பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்

சவாலுக்கு உட்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது!

உயர் நீதிமன்றத்தின் முன், சவாலுக்கு உட்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று (20) பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரால் குறித்த தீர்ப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சட்டமூலம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு பின்வருமாறு,

* 3, 42, 53 மற்றும் 70 ஆகிய சரத்துகள் அரசியலமைப்பின் 12 (1) வது பிரிவுடன் ஒத்துப்போகின்றன, மேலும் அவை பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும்.

*இருப்பினும், அந்த சரத்துகள் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பில் முன்மொழிந்தபடி திருத்தினால், அந்த முரண்பாடுகள் நீங்கிவிடும்.

* 4வது ஆவது சரத்து உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, திருத்தம் செய்யப்பட வேண்டும்.

* 61 (1) சரத்து அரசியலமைப்பிற்கு உட்பட்டது மற்றும் விசேட பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த சரத்து மீதான உயர் நீதிமன்றத் தீர்ப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்களைச் செய்தால், அந்த முரண்பாடு நீங்கிவிடும். அதற்கேற்ப, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 72 (2) வது சரத்தும் திருத்தப்பட வேண்டும்.

* 83 (7) சரத்து விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தப் பிரிவின் மீதான உயர் நீதிமன்றத் தீர்ப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்களைச் செய்தால் அந்த முரண்பாடுகள் நீங்கிவிடும்.

* மேலும், சட்டமூலத்தின் விதிகளின்படி சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு, எளிய பெரும்பான்மையால் மட்டுமே சட்டமூலத்தை சட்டமாக்க முடியும் என்று உயர் நீதிமன்றம் திர்மானித்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி !

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் என்பனவற்றை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகளால் குறித்த கவனயீர்ப்பு மற்றும் அடையாள உண்ணாவிரத போராட்டம் என்பன முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை அரசாங்கம் அடக்குமுறை சட்ட வரைபுகளை மீளப்பெறவேண்டும் என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணி ஆரம்பமானது.

பேரணியானது மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் சென்றதுடன் அங்கு ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுதந்திரமான வெளிப்படுத்துவதற்கும் ஒன்றுசேருவதற்குமான உரிமையினை உறுதிசெய், அரசே இலங்கை அரசியல் யாப்பிலுள்ள மனித உரிமையை மீறி செயற்படாதே, மக்களுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது அரசுடைய கடமையாகும், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்மொழிவை மீளப்பெறு உட்பட பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், மகளிர் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

இதன்போது, கிழக்கு மாகாண சிவில் சமூகத்தின் பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்டு அவை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டன.

“புதிய சட்டம் கருத்து சுதந்திரத்தின் சாவு மணி’ – கிளிநொச்சியில் சிவில் அமைப்புக்கள் போராட்டம்!

கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும், அவர்கள் தங்களது கடமைகளை சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும், ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் போன்ற விடயங்களை வலியுறுத்தி, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் “புதிய சட்டம் கருத்து சுதந்திரத்தின் சாவு மணி, பொருளாதார நெருக்கடியில் சிக்குண்ட நாட்டை ஜனநாயக நெருக்கடிக்குள்ளும் தள்ளாதீர், நல்லாட்சிக்கே சட்டத்தை உருவாக்குங்கள் அடக்கி ஒடுக்க உருவாக்காதீர்கள்.” போன்ற பதாதைகளை ஏந்தி இருந்தனர்.

பிற்போடப்பட்டது பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்!

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு அமைய, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பெருமளவில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதி அமைச்சர், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்பவே அரசாங்கம் பாராளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்குவதாகவும் பலரதும் கருத்துகளைப் பெற்று, தேவையான திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னரே அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் திருத்தம் செய்ய முடியுமா..? – நீதியமைச்சர் தெரிவித்துள்ள விடயம் !

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் திருத்தம் செய்ய முடியும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தை உச்ச நீதிமன்றில் சவால் செய்ய பொதுமக்கள் பிரதிநிதிகள் அல்லது ஆர்வமுள்ள எந்தவொரு தரப்பினருக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமூலம் மீதான விவாதத்தின் போது திருத்தங்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும்.

அரசாங்கம் சட்டமூலத்தை பின்கதவால் கொண்டு வரவில்லை எனவும் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் திறந்திருப்பதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அச்சத்தை தூண்டுவதற்குப் பதிலாக, அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் ஈடுபட்டு அனைத்து இலங்கையர்களையும் பாதுகாக்க பொருத்தமான சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைவில் உள்ள சில விதிகள் குறித்து உலக மற்றும் உள்ளூர் சமூகம் எழுப்பியுள்ள கேள்விகள் தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளதாக நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய நிர்வாகம் நெகிழ்வானது என்றும், சட்டமூலத்தை மேலும் ஆலோசித்த பின்னர் அவற்றைத் திருத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சர்வதேச தரத்திற்கு முரணாக உள்ளது – அமெரிக்கா

