களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 28 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 12.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 28:
தேசம்: ஈழ தேசிய ஜனநாயக முன்னணியின் ENDLF யின் உருவாக்கம் பற்றி சொல்லி இருந்தீர்கள். அது உண்மையா நீண்ட காலம் நீடிக்கவில்லை. அதுல முரண்பாடு வருது தோழர் டக்ளஸுக்கும் பரந்தன் ராஜனுக்கும். அது எந்த அடிப்படையில் அந்த முரண்பாடு வருது. அரசியல் ரீதியான முரண்பாடா? தனிநபர் பிரச்சினையா? அல்லது ஆளுமை சம்பந்தமான போட்டியா? ஏன் இந்த முரண்பாடு?
அசோக்: முதன்முதல் டக்ளஸ் தோழருடன் நாங்கள் அமைப்பு உருவாக்கம் தொடர்பாக கதைக்கும் போது அவர் கேட்டவர் ராஜன் இதுகுள்ள வாறாரா என்று. நாங்கள் சொன்னோம் அவருடன் நாங்கள் கதைத்திருக்கிறோம். அவங்களோட தோழர்கள் நிறைய பேர் வெளியேறிட்டாங்க. அவங்களையும் உள்வாங்க வேண்டும் என்று நோக்கம் இருக்குது. அவங்களுடனும் நிறைய நல்ல சக்திகள் இருக்கிறார்கள்.
அப்போ அவர் சில விமர்சனங்கள் வைத்தவர் ராஜனை பற்றி. சிறைக்குள் நடந்த பிரச்சனைகள் பற்றி…
தேசம்: இந்தப் போராட்டம் தொடங்குவதற்கு முதலே…
அசோக்: இல்ல. வெலிக்கடை சிறையில இவங்க எல்லாரும் ஒன்றாகத்தான் இருந்தார்கள். அப்போ அங்க புளொட்டில் இருந்த மாணிக்கதாசன், ராஜன் ஆட்கள் எல்லாம் நடந்துகொண்ட முறைகள் தொடர்பாக கடும் விமர்சனம் வைத்தார். அங்கேயே அவங்களுக்கு முரண்பாடு தொடங்கி விட்டது. அந்த முரண்பாடு தனிநபர் முரண்பாடாக கூர்மை அடைந்து விட்டது. அப்போ அவர் சொன்னார் சிக்கலாக இருக்கும் காலப்போக்கில் என்று.
அப்போ நாங்க சொன்னோம் தனிநபர் முரண்பாட்டுக் அப்பால் சுமூகமாக அமைப்பு ஒன்றை உருவாக்குவோம் என்றும் முரண்பாடுகள் வராமல் நாங்கள் பொறுப்பு நிற்கிறோம் என்றும், அந்த முரண்பாடுகள் வராம இருக்க அதற்கான எல்லா பொறுப்புகளையும் நாங்கள் எடுக்கிறோம் என்று சொல்லி அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர் அமைப்பிற்குள் வந்தவர்.
இந்தக் காலகட்டத்தில் இந்தியா இலங்கை தொடர்பான விடயங்களில் கவனம் கொள்ளத் தொடங்குகிறது. காலப்போக்கில் இலங்கையில் இந்திய இராணுவத்தை இறக்கும் எண்ணம் உருவாகிறது. இதற்காக சில இயக்கங்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்க முடிவு பண்ணுகிறது. எங்களையும் அணுகுகிறது. நாங்களும் பயிற்சிக்காக செல்கிறம். பயிற்சி முடிந்து ஒரு மாதம் கழித்து சென்னை வந்து பார்த்தால் டக்ளசிக்கும் ராஜனுக்கும் முரண்பாடு கூர்மைடைந்து இருந்தது.
தேசம் : என்ன காரணத்தால் இந்த முரண்பாடுகள் ஏற்படுகிறது?
அசோக்: அந்தத் தனி நபர் முரண்பாடு இதுகுள்ள வந்து ஆளுமை செலுத்த தொடங்கிட்டுது. நாங்கள் அமைப்பு தொடங்கினதற்கு பிறகு பல்வேறு அரசியல் சக்திகள் இந்திய அரசு, ஏனைய அரசியல் தொடர்பான உறவுகளை, உளவுத்துறைகள் போன்ற அந்த உறவுகளை கமிட்டி மூலமாக அணுக வேண்டும் என்பதுதான் எங்கட விதி முறை.
ஏனென்றால் தனித்தனியாக அணுகினால் அவர்கள் தனித்தனியாக எங்களை கையாள வெளிக்கிடுவார்கள். உளவுத்துறை எப்பவுமே தனி நபர்களை வைத்து தான் எதையும் செய்கிறது. நாங்கள் அவர்களால் வாங்கப்படுவதே எங்களுக்கு தெரியாம இருக்கும். புளொட்டிலிருந்து தனி நபர்களாக உளவுத்துறைகளோடு உறவு வைத்திருந்தவர்களை குறிப்பாக ரோ எப்படி பயன்படுத்தியது எங்களுக்கு உள்ள படிப்பினைதானே. அதே தவறையும் ஆபத்தையும் மீண்டும் நாம் விடக்கூடாது என்பதில் நாங்க கவனமாக இருந்தம். இனிமேல் வந்து உளவுத்துறை தொடர்பாக ரோ, இந்திய பொலிஸ் துறை, ஐபி, கியூ பிரான்ச் போன்றவற்றோடு தனிநபர்கள் கதைக்கக் கூடாது என்று. அப்படியே அவங்க தனிநபரை கூப்பிட்டாலும், கமிட்டியில் முடிவெடுத்துப் போட்டு தான் போய் கதைக்க வேண்டும் என்று சொல்லி முடிவெடுத்திருந்தோம்.
