பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

ஒரு லட்சமாக இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்படும் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்

2030 ஆம் ஆண்டளவில் நாட்டிலுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “போருக்குப் பின்னர், தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை ஆராய்ந்து வருகின்றோம்.

 

எமது நாட்டுக்கு ஏற்றவாறு இராணுவத்தை தயார்படுத்துவது ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாதுகாப்புச் சபையின் கடப்பாடு ஆகும்.

 

அதன்படி, பாதுகாப்பு ஆய்வு 2030 என்ற திட்டத்தின் கீழ் தனி நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, எங்களிடம் 208,000 வீரர்கள் உள்ளனர். அதனை ஒரு இலட்சம் வரை கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

 

 

நாங்கள் யாரையும் நீக்குவதற்கு எதிர்பார்க்க பார்க்கவில்லை. மேலும், கடற்படை மற்றும் விமானப்படை பலப்படுத்தப்பட வேண்டும்.

 

புவியியல் ரீதியாக, நாம் மிகவும் சிக்கலான முக்கியமான இடத்தில் இருக்கிறோம்.

 

எனவே, கடற்படையை பலப்படுத்துவதையும் ஒரு திட்டமாக செயல்படுத்தி வருகிறோம்” என இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பு..? – பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

முக புத்தகத்தை நம்பி ஏமாற்றமடையும் தரப்பினர் இன்றும் உள்ளார்கள். ரஷ்யாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் மோசடிகளுக்கு அகப்பட வேண்டாம் என மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

ரஷ்ய யுத்தக் களத்தில் உயிரிழந்த இலங்கையர்களின் உடல்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மிகுதியாக உள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வர இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது ரஷ்ய யுத்தகளத்தில் நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ரஷ்ய யுத்தகளத்துக்கு சென்றுள்ள இலங்கையர்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்ட ஒருசில விடயங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, காமினி வலேபொட ஆகியோரை ஜனாதிபதி அழைத்திருந்தார். இவ்விருவரும் பங்குப்பற்றியிருந்தார்கள்.

ரஷ்யாவுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக சென்று யுத்த களத்தில் விடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் இவ்விருவரும் பல விடயங்களை பாதுகாப்பு சபை கூட்டத்தில் முன்வைத்தார்கள்.

இச்சந்தர்ப்பத்தில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி,பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.இதற்கமை ஓரிருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

எவ்வளவு ஆலோசனைகள் வழங்கினாலும் முக புத்தகத்தில் (பேஸ்புக்) வெளியாகும் போலியான விளம்பரங்களுக்கு ஏமாறும் ஒரு தரப்பினர் உள்ளார்கள்.

ரஷ்யாவின் சென் பீற்றர் நகரத்தில் காணி வழங்கப்படுவதாகவும், குடும்பத்தாருக்கு விசா மற்றும் 10 இலட்சம் ரூபா வழங்கப்படுவதாகவும் முக புத்தகத்தில் விளம்பரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

போலியான வாக்குறுதிகளை நம்பி இலங்கையர்கள் ரஷ்யாவுக்கு சென்று நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். ஆகவே போலியான விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

ரஷ்யாவுக்கு இலங்கையர்களை அனுப்பும் மனித கடத்தல் மோசடியில் ஓய்வுப் பெற்ற இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.ரஷ்ய யுத்தக் களத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மிகுதியாக உள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வர இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தை விட்டு 14000க்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக தப்பிச்சென்றுள்ளனர் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து சிலர் கருத்து தெரிவிக்கிறனர். ஆனால் அவர்களின் கருத்துப்படி, பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையை எந்த அடிப்படையும் இல்லாமல் குறைக்க முடியாது. மேலும் சில அறிவியல் ஆய்வுகளின் பின்னர் இராணுவத்தை சரியான மட்டத்தில் முன்னெடுப்பது தான் நாட்டிற்கு ஏற்றது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் கூறினார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த, செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பு மூலோபாய திட்டங்களின் கீழ், நாட்டுக்கு ஏற்ற வகையில் இராணுவத்தை மாற்றியமைக்க வேண்டும். நாட்டின் முப்படைகளையும் தற்போதைய நிலைக்கு ஏற்ற வகையில் தயார்படுத்துவதற்கு இது வசதியாக அமையும் என நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

தற்போதைய மற்றும் எதிர்கால சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஏற்ற வகையில் இந்த நாட்டின் முப்படைகளையும் தயார்படுத்த எதிர்பார்க்கின்றோம். ஒவ்வொரு தனிப்பட்ட அமைப்புக்கள் அல்லது தனிநபர்களின் தேவைக்கு ஏற்ற விதத்தில் இராணுவத்தை குறைக்கும் எந்தவித அதிகாரமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அவர் கூறினார். தற்போது இராணுவம் சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது, அதன்படி, நவம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய இராணுவத்தினருக்கு பொது மன்னிப்புக் காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இது முதன்முறையாக வழங்கப்படும் பொது மன்னிப்பு காலமாக இல்லாவிடினும், வெளிநாடு சென்றுள்ள இராணுவப்படை உறுப்பினர்களுக்கும் இப்பொது மன்னிப்பை பெற்றுக் கொள்ளவும் அல்லது அவர்களுக்கு வர முடியாவிட்டால், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உரிய ஆவணங்களை கையளித்து பொதுமன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியுமான வாய்ப்பை இராணுவம் முதன்முறையாக வழங்கியுள்ளது.

இதன்படி, இம்மாதம் 29ஆம் திகதி வரையில் 14,127 பேர் சட்டவிரோதமாக தப்பிச் சென்றுள்ளனர் என்று ஆயுதப்படையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது மன்னிப்பின் கீழ் அவர்கள் சுதந்திரமாக சேவையை விட்டுச் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஓய்வுபெற்ற மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் நலனுக்காக போர் வீரர்களுக்கான நலன்புரி பிரிவை நிறுவி அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான நலன்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.