பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்

பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்

விசா தொடர்பில் விசனத்தை வெளியிட்ட இளைஞனுக்கு நெருக்கடி கொடுத்தால் விளைவு விபரீதமாக இருக்கும் – நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி

விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை தனி இளைஞர் ஒருவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

தவறுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் அதனை விடுத்து இந்த இளைஞனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தினால் அரசாங்கம் மீண்டும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

சட்டத்தரணிகளும், நாட்டு மக்களும் ஒன்றிணைவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற பிரிவிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடல் (விசேட ஏற்பாடுகள்)திருத்தச் சட்டமூலம் (பராட்டே) என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 

நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்கள் 52 சதவீதமளவில் பங்களிப்பு செய்கிறார்கள்.தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தொழில் முயற்சியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது.ஆனால் அவர்கள் மீதே பொருளாதார நெருக்கடி சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகளினாலும்,ஊழல் மோசடியாலும் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.

 

கொவிட் பெருந்தொற்றினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் கொவிட் பெருந்தொற்றினால் எமது அண்மை நாடுகளான மாலைத்தீவு,பங்களாதேஷ் மற்றும் பூட்டான் உள்ளிட்ட நாடுகள் வங்குரோத்து நிலையடையவில்லை. பொருளாதார மீட்சிக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அரசாங்கம் பேச்சளவில் குறிப்பிடுகிறது.ஆனால் செயலளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

 

வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் சட்டமூலம் தற்காலிகமானதே,07 மாதங்களை வரையறுத்தே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.ஏழு மாத காலத்துக்குள் நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையுமா என்பதை குறிப்பிட முடியாது,ஆகவே தொழில் முயற்சியாளர்களுக்கு 2 ஆண்டுகளேனும் நிவாரணம் வழங்க வேண்டும்.

வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை இளைஞர் ஒருவர் தனித்து வெளிப்படுத்தியுள்ளார். அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை அந்த இளைஞர் பயன்படுத்தியுள்ளார்.இந்த இளைஞன் குறிப்பிட்ட விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி,அதற்கு மக்கள் அவதானம் செலுத்தியதன் பின்னரே அமைச்சரவை பழைய முறைக்கு விசா விநியோகிக்க தீர்மானித்துள்ளது.

 

அரசாங்கம் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் அதனை விடுத்து இந்த இளைஞனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் சட்டத்தரணிகளும், நாட்டு மக்களும் அந்த இளைஞனுக்கு சார்பாக செயற்படுவார்கள். கடந்த கால நிகழ்வுகளையும் அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இலங்கையை அதிகார போட்டிக்குள் நுழைத்து இன்னுமொரு உக்ரைனாக மாற்ற நாம் தயாரில்லை – இந்தியாவிடம் ஜே.வி.பி !

இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான பூகோள அரசியல் போட்டிக்கு மத்தியில் மற்றுமொரு உக்ரைனாக மாறுவதற்கு இலங்கை தயாரில்லை என்ற விடயத்தை இந்தியாவிடம் நாம் தெரிவித்துள்ளோம் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

இராஜதந்திர தொடர்பு என்பது மெஜிக் கிடையாது.அது எமக்கு நன்கு தெரியும். வடகொரியா, கியூபா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் மட்டும்தான் எமது தொடர்பு இருக்கும் என சிலர் கூறுகின்றனர்.

இலங்கையை வடகொரியாவாக்குவதற்கு முற்படுகின்றனர் எனவும் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இது தவறு. உலகம் இன்று மாறியுள்ளது.

 

உலக பூகோள அரசியலும் மாறியுள்ளது. நாம் இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா , ஜப்பான் உட்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் கொடுக்கல் – வாங்கல்களிலும் ஈடுபடுவோம். அதற்கான உறவு கட்டியெழுப்பட்டுள்ளது.

 

இலங்கை சீனாவிடம் அதிகமாக கடன் வாங்கியுள்ளது, அதற்கு அடுத்தப்படியாக இந்தியாவிடம் கடன் வாங்கப்பட்டுள்ளது. தற்போது சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளனர்.

ஐஎம்எவ் என்பது அமெரிக்காதான். இவ்வாறு கடன்வாங்கியுள்ளதால்தான் நாடு இறுதியுள்ளது. அமெரிக்கா, இந்தியா, சீனா என்பன உலக அதிகார அரசியலில் ஈடுபடுகின்றன.

அந்த போட்டியில் எமது நாடு சிக்ககூடாது. நாம் இந்தியா சென்றிருந்தவேளை, நாம் மற்றுமொரு உக்ரைனாக மாறுவதற்கு தயாரில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தோம்.

 

பிராந்திய பாதுகாப்பு சார்ந்த விடயத்தின்போது சரியான இடத்தில் நாம் நிற்போம். அவர் அதனை ஏற்றுக்கொண்டார் என்றார்.

நாட்டை மீண்டும் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் – விஜித ஹேரத் குற்றச்சாட்டு!

நாட்டை மீண்டும் விற்பனை செய்யும் வேலைத்திட்டமே இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், உணவு மற்றும் வரி வசூல் மட்டுமே வரவுசெலவு திட்டத்தில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

 

பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கொண்டுவருவதாக 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்ட போதிலும் அது எதுவும் நடைமுறைக்கு வரவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை – ஜே.வி.பி

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லையென தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 40 ஆவது சரத்தின்படி, ஐந்தாண்டுகளின் முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு புதிய ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று அவர் செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 40 சரத்தின் உப பிரிவுகளின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு மட்டுமே இரண்டாவது முறையாக போட்டியிட்டால், முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த அதிகாரம் உள்ளது என்றார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வருடம் நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஜனாதிபதித் தேர்தலை நடத்தியிருக்க முடியும் என்று கூறிய அவர், அடுத்த ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு அத்தகைய அதிகாரம் இல்லை என்றும் கூறினார். எனவே, 2024 ஆம் ஆண்டு நவம்பருக்குப் பின்னரே ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும்  என்றும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.