இரரணுவக்கமிட்டி, அரசியல் கமிட்டி இணைந்து முடிவுகளை எடுக்கும்.எந்த சந்திப்புக்களும் தனிநபர் சார்ந்து இருக்கக் கூடாது என்பது எங்கட தீர்மானம். அவங்கள் வடிவாக தனிநபர்களை கையாளத்தொடங்கிட்டாங்க. ராஜனைத் தனிய சந்திக்கிறது, டக்ளஸை தனிய சந்திக்கிறது, உங்களுக்கு தனிய ஆம்ஸ் தாறம் என்கிறது. இப்படி இவர்கள் கையாண்டவுடன் அது பெரிய முரண்பாடாக போய்விட்டது.
ஒரு தடவை ஒரு தொகுதி ஆம்ஸ் தாறம் என்று தனியா ராஜனுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஆம்ஸ்சும் கொடுத்து விட்டார்கள். இது டக்ளஸ் தோழருக்கு தெரியாது. தெரிந்தவுடன் பிரச்சனையாகி விட்டது. எங்களுக்கு இந்தப் பிரச்சினையெல்லாம் பயிற்சிமுடித்து வந்தபின்தான் தெரியவருகிறது.
இந்த முரண்பாடுகள் பற்றி ராஜனோடு பேசுகிறோம். எந்த முடிவும் தனிநபராக எடுக்கமுடியாது கமிட்டிதான் முடிவு பண்ணவேண்டும் என்று.
மிலிட்டரி கொமிசாரில் கதைக்கப்பட்டு நாங்கள் ஆயுதம் வாங்குவதா இல்லையா என்று தீர்மானத்துக்கு வர வேண்டும் என்று சொல்கிறோம். இந்த முரண்பாடு கூர்மையடையுது. ராஜனுக்கு எங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கல. அப்போ நாங்கள் சொல்லுறோம் நாங்கள் வெளியேறுகிறோம் என்று. அதுக்கு முதல் இந்த காலகட்டத்தில் டக்ளஸ் தோழர் வெளியேறிட்டார். இதைப் பற்றி நாங்கள் ராஜனிட்ட கதைக்கும் போது ராஜனுக்கும் எங்களுக்கும் இந்த முரண்பாடு வருகிறது.
தேசம்: இது நான் நினைக்கிறேன்… நீங்கள் அறிக்கைவிட்டு ஒரு சில வாரங்கள் அல்லது நாட்கள்…
அசோக்: எங்களுக்கும் ENDLF க்குமான உறவுக்காலம் காலம் 6 மாதம் 7 மாதம் இருக்கும். அதுக்குள்ள முரண்பாடு வந்து நாங்கள் வெளியேறிட்டம்.
தேசம்: ஒருவகையில் அது நல்லம் என்று பார்த்தால் முதல் உமாமகேஸ்வரன் புளொட்டுக்குள்ள நடந்தவைகளை பார்க்கும்போது எவ்வளவு முன்னுக்கு அந்த பிரிவு முரண்பாடு நடக்குதோ அதால ஏற்படும் இழப்புகளும் குறைவு. இதே மாதிரியான பிரச்சனையை ஆரம்பத்திலேயே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் எடுத்திருந்தால் இவ்வளவு பெருந்தொகையான தோழர்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் அந்த வகையில இது ஓரளவுக்கு பரவாயில்லை என்றும் பார்க்கலாம்.
அசோக்: அதுல ஒரு நல்ல பண்பு என்ன என்று கேட்டால் நாங்கள் ராஜனுடன் கடுமையான முரண்பாடு வாய்த்தர்க்கம். நாங்கள் வெளியேறிய பின்னர் அதற்குப் பிறகு எங்கள் மீதான நடவடிக்கைகளோ தேடுதலோ குற்றச்சாட்டு எதுவுமே ராஜன் வைக்கேல. மிக கௌரவமாக அவரும் விலகிக்கொண்டார். நாங்களும் விலகிக் கொண்டோம். பிறகு ENDLF என்ற பெயரை தாங்களே எடுத்துக் கொண்டார்கள். அதற்குப் பிறகு தோழர்களை அடிக்கடி சந்திப்பேன். எந்த முரண்பாட்டையும் நாங்கள் வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. நாங்கள் விலகிக் கொண்டோம். ஜனநாயக பூர்வமாக விலகிக் கொண்டோம்.
காலப்போக்கில் டக்ளஸ் தோழருக்கு நெருக்கடி வருகிறது. சூளைமேடு பிரச்சினை …
தேசம்: சூளைமேட்டில் என்ன பிரச்சினை?
அசோக்: சூளைமேடு சூட்டிங் பிரச்சனை இவர் மீது தான் குற்றம்சாட்டப்பட்டது. அந்த பிரச்சனையில் எல்லாம் மிக அழுத்தம் இருக்கிறது. அப்போ அவங்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து இருக்க முடியாத சூழல். எப்படியோ அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் வேற இடத்துக்கு போக வேண்டும். அடுத்தது தொடர்ந்து அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கமும் இருக்கு. கட்டின அமைப்பும் சீர்குலைந்து போய்விட்டது. அப்போ நாட்டுக்கு போக வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.
தேசம்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எண்பத்தி ஆறு கால கட்டத்தில்தான் இது எல்லாம் நடக்குது.
அசோக்: எண்பத்தி ஆறு கடைசி காலகட்டத்தில்.
