பல்கலைகழக மாணவர் தற்கொலை

பல்கலைகழக மாணவர் தற்கொலை

பல்கலைகழக தமிழ் மாணவர்களிடையே மலிந்து போகும் தற்கொலைகள் – கிளிநொச்சியில் மீண்டும் ஒரு பல்கலைகழக மாணவி தற்கொலை !

கிளிநொச்சி, கோனாவில் கிராமத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கிளிநொச்சி கோனாவில் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியுமான வசந்தகுமார் டீலக்சியா என்பவரே தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் வீட்டில் தூக்கிட்டிருந்த நிலையில்  சகோதரனால் மீட்கப்பட்டு கிளிநொச்சி  மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

அதனையடுத்து, குறித்த சடலம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழர் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களிடையே தற்கொலைகள் மலிந்து போய் காணப்படுவதுடன் இதன் நீட்சியால்  கல்விகற்ற இளைஞர் தலைமுறை ஒன்றை நாம் இழந்துகொண்டிருக்கின்ற ஒரு துர்ப்பாக்கியமான சூழலும் உருவாகியுள்ளது. கடந்த ஜுலை 30 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழக பட்டதாரி மாணவி ஒருவர் யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்திருந்தார். அது போல ஜுன் மாதம் தென் இலங்கை பல்கலைக்கழகங்களில் கற்ற இரண்டு யாழ்ப்பாண மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தனர். இதேவேளை கடந்தமாதம் (ஆகஸ்ட்) கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த சந்திரமோகன் தேனுஜன் (22) என்ற பல்கலைகழக மாணவன் தற்கொலைசெய்து இறந்திருந்த நிலையில் இன்று இந்த தற்கொலை பதிவாகியுள்ளது.

இலங்கையில் அதிகரித்துள்ள தற்கொலைகள் தொடர்பில் குறிப்பிட்டுள்ள இலங்கை மனநல விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் குறிப்பிட்ட போது,

கடந்த 3 வருடங்களில் மாத்திரம் 9,700  தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வருடத்தில் மாத்திரம் 3406 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் அந்த எண்ணிக்கை அதற்கு முன்னைய வருத்துடன் ஒப்பிடும் போது 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

மேலும் தற்கொலை செய்துகொண்டவர்களில் நூற்றுக்கு 83 வீதமான ஆண்களும், 17 வீதமான பெண்களும் உள்ளடங்குகின்றனர். தற்கொலை செய்துகொண்டவர்கள்  கல்வி கற்ற தரப்பினர் என்பதுடன்  உயிரிழந்தவர்களில் 40 வீதமானவர்கள் சாதாரண தரத்தில் சித்தி அடைந்து உயர்தரத்தில் கல்வி கற்றவர்களாவர்.

இதேவேளை தற்கொலை செய்து கொண்டவர்களில் 22 வீதம் பேர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். தற்கொலை செய்துகொண்டவர்களில் 35 வீதமானவர்கள் வேலையில்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.