பல்கலைகழக பகிடிவதை

பல்கலைகழக பகிடிவதை

பல்கலைகழங்களில் தொடரும் பகிடிவதைகள் – ஆறு மாத காலத்திற்குள் 82 முறைப்பாடுகள் !

பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட விசேட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 82 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இந்த விசேட தொலைபேசி இலக்கமானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த விசேட தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் காணப்படுவதோடு 3000ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த முறைப்பாடுகள் தொடர்பில் செயற்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பல்கலைகழகத்தில் மாணவி ஒருவரை பகிடிவதைக்குட்படுத்திய 6 மாணவர்கள் பொலிஸாரால் கைது !

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பகிடிவதைக்குட்படுத்திய 6 மாணவர்கள் சமனலவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதியன்று ‘1997’ என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சமனலவெவ பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிகள் பீடத்தின் நான்காம் வருட மாணவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

குறித்த மாணவர்கள் 6 பேரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) சமனலவெவ பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரவக, ருக்கஹவில, அலுத்தாராம, இமதுவ மற்றும் கித்தலாவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23, 24 மற்றும் 25 வயதுடைய மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.