பாடசாலை

பாடசாலை

இலங்கை மக்கள் அரசியல் விழிப்படைந்து விட்டார்களா? அல்லது ஏனைய நாடுகளில் மக்கள் முட்டாள்களாகி விட்டார்களா?

(அமெரிக்காவில் நேற்று படுகொலை செய்யப்பட்ட 19 முன்பள்ளி மாணவர்களில் நால்வர்)

இலங்கையில் பெற்றோலும் எரிவாயுவும் இல்லை என்று கியூவில் நிற்க ஆரம்பித்ததும் ‘கோட்டா கோஓ ஹோம்’ என்று போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவிலும் சர்வதேச நாடுகளிலும் கூடிக் கோஷம் எழுப்பினர். ஆனால் பொருளாதார நெருக்கடிக்கான காரணம் எங்கோ இருக்க அவரவர் தங்கள் முரண்பட்ட அரசியல் இலக்குகளுக்காக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் போராட்டத்தை நெய்யூற்றி வளர்த்துவிட, அது இலங்கையின் 30 பாராளுமன்ற உறுப்பினர்களது வீடுகளைப் பதம்பார்த்தது. பத்து வரையானோர் கொல்லப்பட்டனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் அரை நிர்வாணமாக்கப்பட்டனர். அப்படியானால் இலங்கை மக்கள் அரசியல் தெளிவு பெற்றுவிட்டார்கள்? அரசியல் விழிப்படைந்துவிட்டார்களா?

மறுபக்கம் அமெரிக்கா உலகம் முழக்க ஆயதங்களை விதைத்து, யுத்தங்களை உற்பத்தி செய்து அதன் மூலம் கொள்ளை லாபமீட்டுகின்றது. கோவிட் காலத்தில் கூட அமெரிக்கர்கள் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதைப் பற்றி கவலைப்படாமல் துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் வாங்கிக் குவித்தனர். அவ்வளவுக்கு துப்பாக்கிகள் மீது காதல் கொண்ட சமூகம். இரு வாரங்களுக்கு ஒருமுறை பாடசாலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்துவதை வானவேடிக்கை செய்தியாக அறிந்து பழக்கப்படுத்தி விட்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் 250 வரையான துப்பாக்கித் தாக்குதல்கள் பாடசாலைகளில் இடம்பெற்றுள்ளது.

நேற்று மே 24 ரெக்ஸஸ் மாநிலத்தில் 18 வயது இளைஞன் சிறார்கள் கற்கும் பாடசாலை வகுப்பினுள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் பத்து பதினொரு வயதான 19 மாணவர்களும் இரு ஆசிரியர்களும் கொல்லப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கிகள் மீதான கட்டுப்பாட்டை கொண்டு வருவதற்கு ரிப்பப்பிளிக்கன் – குடியரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பது மட்டுமல்ல ஆசிரியர்களுக்கு துப்பாக்கிகள் வழங்க வேண்டும் என்றும் கோருகின்றனர். இப்பின்னணியில் கவனர் கிரேக் அப்போட் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்க பெற்ரோ ஓ ரொர்க், கவனருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவர், மாநிலத் தலைவர்கள் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராகக் எதுவும் செய்யவில்லை என்று சத்தமிட்டார். அதற்குப் பதிலாக சத்தமிட்ட அப்பகுதியின் மேயர் டொன் மக்லவ்லின் “நீ ஒரு வருத்தம் பிடித்தவன் பெட்டை நாய்க்குப் பிறந்தவன்” என்று சத்தமிட்டதுடன் அவனைப் பிடித்து வெளியேற்றும்படியும் உத்தரவிட்டார். இத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டும் அதற்கு முதல் வாரம் பத்துப்பேர் இனவெறியனொருவனால் கொல்லப்பட்டும் யாரும் யாருடைய வீட்டையும் எரிக்கவும் இல்லை. யாரும் யாரையும் அரை நிர்வாணமாக்கவும் இல்லை.

