பாரதி சிவராஜா

பாரதி சிவராஜா

காதலை திருமணமாகச் சுருக்கும் சமூகப் புரிதல் பற்றிய மார்க்சிய பெண்ணியப் பார்வை! : இன்பத் தமிழ் வானொலி உரையாடல்

“கல்யாணம் கட்டின ஒரு பெண் பக்கத்து வீட்டு ஆணையும் அல்லது இன்னும் ஒரு ஆணையோ காதலிப்பது சாதாரணமாக நடக்குது. ஆனால் அது மறைக்கப்படலாம் அல்ல தெரியாமல் இருக்கும். இது வீட்டுக்கு வீடு வாசல்படி.” பாரதி சிவராஜா

இலங்கையின் இடதுசாரி அமைப்பான புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி மற்றும் இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்களால் பிரித்தானியாவில் அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் சொலிடாரிட்டி என்ற இரு கட்சிகளையும் ஆண் – பெண் உறவு, காதல், திருமணம் என்ற விடயம் சிக்கலுக்குள் தள்ளிவிட்டிருந்தது தெரிந்ததே. இதன் காரணமாக புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி உறுப்பினர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இவ்வாறான நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த சிலர் தங்களை கட்சியில் இருந்து விலகி நிற்கின்றனர். லண்டனில் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் உறுப்பினர் ஒருவர் நீண்டகாலம் காதலித்த பெண்ணுடன் உறவு முறிவு ஏற்பட்டு பின்னர் வேறொருவரை காதலித்து மணம் முடித்தது தொடர்பில் கையெழுத்துப்போராட்டம் ஒன்றும் முடுக்கிவிடப்பட்டு தங்களை முற்போக்காளர்கள் என கூறிக்கொள்ளும் 20 பேர் கையெழுத்திட்டு இருந்தனர். ஆயினும் தமிழ் சொலிடாரிட்டி கையெழுத்திட்டவர்கள் சமூக விரோத அரசியலை முன்னெடுத்தவர்கள் என்றும் கட்சியயை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வக்கற்றவர்கள் என்றும் சாடியிருந்தது.

கையெழுத்துப் போராட்டத்தில் கையெழுத்திட்ட பாராதி சிவராஜா, கையெழுத்திடுவதற்கு முன் ஆண் – பெண் உறவு, காதல், திருமணம் பற்றி மேற்கொண்ட உரையாடல் இது. “கல்யாணம் கட்டின ஒரு பெண் பக்கத்து வீட்டு ஆணையும் அல்லது இன்னும் ஒரு ஆணையோ காதலிப்பது சாதாரணமாக நடக்குது. ஆனால் அது மறைக்கப்படலாம் அல்ல தெரியாமல் இருக்கும். இது வீட்டுக்கு வீடு வாசல்படி.” கையெழுத்திட்ட ஏனைய 19 மார்க்சிய பெண்ணியலாளர்கள் இவ்வுரையாடலை எந்தப் பார்வையில் பார்ப்பார்கள் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

‘காதலை திருமணமாகச் சுருக்கும் சமூகப் புரிதல் பற்றிய மார்க்சிய பெண்ணியப் பார்வை’ என்ற இந்த உரையாடல் காதலர் தினத்தை முன்னிட்டு 2018 பெப்ரவரி 10ம் திகதி அவுஸ்திரேலியாவில் இருந்து வலைத்தளமூடாக ஒலி பரப்பாகும் இன்பத் தமிழ் வானொலியின் கருத்துக்களம்’ நிகழ்ச்சிக்காக பதிவு செய்யப்பட்டது. பாரதி சிவராஜா வட்ஸ்அப் ஊடாக பலருக்கும் அனுப்பிய இப்பதிவு தேசம்நெற்றையும் அடைந்தது. இப்பதிவின் முக்கிய பகுதி சுருக்கித் தரப்பட்டுள்ளது.

இதன் எழுத்துவடிவம்:

பாரதி: காதல் என்பது ஒரு பீல் தான். காதல் ஒருக்கா தான் வரும் என்டதில எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. காதல் கட்டாயமா வரும். வரலாம். காதல் என்கிறது ஒரு தேடல் தான். அது மனிதர்களிடம் உணர்வு இருப்பது வரைக்கும் அது வந்துகொண்டு இருக்கும். 18 வயசில தான் வரும் 16 வயசில தான் வரும் 60 வயசில வராது என்கிறதெல்லாம் பச்சைப் பொய்யான விஷயம். எந்த வயசிலயும் காதல் வரலாம். எத்தனை தடவையும் வரலாம்.