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பான விரிவான, பொது மற்றும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பில் இதனைத் தெரிவித்ததாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தரத்திற்கு, புறம்பாக முன்மொழியப்பட்ட, சட்டமூலத்தின் சில விடயதானங்கள் தொடர்பில், கவலை வெளியிட்டதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக, பொது மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரண்டிலும் விரிவான விவாதங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற தங்களது ‘வலுவான விருப்பத்தை’ பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிவில் சமூகம், கல்வியாளர்கள் மற்றும் சட்டம் இயற்றுபவர்கள் உட்பட அனைவரது கருத்துச் சுதந்திரம் அல்லது ஒன்றுகூடலை கட்டுப்படுத்தாமல், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சிறந்த கருவியாக, குறித்த சட்டமூலம் செயல்படுவதை உறுதிப்படுத்துவது முக்கியமானதாகும் எனவும் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது சிங்கள மக்களை பாதிக்கின்றது – நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது சிங்கள மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை மட்டுமல்லாமல் சிங்கள இனத்தையே அடிமைப்படுத்தப்போகும் ஒரு சட்டமாக இது அமையும் என்றும் சிறிதரன் எச்சரித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்புக்கள் காரணமாக இந்த சட்டமூலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர, அதனை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை அமுல்படுத்த அனுமதிக்க போவதில்லை என்றும் அதற்கான முழு முயற்சியை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்.” – எம்.ஏ.சுமந்திரன்

ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் நேற்று மாலை (08) ஊடகங்களுக்கு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாரிய பொருளாதாரச் சிக்கல் ஒன்று இந்த நாட்டை பீடித்திருக்கின்றது. அதிலிருந்து இந்த நாட்டை மீட்க போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி வருகின்றார். அவ்வாறு நாடு மீண்டதாக ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்தப்படுகின்றது. ஆனால் மிக விரைவிலே நாடு மிக மோசமான பொருளாதார சூழ்நிலைக்கு செல்ல இருக்கிறது. அப்படியான சந்தர்ப்பத்தில் திரும்பவும் மக்கள் போராட்டங்கள் வெடிக்கக்கூடும் என்ற காரணத்தினால் அதை கட்டுப்படுத்துவற்கு இந்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றனர். ஏனெனில் கடந்த காலங்களைப் போன்று மீண்டும் மக்கள் போராட்டங்கள் ஏற்படுகிற பொழுது அதனைக் கட்டுப்படுத்த அல்லது ஒடுக்குவதற்கு தற்போது ஜனாதிபதியின் கையில் இருக்கின்ற சட்டங்கள் போதாது என்று அவர் கருதுகின்றார்.

 

அதேபோன்று, பயங்கரவாத தடை சட்டங்களை பிரயோகித்தால் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதியை மீறுவதாக அமையும் என்பதாலே ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொடுக்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச் சலுகை கூட இல்லாமல் போகின்ற நிலைமை ஏற்படும். ஆகவே புதியதொரு நல்ல விடயத்தை தாங்கள் செய்வது போல மிக மிக மோசமான ஒரு செயலையே செய்வதற்கு முனைகின்றனர். குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக காட்டிக் கொண்டு அதனை விட மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமென்ற இந்தச் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர். அதாவது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறேன் என்று ஒரு மாயத் தோற்றத்தை காட்டிக் கொண்டும் சர்வதேச நியமங்களுக்கு அமையவே புதிய சட்டத்தையே கொண்டு வருகிறேன் என்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

இந்த சட்டம் கொண்டு வரப்படுவதற்கான உண்மையான நோக்கம் என்னவெனில் மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக அல்லது அரசாங்கத்திற்கு எதிராகவோ தமது எதிர்ப்பை காண்பிக்கின்ற போது அதனை இரும்பு கரம் கொண்டு அடக்குவதற்கான ஒரு கருவியாகத்தான் அல்லது முன்னெச்சரிக்கையாகத் தான் முன்கூட்டியே இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் முனைந்திருக்கின்றது. வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது அரசியலமைப்பை மீறுகின்றது. அவ்வாறு அரசியலமைப்பை மீறுகின்றது என்றோ அல்லது வேறு காரணங்களைக் கூறியோ நீதிமன்றம் சென்றாலும் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்றும் நீதிமன்றம் சொல்லலாம். அதேநேரம் சர்வஜன வாக்கெடுப்பும் தேவை என்றும் கூட நீதிமன்றம் சொல்லலாம். ஆனால் இன்றைக்கு இருக்கின்ற நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு என்ற ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் அரசாங்கம் செய்யலாம். ஏனெனில் ஆளுங்கட்சியுடன் எதிர்க்கட்சியில் இருக்கின்ற சில தரப்புக்களும் இணையப் போவதாக அறிகின்றோம். ஆனாலும் இந்த அரசுக்கு இப்பொழுது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சிகளில் இருக்கின்ற பலர் இப்போது கட்சிதாவுவதற்கு தயாராகின்றனர்.

அரசாங்கம் மூன்று இரண்டு பெரும்பான்மையை இலகுவாகவே பெற்றுக் கொள்ளலாம். ஆகையினால் அதை மட்டும் வைத்துக் கொண்டு நாம் இதனை தடுக்க முடியாது. ஆகவே அரசின் இந்தப் புதிய சட்டம் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களை மீறுகிறது என்பதை நாம் தெளிவாக சொல்லுகின்றோம்.