தேசம்: அப்போ அங்காள எண்பத்தி ஏழில் இந்திய ராணுவம் அங்க போகுது.
அசோக்: ஓம் அதற்கு முதல் தான் இது நடக்கிறது. அப்போ அவருக்கு இலங்கைக்குப் போய் அரசியல் செய்கின்ற நோக்கமெல்லாம் இருக்கிறது.
தேசம்: இந்த ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியை ராஜன் எடுத்த பிறகு, அந்த காலகட்டத்திலேயா ஈபிடிபி உருவாக்கப்பட்டது?
அசோக்: இல்லை இந்த காலகட்டத்தில்தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ன செய்கிறது என்று. இலங்கைக்கு போய் அரசியல் செய்கிற நோக்கமாக அசோக் சந்திரகுமார் 4- 5 பேரை இலங்கைக்கு அனுப்பி அதற்கான ஒரு பேச்சுவார்த்தை களத்தை உருவாக்குகிறார். உருவாக்கின பிறகு இவங்க தீர்மானிக்கிறார்கள் அங்கே போக வேண்டுமென்று. அப்போ அவர் எங்களையும் தங்களுடன் வந்து சேர சொல்லி கேட்கிறார். அதுல நான் மிக கவனமாக இருந்தேன். நான் சொன்னேன் எனக்கு உடன்பாடில்லை எனக்கு இந்த அரசியல் இனி வேண்டாம். நான் ஒதுங்கி இருக்கலாம் என்று.
பிறகு நான் தோட்டம் போட்ட வரலாறு வேற. என்னோட ஒரு 10 – 15 தோழர்கள் வந்துட்டாங்க. அவங்களை நான் காப்பாற்ற வேண்டிய தேவை வந்துவிட்டது. அந்த அடிப்படையில் நான்… அந்த வரலாறு வேற வரலாறு.
தேசம்: ஈபிடிபி ஒரு அறிக்கை விடுதா அந்த காலகட்டத்தில்?
அசோக்: ஓம் அது என்ன நடந்தது என்று கேட்டால், தோழர் ஈஸ்வரன் அவர் இங்கே இருந்து டக்ளஸ் தோழருடன் கதைக்கும்போது டக்ளஸ் தோழர் கேட்டிருக்கிறார் இப்படி ஒரு அமைப்பு ஒன்று தொடங்கப் போகிறோம் நீங்கள் சப்போர்ட் பண்ணுவீங்களா என்று. ஓம் என்று சொல்லியிருக்கிறார் போல. அதை டக்ளஸ் தோழர் தான் சொன்னார் அவர் ஓம் என்று சொன்னவர் என்று.
தேசம்: உங்களை கேட்கும்போது நீங்க மறந்துட்டீங்க…
அசோக்: நான் கிளியரா மறுத்துட்டேன். ஈஸ்வரன் தோழர் ஓகே பண்ணிட்டார் என்று தோழர் சொல்லுறார். ஈஸ்வரன் இந்தக் காலகட்டத்துக்குப் பிறகு நாட்டுக்கு போயிட்டார். அங்க புளொட்டால கடுமையாக தேடப்பட்ட உடனே அவர் மலையகத்துக்கு போயிட்டார். மலையகத்தில் போய் தலைமறைவாக இருக்கிறார். தம்பா என்று ஒரு தோழர். நல்ல அருமையான தோழர். டெசோவில் இருந்தவர். எல்லாருக்கும் உதவி செய்கிற தோழர். அவர் அங்க அரசாங்க தொழில் பார்த்துக் கொண்டிருந்தவர். அவருடைய பாதுகாப்பில் ஈஸ்வரனும் 4 – 5 தோழர்களும் தங்கிவிட்டார்கள்.
அந்த நேரத்தில்தான் தோழர் கொழும்பில போய் ஈபிடிபிய உருவாக்கி ஈபிடிபி சம்பந்தமாக ஒரு அறிக்கை விடுகிறார். அந்த அறிக்கையில் ஈஸ்வரன் தங்களோட இருக்கிறார் என்று அந்தக் கமிட்டியில் ஈஸ்வரனின் பெயரும் வருகிறது. அப்போ ஈஸ்வரன் தலவாக்கலையில் இருக்கிறார். இந்த அறிக்கைகள் எல்லாம் பத்திரிகையில் வந்தவுடன் ஈஸ்வரன் பார்த்துட்டு மறுப்பறிக்கை விடுகிறார். தனக்கும் ஈபிடிபி க்கும் தொடர்பு இல்லை என்று. அப்பதான் அந்த சிக்கல் வருகிறது.
தேசம்: ஈபிடிபியின் உருவாக்கத்தில் உங்களுக்கு எந்தவிதமான பங்களிப்பும் இல்லை…
அசோக்: இல்லை இல்லை. அது அவங்கட சொந்த உருவாக்கம். அவர்களுடைய முயற்சி. என்னை இணயுமாறு கேட்டது அவ்வளவுதான். ஈஸ்வரன் சொன்னார் தான் முதலே மறுத்தது என்று. அவங்களுக்குள்ள நடந்த உரையாடல் எனக்கு தெரியாது.