இங்கு பிரித்தானியாவில் கோவிட் காலத்தின் ஒரு மூன்றுமாத காலாண்டில் பெற்ற 200 பில்லியன் பவுண் கடனில் பத்துவீதம் 20 பில்லியன் பவுண் பிரித்தானிய பிரதமர் பொறிஸ்ஜோன்சனின் சகபாடிகளுக்கு லஞ்சமாக, ஊழலாக, மோசடியாக வழங்கப்பட்டது. தினம் தினம் நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் கோவிட் காரணமாக பிரித்தானிய மக்கள் உயிரிழந்துகொண்டிருக்கையில் மரணப்படுக்கையில் உள்ளவரை இரத்த உறவுகள் கூட அருகிருந்து வழியனுப்பி வைக்க முடியாமல், நாட்டை முடக்கி வைத்திருந்தார் பிரதமர் பொறிஸ்ஜோன்சன். ஆனால் அந்த முடக்கத்தின் போது மகாராணியின் கணவர் பிலிப்பின் மரணத்தின் போது கூட ஒன்றல்ல இரண்டல்ல இருபது வரையான லொக்டவுன் பட்டிகளை பிரதமரின் உத்தியோகபூர்வமான வாஸஸ் தலமான 10 டவுனிங் ஸரீற்றில் பொறிஸ் ஜோன்சன் கொண்டாடி கூத்தடித்துள்ளார். இதனை எழுதும் போது கூட பிரித்தானியாவில் சராசரியாக 200 பேர்வரை கோவிட் காரணமாக இறந்துகொண்டுள்ளனர். ஆனால் பிரித்தானியாவில் கொன்சவேடிவ் கட்சியினர் இன்னமும் கோர்ட்டும் சூட்டும் போட்டு தினாவெட்டாகத் தான் திரிகிறார்கள். யாரும் யாருடைய வீட்டையும் எரிக்கவும் இல்லை. யாரும் யாரையும் நிர்வாணமாக்கவும் இல்லை.

பிலிப்பைன்ஸில் மிக மூர்க்கத்தனமாக லஞ்சம், ஊழல், போதைவஸ்து பாவனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிரபலமான ஜனாதிபதி ரொட்றிகோ டுரர்ரே இம்மாதம் முற்பகுதியில் இடம்பெற்ற தேர்தலில் லஞ்சம், ஊழலுக்கு பெயர்பெற்ற தம்பதிகளின் மகனிடம் பதவியைக் கையளிக்க வேண்டியதாயிற்று. இத்தேர்தலில் லஞம், ஊழல், மோசடிக்கு பெயர் போன பேர்டினன்ட் – இமெல்டா மார்க்கோஸ் தம்பதிகளின் புதல்வன் பொங்பொங் மார்க்கோஸ் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையினதும் சர்வதேசத்தினதும் சூழல் இலங்கை மக்கள் அரசியல் விழிப்படைந்து விட்டார்களா? அல்லது ஏனைய நாடுகளில் மக்கள் முட்டாள்களாகி விட்டார்களா? என்ற குழப்பத்தையே தருகின்றது.

“பாடசாலை மாணவர்களி்டம் வசதிக்கட்டணம் அறவிடுவதை உடனடியாக நிறுத்துங்கள்.” – சஜித் பிரேமதாச வலியுறுத்தல் !

பாடசாலை மாணவர்களிடம் வசதிக் கட்டணம் அறவிடுவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தி சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தலையிட்டு மாணவர்களிடமிருந்து வசதிகள் மற்றும் சேவைக் கட்டணங்கள் அறவிடுவது தொடர்பில் கல்வி அதிகாரிகளிடம் விசாரணையை முன்னெடுப்பது முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியில் ஒரு மாணவரிடம் ரூ. 3,000 மற்றும் மற்றுமொரு மாணவரிடமிருந்து ரூ. 2,400 வசதி கட்டணமாக பெறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வசதி மற்றும் சேவைக் கட்டணங்களை இடைநிறுத்தும் சுற்றறிக்கையை வெளியிடுமாறு கல்வி அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்,

அதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக தெரிவித்தார்.