 

நாம் மட்டுமல்ல இன்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பலரும் இந்த விடயங்களை கூறுகின்றனர். இதனால் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை கிடைக்காமல் போகலாம் என்பதும் தெரிந்த விடயம். அதன் மூலம்தான் இந்த சட்ட மூலம் இயற்றுகின்ற அரசின் யோசனையை மாற்றலாம் என்று நாங்கள் நினைக்கின்றோம். அதேபோல ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நிறுவனங்களும் கூட இதனுடைய தாற்பரியத்தை அல்லது மோசமான தன்மையை உணர்ந்து அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஆகவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கு நாங்கள் எப்படியாக நாடு பூராகவும் எழுச்சி ஏற்படுத்தினோமோ அதே போல் இந்த மோசமான சட்டத்தை தடுப்பதற்கு மக்களிடையே சென்று மக்கள் மத்தியில் விளக்கங்களை கொடுத்து ஒரு எழுச்சியை ஏற்படுத்த முனைகிறேன். இவ்வாறு நாட்டு மக்களிடத்தே இந்த விடயம் தொடரபில் கலந்துரையாடல்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி மக்கள் எழுச்சியை எடுத்துக் காட்டுவோமாக இருந்தால் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றாமல் தடுக்கலாம் என்று கருதுகின்றேன் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை முன்னேற்றவே பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் – ராஜபக்ஷ தரப்பு விளக்கம் !

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலம் பயங்கரவாதத்திற்கு எதிரானதே தவிர, ஜனநாயகத்திற்கு எதிரானதல்ல என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் உருவாக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

“குறுகிய அரசியல் நோக்கத்திற்காக தொழிற்சங்கத்தினர் பொருளாதாரத்தை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில் தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

தங்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக மக்களையும், அரசாங்கத்தையும் இவர்கள் நெருக்கடிக்குள்ளாக்குகிறார்கள்.

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டு செயற்பட வேண்டும் அதற்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்தால் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது.“ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசுக்கு அறிவுறுத்தல் !

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரிவு 3 (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தின் வரையறையை மறுபரிசீலனை செய்யுமாறும், வரையறைக்குள் வரும் செயல்களை தெளிவுபடுத்துவதற்கும் சுருக்குவதற்கும் குறிப்பிட்ட திருத்தங்களை பரிந்துரைக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று ஒரு அறிக்கையில், பயங்கரவாதத்தின் வரையறை நீண்ட காலமாக ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக உள்ளது என்றும், வரையறையின் பரந்த நோக்கம் இந்த விடயத்தை சிக்கலாக்குகிறது என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சட்டப்பூர்வ கருத்து வேறுபாடுகள் மற்றும் உண்மையான பயங்கரவாதச் செயல்களை வேறுபடுத்திப் பார்ப்பதை இந்த சட்டமூலத்தில் உள்ள வரையறை கடினமாக்கும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்ப்பாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் குறிவைத்து மௌனமாக்குவதற்கு பயங்கரவாதத்தின் பரந்த வரையறையை அரசாங்கம் பயன்படுத்த முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

“இது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையை மட்டுமல்ல, அரசியல் சாசனத்தில் உள்ள பறிக்க முடியாத உரிமையான பேச்சுரிமையையும் மீறுகிறது” என இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

“பயங்கரவாதம் என்பது ஒரு வன்முறைச் செயலாகும், இது வற்புறுத்துவதற்கும், பயமுறுத்துவதற்கும் அல்லது பயத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது ஒரு கருத்தியல் நோக்கத்தை அடைவதற்கான ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், சட்டமூலத்தில் கருதப்படும் வரையறையின் பரந்த நோக்கம் அதன் பயன்பாட்டிற்கு வழிவகுக்கும். அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் தலையிடும் வழிகள், பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை கட்டுப்படுத்தும் வகையில்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிரிவு 3(2) (f) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அத்தியாவசிய சேவைகள் அல்லது பொருட்களில் தலையிடும் எவரும் பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுவார்கள். போராட்டம் அல்லது பேரணியில் பங்கேற்கும் எவரும், அது அமைதியானதாக இருந்தாலும், ஒரு பயங்கரவாதச் செயலாகக் கருதப்படலாம். இது மக்களின் எதிர்ப்பைக் குரல் கொடுக்கும் உரிமையை நசுக்க வழிவகுக்கும்,” என்று அது மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த வரையறை பேச்சு சுதந்திரம் மற்றும் இயக்க சுதந்திரத்தின் மீது ஒரு குளிர்ச்சியான விளைவைக் கொண்டிருப்பதைக் குறிப்பிடுகிறது.

“பயங்கரவாதி என அழைக்கப்படுவார்கள் என்ற பயத்தில், பொது நலன் சார்ந்த விடயங்களில் பேசவோ அல்லது தங்கள் கருத்தை வெளிப்படுத்தவோ பலர் பயப்படுவார்கள். இது ஒரு பயத்தின் சூழலை ஏற்படுத்தும், இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல” என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.