தேசம்: இப்ப தோழர் கிட்டத்தட்ட உங்கட தள மாநாடு அதுக்குப்பிறகு மத்திய குழு, பின்தள மாநாடு எல்லாம் முடிந்து ஒரு ஸ்தம்பித நிலைக்கு வந்த தான் இலங்கையில் நிறைய அரசியல் மாற்றங்கள் நடக்குது. இந்தியா விடுதலை புலிகளின் தாக்குதலை முடுக்கிவிட்டு இந்திய ராணுவம் இலங்கைக்கு இறங்குது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதுக்கு முதல்ல ஈழம் தேசிய ஜனநாயக முன்னணி என்று சொல்லி ஒரு கூட்டு உருவாக்கப்பட்டது தானே. அதுல புளொட், விடுதலைப் புலிகள், டெலோ, ஈபிஆர்எல்எஃப் போன்ற அமைப்புகள் இணைந்த ஒரு கூட்டு முண்ணனி உருவாகியதே…
அசோக்: அது வந்து 84 கடைசியில். ஈழ தேசிய ஜனநாயக முன்னணி – ENLF என்ற பெயரில் எல்லா இயக்கங்களையும் இணைத்து ஐக்கிய முண்ணனி ஒன்றை உருவாக்கும் நோக்கத்தோடுதான் தொடங்கப்பட்டது.
தேசம்: அதுல நீங்கள் ஈடுபடலையா?
அசோக்: நாங்கள் தளத்தில் தானே. பின் தளத்தில் புளொட் இந்த ஐக்கிய முண்ணனி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. ஈழ தேசிய ஜனநாயக முன்னணியின் உருவாக்கத்தில் அதன் பொறுப்பாளராக இருந்தது தோழர் முகிலன் என்று சொல்லி இப்போது பரிசில் இருக்கிறார். ஈரோஸ் தோழர். அவர்தான் அந்த கமிட்டியில் ஒருங்கிணைக்கிற செயலாளரா இருந்தவர்.
அதற்கு முதல் என்ன நடந்தது என்று கேட்டால் ஒவ்வொரு அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அப்போ புளொட்டுடனும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அதேநேரம் புலிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்தது. புளொட் சொன்னது தாங்கள் புளொட் என்ற அமைப்பு வரும்போது ரெலா (TELA – Tamil Eelam Lebaration Army – ஒவ்ரோய் தேவன் தலைமையில் இயங்கிய புளொட்டின் துணை இராணுவக்குழு) என்ற அமைப்பையும் உள்ள சேர்க்க வேண்டும் என்று சொல்லி. அவங்க சொல்லிட்டாங்க ரெலா வை சேர்க்க இயலாது அதை அமைப்பாக அங்கீகரிக்க இயலாது, ஐந்து முக்கிய அமைப்புகள் மாத்திரம்தான் அதுக்குள்ள வரலாமென்று, புளொட், எல்ரீரீஈ, ஈரோஸ், ஈபிஆர்எல்எஃப், அடுத்தது ரெலோ அமைப்பு. இந்த முரண்பாடுகளால் புளொட் ENLF இணைப்பில் சேரவில்லை.
தேசம்: இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்குப்பிறகு அதுக்கு முதல் உங்களை தனிப்பட்ட முறையில் கேட்கிறேன். நீங்கள் ஈபிடிபி கூட போகவில்லை. ஈ.என் டி எல் எஃப் கூட போகல. தீப்பொறியோட போகல. என்ன விஷயம் உங்களைத் தடுத்தது. நீங்கள் தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட்டு கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு வரைக்கும் அரசியல் செயற்பாடுகளில் ஏதோ ஒரு வகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் இந்த அமைப்புகளுடன் போகல. ஈபிடிபியோடோ, ஈஎன்டிஎல்எஃப் கூட போகாததற்கு ஒரு காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன். சில நேரம் அவர்களின் தலைமையில் அரசியல் சித்தாந்தம். தீப்பொறியோடு ஏன் நீங்கள் போகல?
அசோக்: எனக்கு இயல்பாகவே தனிப்பட்ட உறவுகள் எல்லோரிடனும் இருந்தது. ஆனால் அவர்களுடைய அரசியல் தொடர்பாக ஆளுமை தொடர்பாக சந்தேகம் இருந்தது. ஏனென்றால் எல்லா தோழர்கள் மத்தியிலும் தங்களுடைய தவறுகளை ஏற்றுக்கொண்டு சுய பரிசீலனை செய்கிற போக்கு எப்பவுமே இருந்ததில்லை. அது டக்ளஸ் தோழராக இருந்தால் என்ன, ராஜன் ஆக இருந்தால் என்ன, ரகுமான் ஜானாக இருந்தால் என்ன நான் உட்பட. இந்தப் பண்பு இருக்காதவரைக்கும் தலைமைத்துவத்துக்கான எந்த அடிப்படையும் அவங்களிடம் இருக்காது. முதல் சுய விமர்சனம், விமர்சனம் எங்களுக்கு அவசியம். அது இருந்தால்தான் தலைமைக்குரிய குணாம்சம் வழிகாட்டியாக இருக்க முடியும்.
எனக்கு தெரியும் எல்லார்கிட்டயும் தங்களுடைய அதிகாரத்துக்கான போட்டி இருந்ததேயொழிய மக்கள் விடுதலைக்கான அமைப்பை உருவாக்கும் நோக்கம் யாரிடமும் இல்லை என்று. ஒரு வரலாறு ஒன்று இதுக்குத்தானே எல்லோருக்கும். இப்ப டக்ளஸ் தோழருடன் எனக்கு நெருக்கம் இருக்கு. ஆனா டக்ளஸ் தோழரின் அமைப்பை நம்பி போகவில்லை. ஏனென்றால் அந்த நேரத்தில் அமைப்புக்கள் அதன் தலைமைகள் மக்கள் விடுதலைக்கான எந்த வொரு முற்போக்கான கோட்பாடுகளையும் செயற்பாடுகளையும் கொண்டு இயங்க தயாராக இருக்கல்ல. இந்த புதிதாக உருவாகும் அமைப்புக்களும் அதே நிலைதான். எந்த வித்தியாசமும் இல்லை.
