பகிடி வதை

பகிடி வதை

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை – விடுதிகளில் இரவு நேர சோதனை !

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் முகமாக அனைத்து பல்கலைக்கழக விடுதிகளிலும் இரவில் சோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

 

பல்கலைக்கழக விடுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பகிடிவதை செயல்கள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

பல்கலைக்கழக விடுதிகளில் இந்த சோதனைகளை பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாணவ ஆலோசகர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களுக்கு தேவையான போக்குவரத்து உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

இவ்வாறு பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை குற்றச்செயல்களை கட்டுப்படுத்த தேசிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

 

பகிடிவதை சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகளை 076 54 53 454 என்ற வாட்ஸ்அப் இலக்கம் மூலம் தெரிவிக்குமாறும் தற்போது அதிகளவிலான முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும் அனைத்து முறைப்பாடுகள் குறித்தும் துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் !

இலங்கை பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் குறிப்பிட்டதாவது,

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயல்பாட்டில் இருக்கும்.

 

076 54 53 454 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு வட்ஸ் அப் (Whatapp) மூலம் தகவல்கள் முறைப்பாடுகள் காணொளிகள் அல்லது படங்களை அனுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 1997 எனும் துரித அழைப்பு இலக்கத்திற்கும் இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு வகுப்புத் தடை !

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகிடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில், புதுமுக மாணவர்களைப் பகிடி வதைக்குட்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இடம்பெற்ற விசாரணைகளின் போது குற்றம் நிரூபிக்கப்பட்ட கலைப்பீடத்தைச் சேர்ந்த 14 பேருக்கு ஆறு மாத கால வகுப்புத் தடையும், தொழில் நுட்ப பீடத்தைச் சேர்ந்த 4 பேருக்கு இரண்டு வருட கால வகுப்புத் தடையும், விஞ்ஞான பீடத்தைத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டு வருட கால வகுப்புத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பகிடிவதைக் கெதிரான தண்டணைச் சாசனத்தின் படி, குற்றங்களின் தனமைக்கேற்ப விசாரணைக் குழுக்களினால் பரிந்துரைக்கப்பட்ட தண்டனைக் காலத்தை மாணவர் ஒழுக்காற்றுச் சபை சிபார்சு செய்தது.

அந்த சிபார்சுகளுக்கமைய பேரவையினால் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. பேரவையின் தண்டனை குறித்த அறிவிப்பு அந்தந்த பீடாதிபதிகளின் ஊடாகத் துணைவேந்தரால் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக் காலத்தினுள் குறித்த மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக் கழகத்தின் எந்தவொரு பகுதியினுள்ளும் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டனைக்குட்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதிகளில் தங்கியிருப்பவராயின் விடுதியை விட்டு உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை – கலைப்பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு பதிவு செய்த மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை 25 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பகிடிவதை என்பது ஒரு மனநோய் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய மாணவர்கள் மீதான அடக்குமுறை துன்புறுத்தலுக்கு எதிராக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மனக் குழப்பத்தின் காரணமாக அறிக்கைகளை வெளியிட்டமை சாதகமான நிலைமை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். பகிடிவதை என்பது ஒருவித மனநோய் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது – இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

பல்கலைக்கழகத்திலோ வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

ஒருவரது மனித உரிமையை விட 99 வீதமானோரின் மனித உரிமை தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேராதனை பல்கலையில் பகிடிவதை சம்பவங்கள், மற்றும் பெற்றோரின் முறைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மனித உரிமை தொடர்பில் கவனம் எடுப்பதா என்பது தொடர்பில் கற்றவர்களும் நன்கு உணர்வர்.
அரசியல் நோக்கத்திலும் பல்வேறு நோக்கங்களுக்காகவும் ஒருசிலர் செயற்பட்டு வருகின்றனர்.

அங்கு அரசியல் தீயை மூட்ட வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கின்றோம். பேராதனை  பல்கலைக்கழக சம்பவம் தொடர்பில் எனக்கு பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து 600க்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் வந்துள்ளன.

மனித உரிமையை நாம் வரவேற்கின்றோம். எனினும் குறுகிய நோக்கங்களுக்காக செயல்படுபவர்கள் மற்றும் வன்முறைகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.