வானொலிக் கலைஞர்: காதல் என்பதை திருமணம் என்ற வரையறைக்கு அப்பால் தான் தமிழர்கள் வைத்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் இருக்கக்கூடிய காதல் என்பது எமது சமூகத்தால் எச்சரிக்கை உணர்வுடனேயே அங்கீகரிக்கப்படுகிறது என்பது என்னுடைய குற்றச்சாட்டு. அதை ஒருத்தரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. அதை திருமணம் என்கின்ற ஒரு மார்ஜினுக்குள் வைத்த பிறகு தான் உங்களுடைய காதல் அங்கீகரிக்கப்படுமே தவிர…

பாரதி: காதலைத் திருமணம் என்டுறத்தோடு கொண்டு போனாலே அது காதல் இல்லை என்பது தான் என்னுடைய வாதம். எல்லாரும் சொல்லுவாங்க காதல் கல்யாணத்துல முடிக்கிறது தான் வெற்றி என்டு. ஆனால் கலியாணத்தில் முடிந்தால் அது தோல்வி. நீங்க அங்க ஒரு புளொக் போட்டிடுவீங்க. நீ என்னும் ஒருத்தரை காதலிக்க ஏலாது என்டு.

வா.கலைஞர்: காதலை நீங்கள் திருமணத்துக்கு கொண்டு வந்து வைத்தால் காதல் முடிந்தது அது தோல்வி என்று நீங்கள் சொன்னீர்கள். ஏன்? நமது பண்பாடு என்ன சொல்லுகிறது, காதல் வந்து திருமணத்தில் முடிந்து, ஒன்றாக இணைந்து, ஒரு ஜென்மம் பூராகவும் வாழ்ந்து போவதுதான் காதல். அப்படி இல்லாட்டி அது நெறி தவறிய வாழ்க்கை என்றுதானே தமிழ் பண்பாடு சொல்கிறது?

பாரதி: தமிழ் பண்பாடு என்று சொல்லாதீர்கள். தமிழ் கலாச்சாரம். கலாச்சாரம் மாறும் பண்பாட்டில் எங்கயுமே அப்படி சொல்லவில்லை. ஒருத்தரோட வாழ்ந்து, ஒருத்தரோட சாகுறது தான் பண்பாடு என்று தமிழ் பண்பாட்டில் இல்லை. காதல் போய் கலியாணத்தில தான் முடியும் என்டா, நீங்க கலியாணம் முடிச்சிட்டு இன்னும் ஒருத்தரையும் லவ் பண்ணக்கூடிய ஒரு செட்டப் இருக்குமென்றால் அது பிரச்னை இல்லை. ஆனால் கலியாணம் என்டுறது அப்பிடியே முடிச்சுவிடுறீங்க. காதல் என்டுறது ஒரு பீலிங் தான், நீங்க அது முடியும் முடியாது என்டதெல்லாம் இல்லை. அது எவ்வளவு தூரம் உங்களோட ரவல் பண்ணுது என்டத தான் நீங்க பார்க்கனும்.

நீங்க ஒராளோட இருக்கிறீங்க. ஒராள் உங்களோட பாசமா இருக்கிறார். அதை லவ் என்டு பீல் பண்ணுறீங்க. ஒராளோட பழகுறீங்க அவங்க மேல ஈர்ப்பு வருது. அது தான் லவ்.. அது லவ் இல்லை. இது தான் லவ் என்டு யார் தீர்மானிக்கிறது?

எங்கட ஆட்களை எல்லாம் பாருங்க. நீங்க என்ன கள்ள வேலை செய்து காசு சம்பாதிச்சாலும் மனிசி ஒன்டும் சொல்ல மாட்டா. சந்தோஷமா இருப்பா. ஆனா மனுஷன் வேற ஒரு பிள்ளைய பார்த்தவுடன கள்ளக் காதல் என்டுவா. அப்ப இவ்வளவு காலம் உழைச்சது கள்ள காசு தானே? அது என்ன அந்த ரெண்டு மனநிலை எங்க இருந்து வந்தது?

இதில என்னும் முக்கியமான விசயத்தை நான் சொல்ல வேணும் என்னென்றால் மதங்களை நீங்க பார்த்தீங்க என்றால் ஆண்கள் பல காதல் செய்யலாம். பல திருமணம் செய்யலாம். ஆனா பெண்கள் ஒரு காதல் தான் செய்யனும். ஒரியினலா இருக்க வேணும். அப்படி போனாலும் உடன்கட்டை ஏறிடனும்; அல்லாட்டி வெள்ளைப் புடவையை கட்டிட்டு இருக்க வேணும்; பொட்டை அழிச்சிட்டு இருக்கனும்; கலர் அஸ்திரம் கட்டக்கூடாது ஏதோ எல்லாம் சொல்லிட்டு இருப்பாங்க. ஆனா முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்கும் கிருஷ்ணணுக்கு ஆயிரமாயிரம் அது எவ்வளவு என்டு தெரியா. நபி என்றவர் எத்தனையோ கல்யாணம் முடித்து இருப்பர். மதங்களுக்கு ஆண்கள் நாலு கல்யாணம் முடிக்கலாம்.