எங்களுக்கு படிப்பினையும், அனுபவமும் இருக்குத்தானே, எல்லாம் ஒரு பவர் பொலிட்டிஸ். மீண்டும் மீண்டும் நான் தவறுவிட விரும்பவில்லை. அதுக்குள்ள நான் போக விரும்பல. நான் நூறு வீதம் நல்லவனாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை எனக்கு. குறைந்தபட்சம் வாழ்க்கையில் ஒரு 50 வீதம் ஆவது நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி ஒரு 50 வீதம் மக்களுக்கு சேவை செய்கிற நோக்கமாக அமைப்பு இருந்திருந்தால் நான் போய் இருப்பேன். சில நேரம் என்னுடைய கணிப்பு பிழையாக இருக்கலாம். அதைவிட அவங்க நேர்மையான ஆட்களாக இருக்கலாம். ஆனால் என்னுடைய கணிப்பு அப்படித்தான் இருந்தது.
நாங்களும் வரலாற்று ரீதியாக ஒவ்வொரு ஆளையும் பார்த்துக்கொண்டு வாறம். எவ்வளவுதான் தனிப்பட்டவகையில் நல்ல மனிதர்களாக இருந்தாலும் அதிகார ஆசை தவறான திசைக்கு அவங்களை கொண்டு போய் விடுகிறது. இதே தவறை நான் தொடர்ந்து விட இயலாது. இதுவரை சந்தித்த கசப்பான அனுபவங்கள் தோல்விகள், வீழ்ச்சிகள் பற்றிய ஆய்வும், விமர்சனங்களும், என்னைப்பற்றிய சுயவிமர்சனங்களும் கட்டாயம் அவசியம். என்னை நானே குற்றம் சாட்டிக் கொண்டிருந்த காலம் அது. தொடர்ந்து தொடர்ந்து எங்களது கணிப்புக்கள் எதிர்பார்ப்புக்கள் தோல்விதானே கண்டது. மீண்டும் இதே தவறை நான் விட விரும்பவில்லை.
அந்த நேரத்தில எனக்கு அதிகார அரசியல் பற்றிய நிறைய அச்சம் இருந்தது. உண்மையில் பார்க்கப் போனால், அதிகாரம் கிடைக்க முன்னர் எல்லா மனிதர்களும் நல்லவங்களாத்தான் இருக்காங்க. முகுந்தனோ, ராஜனோ ஆரம்பத்தில் நல்லவங்கதான். அதிகாரம் கிடைக்கும்போது பிழையான மனிதர்களாக மாறிப் போறாங்க. இது தோழர் டக்ளசிக்கும் பொருந்தும். அதனால டக்ளஸ் தோழரோடு சேர்ந்து பின் முரண்பட நான் விரும்பவில்லை.
அடுத்தது என்னை நம்பி வந்த தோழர்களையும் திரும்பி அனுப்பி அவங்களுடைய பாதுகாப்பை, வாழ்க்கைக்கான பதிலை நான் தான் சொல்ல வேண்டும். அப்போ என்னோடு வந்த 10 – 15 தோழர்களை காப்பாற்றி நாட்டுக்கு அனுப்புவது தான் என்னுடைய கடமையாக இருந்தது. அந்த வெளியேறிய காலகட்டத்தில் தமிழ்நாட்டுத் தோழர்கள் நிழல் திருநாவுக்கரசு, செம்பியன், ஏழுமலை போன்றவங்க நிறைய உதவி செய்தாங்க. மறக்க முடியாத உதவிகள்.
தேசம்: அப்போ நீங்கள் முதல்ல சந்ததியர் வெளியேறும் போதோ நீங்கள் வெளியேறாமைக்காண முக்கியமான காரணம் உங்களை நம்பி வந்த தோழர்களா?
அசோக்: அது முக்கியம் தானே. போராட்டம் இயக்கம் பற்றிய எல்லாம் தோழர்களுக்கு நம்பிக்கை கொடுத்தவன் என்ற அடிப்படையில் என்னை நம்பி இயக்கத்திற்கு வந்த தோழர்களை கைவிட்டு நான் எப்படி செல்லமுடியும். முகாமில் இருந்து ட்ரெய்னிங் எடுத்தவர்கள். அவங்க என்னோட வெளியேறி வந்துட்டாங்க. அவங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் தானே. அவங்களை காப்பற்ற வேண்டும். அவங்களுடைய பாதுகாப்புக்கான வாழ்க்கைக்கான உத்தரவாதத்தை கொடுக்க வேண்டும்.
நான் மட்டும் தப்பிப் போய் வெளிநாட்டுக்கு வந்து வாழுறதில் அர்த்தம் இல்லை தானே. ஆரம்ப காலத்தில் இருந்து விடுதலைப் போராட்டத்திற்கு வந்திட்டம். இந்த போராட்டத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் கடைசி வரைக்கும் போராட வேண்டும். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை சரியான வழியில் கொண்டு போக வேண்டும் இல்லாதபட்சத்தில் கடைசி வரைக்கும் நம்பி வந்த தோழர்களுக்கான உயிர் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இதுதான் என் நோக்கமாக இருந்தது. என்னோடு வெளியேறிய தோழர்களுக்காக கடைசி வரைக்கும் நான் அவங்களோடு இருந்தேன். வெளி நாடு வருவதற்கான பல வாய்ப்புக்கள் எனக்கு வந்தன. நான் எப்பவோ வந்திருக்கலாம்.
