பசில் ராஜபக்ச

பசில் ராஜபக்ச

மொட்டு சின்னத்துக்கு வாக்களிப்பதை தவிர இலங்கை மக்களுக்கு வேறு வழியில்லை – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யார் நாட்டுக்கு சேவையாற்றினார்கள், யார் நாட்டை சீரழித்தார்கள் என்பதை இருமுறை சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனநாயகம் மற்றும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து செயற்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுஜன பெரமுன மாறுப்பட்ட பொதுச் சின்னத்தில் போட்டியிடும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. ஆகவே மக்களுக்கு மாற்று வழியேதும் கிடையாது.

இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெறும் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியோர் இவர்கள் தான் – பெயர்களை வெளியிட்ட பேராசிரியர் சரிது ஹேரத் !

நாட்டை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக திட்டமிட்டு பொருளாதார குற்றங்களை இழைத்த குழுவை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என பொதுஜன முன்னணியில் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டலஸ் அணியை சேர்ந்த சுயாதீன உறுப்பினர் பேராசிரியர் சரிது ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டு மக்களுக்கு வேண்டுமென்றே குற்றம் செய்ததால்தான் இவ்வளவு கடினமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூட கூறுகிறது. இந்த நெருக்கடியை உருவாக்கியது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

குறித்த அறிக்கையில், ஐவரின் பெயர்கள் தெளிவாக எழுப்பப்பட்டுள்ளன. டாக்டர் பி.பி. ஜெயசுந்தர, பேராசிரியர் லக்ஷ்மன், எஸ்.ஆர். ஆட்டிகல, அஜித் நிவாட் கப்ரால் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, இந்த பெயர்கள் அனைத்தும் மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தை விட்டுக்கொடுக்க நாங்கள் தயாராக இல்லை, பொருளாதார நெருக்கடிக்கு இவர்களே காரணம் என தெரிவித்துள்ளார்.

“நான் இரண்டு விடயங்களுக்காகவே இலங்கைக்கு மீண்டும் வந்தேன்.”- இராஜினாமாவின் பின்பு பசில் ராஜபக்ச !

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் தகுதியான எவரேனும் எனது இடத்திற்கு வரத் தயார் எனில் கட்சி அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை கையளித்ததன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

“என்னால் முடிந்தவரை நான் செய்ய வேண்டியதை செய்தேன் என்று நினைக்கிறேன். ஆனால் மக்கள் எதிர்பார்த்ததை எல்லாம் செய்ய முடியவில்லை. இலங்கைக்கு வந்தபோது நான் இரண்டு விடங்களை எதிர்பார்த்து வந்தேன். அந்த நேரத்தில் என் மீது இரண்டு பெரிய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தன

அதாவது 2015 ஆம் ஆண்டு நான் பல்வேறு ஊழல்கள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. பல வருடங்களின் பின்னர் கடந்த வாரம் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டேன். அந்த வழக்குகளை எதிர்கொள்வதே எனது முதல் எதிர்பார்ப்பாக இருந்தது.

இரண்டாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு நான் பொறுப்பேற்க விரும்பினேன். அவரது தலைமையின் கீழ் அவருக்கு வெற்றியை வழங்க விரும்பினேன்.  அந்த இரண்டு எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்பட்டன. அதைத் தவிர, நிதியமைச்சர் பதவி கிடைக்கும், நாடாளுமன்றத்துக்கு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்ததில்லை. அவ்வளவுதான்.

தனிப்பட்ட ரீதியில் 21 ஆம் திருத்தத்தை நான் முழுமையாக எதிர்க்கின்றேன். 21 குறித்து அரசாங்கம் எடுக்கும் தீர்மானத்துடன் இணங்க முடியாது என்பதை முன்னரே உணர்ந்ததாலேயே பதவி துறந்தேன்.என்னை இலக்காகக் கொண்டே 21 கொண்டு வரப்பட்டுள்ளது.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். எனினும் இது தொடர்பில் கட்சி ரீதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை. நாளை என்றாலும்கூட எந்தவொரு தேர்தலுக்கும் பொதுஜன பெரமுன தயார். எம்மவர்களுக்கு அதிகாரத்தை வழங்கி நாடு இந்நிலைமையை அடைந்தமைக்கு மக்களும் ஒருவிதத்தில் பொறுப்பு கூற வேண்டும்.” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“ராஜபக்ஷக்களின் ஆட்சியை கவிழ்க்கவும் முடியாது – ஜனாதிபதியை விரட்டவும் முடியாது.” – பஷில் ராஜபக்ச சவால் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. ஒருவரையொருவர் பதவி விலகவும் கோரவில்லை. என இவ்வாறு முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநருமான பஷில் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் இன்று பெரும்பாலான ஊடகங்கள் எமது அரசுக்கு எதிராகவே செய்திகளை வெளியிடுகின்றன. இதன் பின்னணியில் யார் செயற்படுகின்றார்கள் என்று தெரியவில்லை. ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின்படி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை.

ஜனாதிபதியைப் பதவி விலகுமாறு பிரதமரோ அல்லது பிரதமரைப் பதவி விலகுமாறு ஜனாதிபதியோ கோரவில்லை. எனவே, ஊடகங்கள் உண்மைத்தன்மையுடன் செய்திகளை வெளியிட வேண்டும் நடுநிலையுடன் செயற்பட வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியை எவரும் கவிழ்க்க முடியாது. அதேவேளை, ஜனாதிபதியையும் பதவியிலிருந்து எவரும் விரட்டவும் முடியாது” – என்றார்

“நாட்டிலுள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைத்து விடுங்கள்.” – நிதி அமைச்சர் பசில் புதிய ஆலோசனை !

நாட்டிலுள்ள அனைத்து வீதி விளக்குகளையும் இன்று தொடக்கம் மார்ச் 31 ஆம் திகதி வரை அணைக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச  கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அந்த அறிக்கையில்,

அத்துடன் உள்ளுராட்சி தலைவர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மின்சாரத்தைச் சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் மின்சார பாவனையைக் குறைப்பதற்கு தேவையான மாற்று வழிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்க வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.