வா.கலைஞர்: அப்போ ஆணுடைய காதல் வேறு பெண்னுடைய காதல் வேறு அப்படியா

பாரதி: மனிதர்கள் என்பது இயற்கையான ஒரு படைப்பு. அதில் ஆண்பால் பெண்பால் இரண்டும் தான் இருக்கு. அதில் எப்படி இன்னொருத்தனுக்கு சட்டம். இன்னொருத்திக்கு ஒரு சட்டம்.

வா.கலைஞர்: இங்குதானே நீங்கள் சொல்கிற கலாச்சாரமும் பண்பாடும் என்பது உதைக்கிறது. ஏனென்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்பது விதிக்கப்பட்ட விதி? இங்க விதிக்கப்பட்ட நெறிமுறை?

பாரதி: அது நாங்கள் உருவாக்கிக் கொண்டது.

வா.கலைஞர்: உருவாக்கினது என்னவோ அதைத்தானே. அப்படி இருப்பவனை தானே நல்லவன்; நல்ல குடும்பம் என்று சொல்கிறார்கள்; பல்கலைக்கழகம் என்று சொல்கிறார்கள். நீங்க சொன்ன மாதிரி ஒரு உணர்வை இங்கே எப்படி பார்ப்பார்கள் என்றால், கொச்சைப்படுத்தி தான் பார்ப்பார்களேயொழிய, அது அவருடைய ஃபீலிங் என்று யாரும் பார்ப்பது கிடையாது.

பாரதி: சமூகத்தில் மாற்றி செய்யப்படுகிற டைம்ல சமூகத்தில் அது பிரச்சினையான விஷயமாகத்தான் இருக்கு. சமூகத்திலிருந்து நாங்கள் ஒன்றை மாறி செய்யும்போது பிரச்சினையாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையாகவே நீங்கள் பார்க்கும்போது அது தான் சரியாக இருக்கும். அதற்கு நாங்கள் சொல்கிறோம், அறிவு ரீதியாக நாங்கள் பார்க்காத எந்த ஒரு விஷயமும் பிழையாகத் தான் இருக்கும்.

வா.கலைஞர்: அப்படியானால் உங்களிடம் கேட்டால் தமிழ் பெண்களிடம் காதல் பற்றிய பார்வை என்பது வித்தியாசமாக மாறிவிட்டதா? அதாவது தமிழ் பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்ட காதலுக்கு அவர்கள் தங்களைத் தயார்படுத்திவிட்டார்கள் என்பதே உங்களுடைய வாதம் அப்படியா?

பாரதி: நான் வாதமே செய்யத் தேவையில்லை. இங்கே வேண்டாம். எங்கட நாட்டுக்கே போய் பாருங்கோ. எத்தனையோ வீடுகளில் கல்யாணம் கட்டின ஒரு பெண் பக்கத்து வீட்டு ஆணையும் அல்லது இன்னும் ஒரு ஆணையோ காதலிப்பது சாதாரணமாக நடக்குது. ஆனால் அது மறைக்கப்படலாம் அல்ல தெரியாமல் இருக்கும். இது வீட்டுக்கு வீடு வாசல்படி. அப்ப இது இயற்கையான விஷயம் இது.

ரொம்ப கலாச்சாரமான தலிபான் இருக்கிற இடங்களிலேயே பெண்கள் வெளியில் வர இயலாது. பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு அங்கே இப்படியான விஷயங்கள் நடக்கிறது. இதுதான் உண்மை எந்த மதம், எந்த கலாச்சாரம் ஒன்றும் செய்ய இயலாது. அவங்களுக்கு வெளிப்படையாக செய்வதற்கு நீங்கள் அனுமதிக்கவில்லையானால் அவர்கள் மறைமுகமாக செய்வார்கள். இதுதான் இயற்கையான விஷயம்.

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

தம் முற்போக்குத் திரைகளை தாமே கிழிக்கும் முற்போக்குப் பெண்ணியப் போராளிகள்!!!

இலங்கைத் தமிழ் இடதுசாரி கட்சிகள் ஈடாட்டம்!