தேசம்: அமைப்புக்குள்ள நீங்கள் உள்வாங்கின பெரும்பாலான ஆட்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்பிட்டீங்க. எப்படி தளத்திலிருந்து 17 பேர் வந்து இருக்கிறீங்க நான்கு மத்திய குழு உறுப்பினர்கள் மற்றது உங்கட கிராமங்களில் இயக்கத்துக்கு உள்வாங்கின பல தோழர்கள் இருந்திருப்பார்கள். இவர்களுக்கு எல்லாம் பிறகு என்ன நடந்தது.
அசோக்: தளத்திலிருந்து வந்த அந்த தோழர்கள் ஓரளவு வளர்ந்தவர்கள் தங்கள் தங்களுக்கான வாழ்க்கையை அவங்களே தேடிக் கொண்டார்கள். எங்க கிராமத்து தோழர்களும் தனியாக சென்று பாதுகாப்பான ஒரு இடத்தில் வீடு எடுத்துதங்கி இருந்தாங்க. என்றாலும் எல்லோரும் பின் தளத்தில் மிகவும் கஷ்டம்தான் பட்டோம். தெரிந்தவர்கள், தமிழ்நாட்டு நண்பர்கள், முன்னர் வெளியேறி சுயமாக தங்கி இருந்த புளொட் தோழர்கள் என்றுபலரும் உதவி செய்தாங்க.
தேசம்: வந்த 17 தோழர்களில் தளத்துக்கு போகாமலே…
அசோக்: புலிகளின் கெடுபிடி இருந்த காலம் அது. தளத்துக்கு பல தோழர்கள் போகவில்லை. பிறகு குமரன் போனவர். அவர் விடுதலைப் புலிகளால் அரெஸ்ட் பண்ணப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். ஈஸ்வரன் தோழர் நாட்டுக்கு போனவர். மத்தவங்க எல்லாரும் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அடுத்தது நாங்கள் ராஜனிட்ட இருந்து வெளியேறின போது தோழர்களிடம் சொன்னம் நீங்கள் வெளியேற வேண்டாம் என்று. எங்களோடு வருவதை விட ராஜனோடு இருக்கிறது பாதுகாப்பு. உயிர் பாதுகாப்பு. நாங்கள் ராஜனுடன் முரண்பட்டு வெளியேறும்போது நீங்கள் வெளியேற வேண்டாம் என்று சொல்லி விட்டோம். நீங்கள் வந்தீர்கள் என்றால் எங்களால் பாதுகாப்பு தர முடியாது. அப்போ நீங்கள் அங்க இருந்து கொண்டு நாட்டுக்கு போவதற்கான முயற்சியை செய்யுங்கள். என்று. நாங்களும் அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறோம். சரி வரும்போது சொல்லுகிறோம் வாருங்கள் என்று.
அப்படி இருந்தும் ஒரு 10 -15 தோழர்கள் எங்களுடன் வந்து விட்டார்கள். ராஜனும் பாதுகாப்பாக நிறைய தோழர்களை அனுப்பி வைத்தார். ஈ.என்.டி.எல்.எஃப் உருவாகி இந்திய ராணுவம் வந்தபோது நாட்டுக்கு போயிட்டாங்க தானே. எங்களோடு வந்த தோழர்கள் அவ்வளவு பேரையும் மிகப் பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பினோம். சில தோழர்களை படிப்பித்தோம். தோழர் அர்ச்சுனா ஜெகநாதன் என்னோடு துணையாக இருந்தார். பிறகு ஊருக்கு போயிட்டாங்க. எல்லாரையும் அனுப்பிட்டுத்தான் கடைசியாக நான் வந்து கப்பல் ஏறுகிறேன்.
தேசம்: எத்தனையாம் ஆண்டு அது…
அசோக்: 92 நடுப்பகுதி…
தேசம்: இது எண்பத்தி ஆறு கடைசி பகுதி நடக்குது. பிறகு 87 இருந்து நான்கு ஆண்டுகள்…
அசோக்: ஏனென்றால் நிறைய தோழர்கள் உடனடியாக போக முடியாது தானே. அவங்களை வைத்து தோட்டம் ஒன்று போட்டு… அந்த வாழ்க்கை என்பது சரியான கஷ்டம். மிகவும் மோசமான மன உளச்சல் கொண்ட காலம் அது. பொருளாதார ரீதியாக சரியாக கஷ்டப்பட்டோம். அப்போ தோட்டம் போட்டு ஒரு கொப்பரேடீவ் மாதிரி கூட்டுறவு கூட்டுப்பண்ணை போட்டு அந்த கிராம மக்களோடு வாழ்ந்து அது வேறு ஒரு அனுபவம். காணி பாதர் ஒருவர் தந்தவர். பொருளாதார வசதிகளையும் அவரே தந்தவர். இப்படி கொஞ்ச நாள் கழிந்தது.
ரா ஜீவ் காந்தி படுகொலையோடு எங்களுக்கும் பொலிஸ் நெருக்கடி வந்துவிட்டது.
