பஷில் ராஜபக்ஷ

பஷில் ராஜபக்ஷ

“கொவிட் பெருந்தொற்று தாக்கம்,பயங்கரவாதம் ஆகிய உயிரச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களை ராஜபக்ஷர்களே காப்பாற்றினார்கள்.” – பஷில் ராஜபக்ஷ

விமர்சனங்களை கண்டு பொறுமையாக இருப்பதால் எம்மை கோழைத்தனம் என்று கருத வேண்டாம். மக்களாணையுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவோம்.கொவிட் பெருந்தொற்று தாக்கம்,பயங்கரவாதம் ஆகிய உயிரச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களை ராஜபக்ஷர்களே காப்பாற்றினார்கள்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் பொதுஜன பெரமுனவே ஆட்சியமைக்கும் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும்,முன்னாள் நிதியமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு சுஹததாஸ உள்ளக அரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2016 ஆம் ஆண்டு பாரிய சவால்களுக்கு மத்தியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்டு பாரம்பரியமான அரசியல் கட்சிகளை வீழ்த்தி சகல தேசிய தேர்தல்களிலும் நாங்கள் வெற்றிப்பெற்றோம். ராஜபக்ஷகளுக்கு எதிராக கடந்த ஆண்டு கட்டவிழ்த்து விடப்பட்ட சகல வன்முறைகளையும் மக்களாணையுடன் வெற்றிக் கொண்டு வெற்றிப்பெற்றுள்ளோம்.

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சகல தேசிய தேர்தல்களிலும் நாங்கள் வெற்றிப்பெறுவோம்.பொதுஜன பெரமுனவே பலமான அரசியல் சக்தியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.ஆட்சியில் உள்ளபோதும்,ஆட்சியில் இல்லாத போதும் நாங்கள் எவர் மீதும் வைராக்கியம் கொள்ளவில்லை.பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு அரசியல் பழி தீர்க்கப்பட்டது.எமது கட்சி ஆதரவாளர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.இவற்றுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை.

30 வருடகால பயங்கரவாத யுத்தத்தை நிறைவு செய்து பஸில் ராஜபக்ஷர்களே நாட்டை அபிவிருத்தி  செய்தார்கள்.இந்த உரிமையை எவருக்காகவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.சமூக வலைத்தளங்களில் எம்மீது சேறு பூசப்படுகிறது.நாங்கள் பல விமர்சனங்களுக்குள்ளாக்கப்படுகிறோம்.

விமர்சனங்களை கண்டு அமைதியாக இருப்பதால் எவரும் எம்மை கோழைகள் என்று கருத கூடாது.சிங்கத்தை சீண்டினால் அதன் விளைவு பாரதூரமானதாக இருக்கும் என்பதை எம்மை விமர்சிப்பவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.எமது அரசியல் எழுச்சி அடுத்த ஆண்டு உறுதிப்படுத்தப்படும் என்றார்.

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் பஷில் ராஜபக்ஷ!

முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்களாணை இல்லை என்ற தவறான கருத்தை மே தின கூட்டத்துடன் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்.

பெரும்பாலான மக்கள் பொதுஜன பெரமுனவுக்கும், ராஜபக்ஷர்களுக்கும் சார்பாகவே செயற்படுகிறார்கள்.

மே தின கூட்டம் தொடர்பில் கடந்த வாரம் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.

பிரதான வீதியை மரித்து மேடை அமைத்து கூட்டத்தை நடத்த எந்த அரசியல் கட்சிக்கும் அனுமதி வழங்க முடியாது என பாதுகாப்பு தரப்பினர் உறுதியாக குறிப்பிட்ட பின்னணியில், ஒரு அரசியல் கட்சிக்கு மாத்திரம் எவ்வாறு நடுவீதியில் மேடையமைக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.

நாடாளுமன்றத்தை சுற்றி வளைக்கும் வகையில் மக்களை தவறாக வழி நடத்திய அரசியல் கட்சிக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளித்தோம்.

இதுவரை இந்த முறைப்பாடு தொடர்பில் உரிய அரசியல் கட்சி பிரநிதிகளிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் இந்த அரசியல் கட்சி முறையற்ற வகையில் செயற்படும் போது அதிகாரம் கிடைத்து விட்டால் இவர்கள் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை எவ்வாறு பாதுகாப்பார்கள் என்பதை மக்கள் ஆராய வேண்டும்.

பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டத்தில் எமது தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளுக்கு அமைய அரசியல் தீர்மானங்களை எடுத்து முன்னோக்கிச் செல்வோம்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குகிறோம். எமது கட்சி கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.

அவர் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவாக இருக்கலாம். ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள்.’ எனத் தெரிவித்துள்ளார்.

“எங்கள் கட்சியில் யாரும் விற்பனைக்கு இல்லை.”- பசில் ராஜபக்ஷவுக்கு சஜித் ட்வீட் !

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கும் முயற்சியில் பசில் ராஜபக்ச ஈடுபட்டுள்ளார் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர்,

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விற்பனைக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
பசில்ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்குவதை கைவிடுங்கள் – ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விற்பனைக்கு இல்லை. ஏனையவர்களை விலைக்கு வாங்க முயன்றால் சேதமடைந்த பழுதடைந்த பொருட்கள் குறித்து அவதானமாகயிருங்கள் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சு பதவி பறிக்கப்பட்டமைக்கான காரணம் தொடர்பிலும் – பஷில் ராஜபக்ஷவின் ரகசிய திட்டங்கள் தொடர்பிலும் பகிரங்கப்படுத்தினார் விமல்வீரவங்ச !

“இனிமேல் எந்தக்காரணத்தை கொண்டும் அமைச்சுப்பதவியை ஏற்கப்போவதில்லை” என விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதிவியிலிருந்து நேற்று திடீரென நீக்கப்பட்டதையடுத்து, இன்று(வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

 

“இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன்னர் இருந்தே எமது தரப்புக்குள் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. ஏனெனில் பசில் ராஜபக்ஷ இந்நாட்டின் ஜனாதிபதியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் கட்சியை தனது சொந்தக் கட்சியாக நினைத்து செயற்பட ஆரம்பித்தார்.

ஆனால், நாம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பின்னர் கோட்டாபய ராஜபக்ஷதான் ஜனாதிபதியாக தகுதியானவர் என கருதி, நாம் எமது செயற்பாடுகளை மேற்கொண்டோம்.

இது பசில் ராஜபக்ஷவின் கனவுக்கு தடையாக அமைந்தது. இறுதியில் அவரும் விருப்பப்படாமல் கோட்டாபய ராஜபக்ஷவுக்காக வேலை செய்தார்.

2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியடைந்தபோது, அப்போதைய ஜனாதிபதியிடம் சென்று தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தருமாறு பசில் ராஜபக்ஷ கோரினார்.இதனை மஹிந்த ராஜபக்ஷவும் ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் இறுதியில், யாருக்கும் சொல்லாமல் பசில் நாட்டை விட்டுச் சென்றார்.

அரசாங்கத்துக்குள் பிரச்சினைகள் தொடர்ச்சியாக இருந்தன. 20 ஆவது திருத்தச்சட்டத்திலிருந்து இது ஆரம்பமானது.

இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்கு அமைச்சர் அந்தஸ்த்து வழங்கியமை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கியமை என அனைத்து விடத்திலும் நாம் எதிர்ப்பினை வெளியிட்டோம்.

 

இது கொள்கை ரீதியான முரண்பாடாகும். இதனால் தான் இன்று ஒட்டுமொத்த நாடும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தான் நாம் மக்களுக்கு எடுத்துக் காட்டினோம். நாடு பள்ளத்தில் விழுந்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க எம்மால் முடியாது.

இந்த நிலையில், நாம் அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டுவிட்டோம் என என்னையும் உதயகம்மன்பிலவையும் அமைச்சர் பதவிகளிலிந்து நீக்கியுள்ளார்கள்.

எம்மை நீக்கியமையால் நாட்டுக்கு டொலர் கிடைத்துவிடுமா? அல்லது எரிப்பொருள் ஊற்றெடுக்குமா? மின்சாரப் பிரச்சினைகள் இல்லாது போகுமா? அல்லது பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா?அத்தோடு, பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றுக்கு கொண்டுவர நாம் என்றும் ஆதரவளிக்கவில்லை. இதற்கு ஆரம்பத்திலிருந்தே நாம் எதிர்ப்பினைத் தான் வெளியிட்டோம்.

