயம் இருப்பதை சீனா வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளது. நேட்டோவின் பொருளாதாரத் தடைகளை தாங்கள் பின்பற்றப் போவதில்லை என்பதோடு ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளை சீனா வலுப்படுத்தி உள்ளது. இந்தியாவும் தாங்கள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

மேற்கு நாடுகளின் சர்வதேச ரவுடித்தனத்திற்கு ரஷ்ய – உக்ரைன் (நேட்டோ) மோதல் முடிவு கட்டும். இதுவரை சர்வதேச வர்த்தகம் டொலரிலேயே இடம்பெற்று வந்ததால் அமெரிக்கா யார் மீதும் பொருளாதார தடையைக் கொண்டுவந்து ஆட்டிப்படைக்கலாம் என நினைக்கின்றது. ஆனால் எதிர்காலத்தில் அதற்கு மாற்றீடாக சீனா தனது நாணயத்தை சர்வதேச வர்த்தகத்திற்கு பயன்படுத்த ஆரம்பிக்கும். அதன் முதல் எத்தனிப்பு ரஷ்யா – சீனா வர்த்தகமாக அமையும். BRICS – பிரிக்ஸ் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா நாடுகள் தங்கள் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதன் மூலமும் விஸ்தரிப்பதன் மூலமும் உலக சந்தையை இவர்களால் எதிர்காலத்தில் கட்டுப்படுத்த முடியும்.

இன்று மேற்கு நாட்டு நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவுடனான தங்கள் உறவை நான் முந்தி நீ முந்தி என்று துண்டித்து வருகின்றன. இதுவொன்றும் உக்ரைன் மக்கள் மீதான அனுதாபத்தில் கிடையாது. எங்கே தங்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு தங்கள் நிறுவனத்தின் பெயர் பாதிக்கப்பட்டால் பின் தங்களுடைய நிலைமை அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாகிவிடக்கூடாது என்ற ஒரு தற்காப்பு உத்தியே. புpரச்சினைகள் மெல்லத் தணிய கள்ளக் காதலியிடம் போவது போல் சத்தமில்லாமல் மீண்டும் போய் கடைவிரித்து விடுவார்கள். இந்நிறுவனங்களால் ரஷ்யாவுக்கு எவ்வளவு பெரிய நன்மைகள் கிடையாது. இந்நிறுவனங்கள் பெரும்பாலும் ரஷ்யாவின் நடுத்தர வர்க்கத்தை குஷிப்படுத்தும் பொருட்களையே விற்பனை செய்கின்றன. ஒரு வகையில் ரஷ்யாவின் செல்வத்தை இவர்கள் வெளியே கொண்டு செல்கின்றனர். ஆனால் இதற்கு மாற்றீடான பொருட்கள் ரஷ்யாவிலோ ஆசியாவிலோ உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் ரஷ்யா எரிவாயுவை பெற்றோலை நிறுத்தினால் நேட்டோ அணி நாடுகளில் அடுப்பு எரிப்பதே போராட்டமாகும். இதுவரை மின்சாரத்திற்கும் எரிவாயுவிற்கும் காலாண்டுக்கு 300 பவுண்கள் செலுத்தி வந்தனான் இப்போது மாதத்திற்கு 300 பவுண்கள் செலுத்த வேண்டியுள்ளது. ஈராண்டுகளுக்கு முன் பெற்றோலுக்கு லீற்றருக்கு ஒரு பவுண் செலுத்தியது இன்னும் சில மாதங்களில் லீற்றருக்கு இரு பவுண்களாகிவிடும் அபாயம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவில் ஏற்பட்ட வறட்சியால் கோதுமை விலையேறி பாணிண் விலையேறியது. உலகின் பாண் கூடையாக கருதப்படுவது ரஷ்யாவும் உக்ரைனும். இவர்களே 30 வீதமான கோதுமையை உலகிற்கு வழங்குகின்றனர். ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு அடுத்ததாக பெரிய நாடு உக்ரைன் அதுவும் இப்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
நேட்டோ அணிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் நாளை நெருங்கிக் கொண்டுள்ளனர். இன்றைய வரைக்கும் ஈரானோடும் வெனிசுவெலாவோடும் வம்பிளித்துக்கொண்டு இருந்தவர்கள் இப்பொழுது ஈரானிடமும் வெனிசுவெலாவிடமும் மடிப்பிச்சைக்கு போய் நிற்கப் போகின்றனர். பெற்றோல் பிச்சை.

மூக்குக்கு அணியும் மாக்ஸ், வைத்தியர்களுக்கான பாதுகாப்பு கவசம் இல்லாமல் தங்கள் சொந்த மக்களையே ஆயிரக்கணக்கில் மரணிக்க விட்டவர்கள் இன்றும் நூற்றுக்கணக்கில் மரணித்துக் கொண்டிருப்பதைப் பற்றி அக்கறையற்றவர்கள் லாபத்தை மட்டுமே சுவாசிக்க விரும்பும் இந்த முதலைகளின் நீலக்கண்ணீரில் மயங்காமல் உக்ரைன், ரஷ்யாவோடு உடன்பாட்டை எட்டுவது அல்லது சரணடைவதே அறிவுபூர்வமானது!