தேசம்: அதற்குப் பிற்பாடு எண்பத்தி ஆறு காலப்பகுதியில் நீங்கள் வெளியேறின பிற்பாடு அமைக்கப்பட்ட புளொட் அமைப்பு இருக்குதானே அதில் நீங்கள் சார்ந்த யாராவது இருந்தார்களா. அல்லது இப்பவும் இருக்கினமா யாரும் சொல்லக் கூடியவர்கள்…
அசோக்: அதுல ஆனந்தி என்றொரு தோழர் இருக்கிறார். ஆரம்ப காலதோழர். புளொட்டில் இப்பவும் இருக்கிறார். நல்லவர். தானும் தன் பாடும். சமீபத்தில் புளொட் தோழர் ஒருவரோடு பேசிய போது ஆனந்தி புளொட் வரலாறு எழுத தொடங்கி உள்ளதாக சொன்னார். புளொட்டில கடைசி வரை இருந்து புளொட்டை பயன்படுத்தி, எல்லா தவறுகளுக்கும் உடந்தையாக இருந்துபோட்டு தனிப்பட்டபிரச்சனையால் வெளியேறி இன்று புளொட்டைபற்றியும் புளொட்தோழர்களைப் பற்றியும்மிக மோசமாக எழுதும் ஆட்கள்பற்றியும் அவங்கட உண்மை முகம் வெளிவரும் என்றார்.
தேசம்: ஆனந்தி எதில் எழுதுகின்றார்?
அசோக் : அவர் இப்பதான் எழுத தொடங்கி உள்ளார் என நினைக்கிறன். எதில் வருமோ தெரியவில்லை. அவர் எழுதுவது நல்லது. புளொட்டின் உள்ளும் புறமும் அவருக்கு தெரியும்.
தேசம்: அது நீங்கள் அந்த நான்கு ஆண்டு காலப்பகுதியில் புளொட்டால எப்படியான பிரச்சினை வருது..
அசோக்: நாங்கள் வெளியேறி ENDLF உருவாக்கிய காலத்தில் ஒரு நாள் நானும் ஆதவன் தோழரும் வீதியால் போய்க் கொண்டிருக்கும் போது மாணிக்கதாசன் ஜீப்பில் வந்து வெருட்டி எங்களை ஃபுல்லா வளைச்சாச்சு சுடுவதற்கு தயார். 5 – 6 பேர் ஜீப்ல வந்தார்கள். எங்ககிட்ட ஒன்றுமே இல்லை. நாங்க சைக்கிள்ல போனாங்க. அப்போ சத்தம் போட ஊர் ஜனங்கள் எல்லாம் வந்து வந்துவிட்டாங்க. அவங்க எல்லாம் வந்து பிரச்சினைபட்டவுடன் இவர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போய்விட்டது. அப்போ எங்களுக்கு எச்சரிக்கை செய்தார்கள் எங்கேயாவது நடமாடுவதை கண்டால் வெடி வைப்போம் என்று.
அப்போ எங்களுக்கு என்ன செய்றது என்று தெரியல. பிறகு நான் தோழர் கண்ணனுடன் இது பற்றி கதைக்க அவர் சொன்னார் நீங்கள் ஒருக்கா ஆபீஸ் வாங்க வாசுதேவா, ஆனந்தி ஆட்களோடும் இதுபற்றி கதைக்க வேண்டும் என்று ஒரு டேட் தந்தார். ஒரு பின்னேரம் வரச்சொல்லி. அப்போ நான், ஈஸ்வரன், ஆதவன், பாபுஜி நான்கு பேரும் கதைக்கிறதுக்கு போனோம். அங்க கண்ணன் இல்லை. அந்த நேரம் டெலிபோன் கம்யூனிகேஷன் இல்லைதானே. முதலில் சொன்னதை அதை நம்பித்தான் போனோம். ஆனா அங்க இல்லை. நாங்க திரும்பி வந்துட்டோம். காரில் ஏறப் போக மாணிக்கதாசன் என்ன செய்திருக்கிறார் என்றால் அங்க ஆபீசுக்கு முன்னால மல்லிகை கொடி படர்ந்து போயிருந்தது. அதுக்குள்ள போய் ஒளித்து இருந்திருக்கிறார். எங்களுக்கு தெரியாது.
காரில் ஏறும்போது பட பட படவென வெடி. முதல் வெடி எனக்கு விழுந்துட்டுது. நான் கீழ விழ மற்றவர்களும் விழுந்துட்டாங்க. இல்லாவிட்டால் எல்லோருக்கும் வெடி பட்டிருக்கும். எனக்கு ரெண்டு இடத்துல வெடி. தொடர்ந்து வெடி நடக்குது. நாங்க தற்பாதுகாப்புக்கு ஆயுதங்கள் கொண்டு போனாங்க. காருக்குள்ள இருந்தது. உடனே ஒரு தோழர் எடுத்து திருப்பி சுட்டார். சுட்டதும் அடங்கிப் போய்விட்டது. மாணிக்கதாசன் சுடுவதை விட்டுட்டார். நான் காயப்பட்டு விட்டேன். நான் ஆஸ்பத்திரிக்கு போயிட்டேன். எனக்கு பிறகுதான் தெரியும் நாங்கள் தற்காப்புக்கு திருப்பி சுட்டு ஒரு அப்பாவி தோழர் அவருக்கு வெடி. அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டுவர அவர் இறந்துவிட்டார். பாவம் அவர் வேற எங்கேயோ நின்றிருக்கிறார் துப்பாக்கி சன்னம் போய் அவரில பட்டிட்டு.
தேசம்: அவர் உங்கள் மீது தாக்குதல் நடத் தினவரா?
அசோக்: இல்லை இல்லை. அவர் அருமையான தோழர். மாணிக்கதாசன் தான் சுட்டது. அவருக்கு தெரியாது தானே. அவர் அங்காள நின்றபோது அவருக்கு வெடி பட்டுவிட்டது. அவர் காயப்பட்டிருந்தவர். அருமையான தோழர். அவர் பாவம்.