பசில் ராஜபக்ஷவினால் தான் நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் இந்த நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. அவர் அமெரிக்க பிரஜையாவார். அமெரிக்கா நினைத்தால் நிதித்தூய்மையாக்கலின் கீழ் அவரை எந்நேரத்திலும் கைது செய்ய முடியும். அதிலிருந்து தப்ப வேண்டுமெனில் அவர் அமெரிக்காவுக்காக இங்கு சேவையாற்ற வேண்டும்.இந்தோனேசியாவைப் போன்று இந்த நாட்டை மாற்ற வேண்டும் என்பதுதான் அவரின் திட்டமாகும். இதனை இலக்காகக் கொண்டுதான் அவர் செயற்பட்டு வருகிறார். நாட்டை கொள்ளையடிக்க மட்டும்தான் அவரால் முடியும். இதுதான் இன்றைய உண்மையான கதை.

எம்மை பதவியிலிருந்து நீக்கியமைக்கு பிரதமர் உடன்படவில்லை என்றே தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஜனாதிபதியின் கீழ் இனி மேல் அமைச்சர் பதவியொன்றை பெற்றுக் கொள்ள நாம் எப்போதும் தயாரில்லை.

இந்த அரசாங்கத்தை பசில் ராஜபக்ஷதான் வழிநடத்துகிறார். ஜனாதிபதியால் நிதியமைச்சின் செயலாளருடன் கலந்துரையாட முடியாதுள்ளது. இதுதான் இன்றைய நிலைமை.

இவை தொடர்பாக நாம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எதிர்ப்பினை வெளியிட்டோம். அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் எம்மை நீக்கியுள்ளார்கள்.

அரசாங்கத்திலுள்ள நிறைய பேருக்கு இந்த நிலைமை புரிந்துள்ளது. அவர்களும் அதிருப்தியுடன் தான் இருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் எமது கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன. ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை.

எமக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எவ்விதப் பிரச்சினையும் கிடையாது. நாம் மக்களுக்காகவே அரசியலுக்கு வந்தோம். இதற்காக கதைத்தால் எமது பதவிகள் பறிபோகும் என்றால் நாம் கவலையடையப்போவதில்லை.“ எனத் தெரிவித்துள்ளார்.

 

 

மக்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை பிக்பொக்கெட் அடிக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ – சஜித் பிரேமதாஸ சாடல் !

நாட்டின் அப்பாவி மக்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிக்பொக்கெட் அடிக்கப் பார்க்கிறார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (09) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலம் இது தொடர்பில் பேசியுள்ள அவர்,

நாட்டில் மிகப்பெரிய நிதியமாக ஊழியர் சேமலாப நிதியம் காணப்படுகிறது. இங்கு 3 ட்ரில்லியன் நிதி காணப்படுகிறது. இதனூடாக 250 பில்லியன் இலாபமாகப் பெறப்படுகிறது. இவ்வாறான நிலையில் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 25 சதவீத வரியை நிதி அமைச்சு அறவிட உள்ளது.

நாட்டின் அப்பாவி மக்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை நிதி அமைச்சர் பிக்பொக்கெட் அடிக்கப் பார்க்கிறார். தொழிலாளர்களின் பணத்திலிருந்து பில்லியன் கணக்காணப் பணத்தைப் பெற்று நிதி அமைச்சர் தனக்கு நெருங்கியவர்களை மகிழ்விக்கப்போகிறார். என தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

EPF, ETF நிதிகளை கொண்டு மேற்கொள்ளப்படும் முதலீடுகள் ஊடாகக் கிடைக்கப்பெறும் இலாபத்துக்கு வரியை செலுத்த வேண்டும் வருமான வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டார்.

எனினும் EPF, ETFக்கு வரியை அறிவிடுவது தவறென தொழில் அமைச்சு கொள்கை ரீதியாக முடிவொன்றை எடுத்துள்ளது. இந்த முடிவை நாம் சில மாதங்களுக்கு முன்பாகவே இலங்கை வருமான வரித் திணைக்களம், திறைசேரி ஆகியவற்றுக்கு அறிவித்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கீடு செய்த எதிர்க்கட்சி தலைவர் சஜித், ஊழியர் சேமலாப நிதியத்துக்கு வரி அறவிடுவதை தொழில் அமைச்சு எதிர்க்கிறது என்றால், நிதி அமைச்சு எவ்வாறு இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டது எனவும் கேள்வி எழுப்பினார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வரி அறவிடுவதில் இருந்து EPF, ETF நிதியங்களை விடுவிக்க வேண்டும் என சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதனூடாக இப்பிரச்சினைக்கு இலகுவில் தீர்வை காண முடியும் என்றார்.

இறுதியுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட கள்ளச்சந்தை டொலர் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு !

கள்ளச்சந்தையில் பெறப்பட்ட டொலரை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் வடகொரியாவிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தது என வெளியான தகவல்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

நாங்கள் கள்ளச்சந்தையில் பெறப்பட்ட டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை பெற்றோம் – பசில் என்ற தலைப்பில் செய்தி இணையத்தளமொன்றில் வெளியான தகவல் குறித்து தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சருடன் இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்- நிதியமைச்சர் தான் தெரிவித்ததாக வெளியான கருத்துக்களை முற்றாக நிராகரித்துள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

200 மில்லியன் ரூபா நிதியில் 5 மில்லியன் நாட்காட்டிகளை அச்சிட்ட வழக்கு – பஷிலுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு .?

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 200 மில்லியன் ரூபா நிதியைச் செலவிட்டு 5 மில்லியன் நாட்காட்டிகளை அச்சிட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவர்கள் இருவரும் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்தவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடு பொருளாதார சிக்கலில் – நத்தார் கொண்டாட அமெரிக்கா சென்றுள்ள பஷில்ராஜபக்ஷ !

நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வேளையில், எவ்வித தடையுமின்றி நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக நிதியமைச்சர் அமெரிக்கா சென்றுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘கிராமத்திலிருந்து ஆரம்பிப்போம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த 15ஆம் திகதி தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது டொலர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் துறைமுகத்தில் விடுவிக்க முடியாத கொள்கலன் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் சமையல் அறைகளில் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாவதுடன்,  யுகதனவி ஒப்பந்தம் விவகாரம் உச்சத்தில் இருக்கும் வேளையில் நாட்டின் நிதியமைச்சர் தனிப்பட்ட விடயங்களுக்காக வெளிநாடு செல்வது சரியல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

“கடன் இல்லாத நாட்டையே நாங்கள் உங்களிடம் ஒப்படைப்போம்.” – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ

வெளிநாடுகளுக்கு வழங்க இருக்கும் அனைத்து டொலர்களையும் அடுத்த வருடத்துக்குள் வழங்குவோம். அதற்கான திட்டங்களை நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம். அத்துடன் கடன் இல்லாத நாட்டை ஏற்படுத்துவதே எமது இலக்கு. கடன் இல்லாத நாட்டையே நாங்கள் அடுத்துவரும் அரசாங்கத்துக்கு ஒப்படைப்போம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதி அமைச்சு, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சு, நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு, சமுர்த்தி உள்ளக  பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக வெளிப்படையாகவே வரவு செலவு திட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கின்றேன். தற்போது நாட்டின் பொருளாதாரம் பாரிய பிரச்சினையில் இருக்கின்றது. என்றாலும்  பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாங்கள் தேவையான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

விசேடமாக வெளிநாடுகளுக்கு வழங்க இருக்கும் அனைத்து டொலர்களையும் அடுத்த வருடத்துக்குள் வழங்குவோம். ஜனவரி மாதம் 500 டொலர் மில்லியன் வழங்க இருக்கின்றது. ஜூலை மாதம் ஆயிரம் டொலர் மில்லியன் வழங்க இருக்கின்றோம். நாங்கள் பெற்றுக்கொண்ட கடன் தொகையும் இருக்கின்றது. அனைத்தையும் அடுத்த வருடத்தில் வழங்குவோம் என்றும் கூறினார்.

“9 மாகாணங்களையும் ஒன்றாகக் கருதி இன, மத பேதமின்றி வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.” – நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் வடக்கு, கிழக்கு தொடர்பில்  கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என  நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு என்று பாராது 9 மாகாணங்களையும் ஒன்றாகக் கருதி இன, மத பேதமின்றி வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று சனிக்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மேலும் கூறுகையில்,

பொருட்களின் விலைகளை குறைக்க குறுங்கால தீர்வுகள் தோல்வியடைந்துள்ளதால் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேறு அணுகுமுறை  முன்வைக்கப்பட்டுள்ளது. எந்த அரசும் பொருட்களின் விலைகளைக் குறைத்தது கிடையாது. பொருட்களின் விலையேற்ற பிரச்சினைக்கு குறுகிய கால தீர்வு தேடி எமது நாடு மட்டுமன்றி ஏனைய நாடுகளும் தோல்வியடைந்தன. உற்பத்தியை அதிகரித்து பொருட்களை சந்தையில் இலகுவாகப் பெறக் கூடிய நிலைமையை உருவாக்க வேண்டும்.

இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேறு அணுகுமுறை  தீர்வையே   முன்வைத்துள்ளோம். வெளிநாட்டிலிருந்து தருவிக்கும் பொருட்கள் அடுத்த வருடம் குறையும் என்று கூறு முடியாது. இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்போது விலைகள் உயரும். பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க ஆவண செய்யப்படும்.

பொருட்களின் விலைகளில் மாற்றம் இருந்தாலும் தட்டுப்பாடின்றி அவை கிடைக்கும். முறையற்ற விதத்தில் பொருட்களின் விலைகளை அதிகரித்து மக்களைச் சூறையாட வேண்டாம் என வியாபாரிகளிடம் கோருகின்றோம். பின்தங்கிய மக்களுக்கு நிவாரணம் மற்றும் சலுகை வழங்குவதற்காக 31 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு 24 மாதங்களுக்கு நிவாரணப் பொதி வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்காக ஓரிரு பொருட்களின் விலைகளை குறைப்பதில் பயனில்லை. எரிவாயு  விலையைக் குறைப்பதால் சகல மக்களுக்கும் நன்மை கிடைக்காது. எரிவாயு  பாவிக்காத மக்களும் உள்ளனர். விசேட வர்த்தகப் பண்டவரியின் கீழ் மக்கள் மீது சுமையேற்றப்படமாட்டாது – என்றார்.

இதன்போது வடக்கு, கிழக்கு தொடர்பில் இந்த வரவு – செலவுத்திட்டத்தில்  கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில்  ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச பதிலளிக்கையில்,

நாம் ஒரே நாடாகவே இந்த வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளோம். வடக்கு, கிழக்கு என்று பாராது 9 மாகாணங்களையும் ஒன்றாகக் கருதி இன, மத பேதமின்றி இந்த வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

30 வருட போர் காரணமாக அப்பிரதேசங்கள் பின்னடைந்திருந்தன. எமது அரசு  வடக்கின்  வசந்தம் மற்றும் கிழக்கின்  உதயம் திட்டங்களின் கீழ் அப்பிரதேசங்களை ஏனைய மாகாணங்களுக்கு சமமாக அபிவிருத்தி செய்தது. சகல உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டன. 17 மிதவைகளுக்குப் பதிலாக பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டன. வடக்கில் 85 வீதம் வயல் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ளன.

9 மாகாணங்களிலும் வாழும் மக்களையும்  சமமாக கவனிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு, கிழக்கு உட்பட 14 ஆயிரத்து 21 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனது கிராம சேவகர் பிரிவுக்கும் 3 மில்லியன் ரூபாதான் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தச் சந்தர்ப்பத்திலும் இன, மத மற்றும் பிரதேச பேதமின்றி சுதந்திரமாக வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

3 வருடங்களின் பின்னர் சிகரெட் விலை 5 ரூபாவால் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த நிதி அமைச்சர், “சிகரெட் விலையைக் கூடுதலாக அதிகரிப்பது தொடர்பில் சட்டப் பிரச்சினை உள்ளது. சிகரெட், மதுபானம் மற்றும் சீனிக் கட்டுப்பாடு தொடர்பில் சுகாதாரத் தரப்பால்  எமக்கு யோசனை முன்வைக்கப்பட்டது. இந்தநிலையில், சீனி தவிர  சிகரெட் மற்றும் மதுபானம்  ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் பதிலளிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய காலம் 5 வருடத்தில் இருந்து 10 ஆக அதிகரிக்கும் யோசனை ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால்தான் முன்வைக்கப்பட்டது. அரச ஊழியர்களுக்கும் 10 வருடங்கள் பணியாற்றினாலே ஓய்வூதியம் கிடைக்கின்றது. அதனால்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் பெறுவதற்கான  காலம் 10 வருடங்களாக நீடிக்கப்பட்டது. இந்த யோசனையை  முன்வைத்தபோது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் கரகோசம் செய்தனர். இது தொடர்பான சட்டத்துக்கு ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவர் என நம்புகிறேன். இளம் நாடாளுமன்ற உறுப்பினர்க்களே கூடுதலாக உள்ளனர். அடுத்த தடவையும் அவர்களுக்குப் நாடாளுமன்றம் வரச் சந்தர்ப்பம் உள்ளது – என்றார்.