தேசம்: என்ன பெயர்?
அசோக்: அவரோட பெயர் மறந்துட்டேன். அமுதன் பெயர் என நினைக்கிறேன். பிறகு நான் ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். காலப் போக்கில் பிறகு என்னால் நடக்க முடியாமல் போய்விட்டது. கொஞ்ச காலத்தில் நான் படுத்த படுக்கையாகி விட்டேன். பிறகு திருப்பத்தூரில் சுவிடிஷ் மிசனரி ஹாஸ்பிடல் இருக்கு. அங்க போனேன்… அங்க சொன்னாங்க நீங்கள் பக்கத்திலே பிள்ளையார்பட்டியில் சித்த ஆயுள்வேத ஆஸ்பத்திரிக்கு போங்க என்று சொல்லி அவங்கதான் சிபாரிசு செய்கிறார்கள்.
அங்க போனதும் அது குன்றக்குடி அடிகளாருடைய நிர்வாகத்தின் கீழ் அந்த வைத்தியசாலை நடக்குது. . சுமார் ஒரு வருஷம் நான் அங்கே இருக்கிறேன். அதுக்குப் பிறகுதான் நான் நடக்க முயன்றேன். அந்த காலகட்டத்தில் குன்றக்குடி அடிகளாரின் மகள் மங்கையர்க்கரசி அக்கா குடும்பம்தான் என்னை பராமரித்தாங்க. அந்த வைத்தியசாலையின் பொறுப்பாளர் கோவிந்தசாமி அவர்கள் என் மீது அக்கறை கொண்டு மிகவும் அன்பாக வைத்தியம் செய்தாங்க. எல்லாம் இலவசமாகவே செய்தார். இவை எல்லாம் மறக்க முடியாத உதவிகள்.
தேசம்: அப்பதான் உங்களுக்கு அவர்களுடன் தொடர்பு வருதா…
அசோக்: இல்லை முதலே தெரியும் இயக்கத்துக்கு நிறைய உதவி செய்து கொண்டிருந்தவர்கள்.
தேசம்: எப்படி அந்த உறவு வந்தது…
அசோக்: குன்றக்குடி அடிகளார் அவர் இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக அக்கறை கொண்டு செயற்பட்டவர். குன்றக்குடி அடிகளாரை பொருத்தவரையில் அவர் ஒரு ஆன்மீகவாதி. அதே நேரம் பெரியாருடைய மேடைகளில் பெரியாருடைய கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்து துணிந்து பேசும் நபராக இருந்தார். ஒரு பக்கம் ஆன்மிகம். இன்னொரு பக்கம் மாக்சிசம். அவருடைய அறைக்க போனீங்க என்றால் கால் மாக்ஸ், லெனின் எல்லாம் இருப்பார்கள். மார்ச்சியத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அவருடைய மகள்தான் மங்கையற்கரசு அக்கா. அவர் கணவனும் எஙகளுக்கு நிறைய உதவிகள் செய்தவர். அவர் ஒரு பேராசிரியர்.
தேசம்: குன்றக்குடி அடிகளார் ஒரு வீரசைவர் பரம்பரை அப்படியா?
அசோக்: வீர சைவர் ஆக இருக்க முடியாது. ஆதினம் தான். அவர்கள் சைவர்கள் தான். ஆனால் இந்த பிராமணிய கொள்கை இல்லை. ஆதிசைவர்கள் ஒரு முற்போக்கான வீரசைவர்கள். அதே மாதிரியான பண்புதான் இவர்களிடமும் இருந்தது. ஆரம்ப காலத்திலேயே தெரியும் அவரை.
தேசம்: உண்மையிலேயே தமிழ்நாட்டில் எத்தனையோ நூற்றுக்கணக்கானவர்கள் எங்களுடைய போராட்டம் சார்ந்தும் போராளிகளையும் பராமரித்ததில் முக்கிய பங்கு வகித்தவர்கள்…
அசோக்: 83 கலவரத்திற்கு பிறகு தமிழ்நாட்டு மக்கள் நிலையில் நாங்கள் இருந்தால் நாங்கள் எந்த உதவியும் செய்ய மாட்டோம். அந்த மக்கள் விடுதலைப் புலிகளோ, புளொட்டோ என்று பார்க்காமல் உணர்வுபூர்வமாக உதவி செய்தவர்கள். போராளிகள் என்ற அடிப்படையில் மிக உதவிகள் செய்தவர்கள். தமிழ்நாட்டு அரச மட்டத்தில் இருப்பவர்களிடம் இருந்தும் நிறைய உதவிகள். அந்த உணர்வு பூர்வமான பங்களிப்பை உதவிகளை நாங்கள் மதிக்கவில்லை.
தேசம்: அந்த மண்ணை நாங்கள் தவறாக பயன்படுத்தி இருக்கிறோம்.
அசோக்: போராட்ட வரலாற்றை மீளாய்வு செய்தோம் என்றால் நிறையத் தவறுகள் எங்கள் இயக்கங்கள் பக்கத்தில் இருக்கு. அதற்கு வெறுமனே இயக்கம் என்று சொல்ல இயலாது தானே நாங்கள் தானே இயக்கம். முழுப்பேரும் அதைப் பொறுப்பெடுக்க வேண்டும். குற்றம் சாட்டி போட்டு போக இயலாது.
(குறிப்பு: இதில் குறிப்பிடப்படும் ஆனந்தி சில மாதங்களுக்கு முன் இலங்கையில் இயற்கை எய்தினார்.)