அறியாப் பருவத்தில் பெண் பிள்ளையை தன் பாலியல் இச்சைக்கு உட்படுத்திய தமிழ் வர்த்தகப் பிரமுகருக்கு எதிரான பாலியல் இம்சைக் குற்றச்சாட்டு நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இவர் குறைந்தது ஓரு பெண் பிள்ளையையாவது பாலியல் இம்சைக்கு உட்படுத்தியது தற்போது லண்டன் வூட் கிரீன் கிரவுண் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இவருக்கு எதிரான இவ்வழக்கு நவம்பர் 28 முதல் ஏழு வேலை நாட்களுக்கு வூட் கிரீன் கிரவுண் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தண்டனைக் காலம் அடுத் அமர்வில் ஜனவரி 3 2023இல் தீர்மானிக்கப்படும் எனவும் மெற் பொலிஸார் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.
லண்டனின் வசதிபடைத்த பகுதிகளில் ஒன்றான ஹரோ உள்ளுராட்சிப் பிரிவுக்குள் கொலின்டேல் பகுதி வருகின்றது. இப்பகுதியில் இளையவர்களுக்கான இசை, நடனம் அவற்றை அரங்கேற்றுவது போன் கலைத்துறைசார்ந்த தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பிரமுகர் பிரேமகுமார் ஆனந்தராஜா. இவர் கலை கலாச்சாரத்தை வளர்க்கின்றேன் என்ற பெயரில் ஆனந்தம் கிரியேசன் யுகே என்ற நிகழ்வு ஓழங்கமைப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர். இந்த பிரேமகுமார் ஆனந்தராஜா என்ற இந்நபரே தற்போது பெண் குழந்தை மீது பாலியல் இச்சையோடு நடந்துகொண்டமை நிரூபிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆனந்தம் கிரியேசன் யூகே 2015இல் யூரியூப்பில் சில கலை நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது.
இச்சம்பவம் பற்றி பிரேமகுமார் ஆனந்தராஜாவின் குடும்ப நண்பர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் இவ்வாறான ஒரு கீழ்த்தரமான மனநிலை கொண்ட ஒருவரோடு தாங்கள் குடும்ப நண்பராக இருந்தது தற்போது நினைக்கின்ற போது அருவருப்பாக உணர்வதாகத் தெரிவித்தார். “எனக்கும் பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களோடும் இவர் பழகி உள்ளார். ஆனால் நாங்கள் ஒரு போதும் யாருடனும் பிள்ளைகளைத் தனிய அனுமதிப்பதில்லை” என்றும் “பிரேம் இம்சைக்கு உட்படுத்தியதாக அறியவருபவர்கள் இவருடைய நண்பர்களின் குழந்தைகளே” என்றும் மிகுந்த கோபத்தோடு அவர் பதிலளித்தார். “பிரேம் தன்னுடைய குடும்பத்துக்கும் எங்களைப் போன்ற நண்பர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்துள்ளார்” என வாரத்தைகள் தடம்புரள சினத்தோடு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
யாழ்ப்பாணம் புங்குடு தீவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரேமகுமார் ஆனந்தராஜா 1961 பிறந்தவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். தற்போது 61வது வயதையெட்டுபவர். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட மலேசியப் பெண்ணை 1990க்களில் மணந்தவர். பதின்ம வயதைக் கடந்த கலைத்துறையில் ஆர்வமுள்ள இரு ஆண் குழந்தைகளின் தந்தை. இவருக்கு கொலின்டேலில் கடையும் உள்ளது. இரு சகோதரர்கள் மூன்று சகோதரிகள் என்று அவர்களும் கொலிடேலிலும் லண்டனின் ஏனைய பாகங்களிலும் வர்த்தக நிறுவனங்களைக் கொண்டுள்ளவர்கள்.
பிரேமகுமார் ஆனந்தராஜாவின் தீயசெயல் அவரைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நெருக்கடியையும் அவருடைய மனைவி பிள்ளைகளுக்கு மிகுந்த அவமானத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மற்றுமொரு நண்பர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். அவருடைய ஒரு மகளும் வேறொருவரால் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகி இன்றும் மனவேதனையில் இருப்பவர். பிரேம் இப்படிப்பட்ட ஒருவன் என்ற சந்தேகம் முன்னம் உங்களுக்கு இருந்ததா என்று கேட்டபோது, “அவ்வாறன ஒருவன் என்று எந்த சந்தேசமும் தனக்கு ஏற்பட்டதில்லை” என அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பிள்ளைகளை நான் எண்ணி வருந்துகிறேன். அதேநேரம் அவன் ஏன் இப்படி நடந்துகொண்டான் என்று எண்ணும் போது எனக்கு மிக வேதனையாக இருக்கின்றது” என்றார். “அவன் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சேர்த்து நாசமாக்கிவிட்டான்” என்று மிகவும் மனம் புலங்கினார்.
பிரேமகுமார் ஆனந்தராஜாவின் இச்செயல் தமிழ் சமூகத்திற்குள் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதில் ஆச்சரியமில்லை. பெரும்பாலும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் இம்சைகள் குடும்ப உறவுகள் நட்புகளினாலேயே ஏற்படுத்தப்படுகின்றது என்ற உண்மையை இச்சம்பவம் மேலும் ஒருமுறை உறுதிப்படுத்தி இருக்கின்றது. தமிழ் சமூகங்களினுள் இவ்வாறான பல சம்பவங்கள் பரவலாக இடம்பெற்ற போதும் இவ்வாறான சம்பவங்கள் அக்குடும்பங்களின் கதவுகளைத் தாண்டி வெளியே வருவதில்லை என்கிறார் மருத்துவ கலாநிதி ஆர் ராமநாதன்.
பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மூத்த மகன் தனது முகநூலில் ”always my legend“ என்று தந்தையுடன் தான் நிற்கின்ற படத்தை போட்டு பதிவு செய்திருந்தார். அந்த எண்ணங்கள் அத்தனையும் சுக்குநூறாகும் விதத்தில் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் செயல்கள் அமைந்துவிட்டது. “பிரேமகுமார் ஆனந்தராஜா இன்னும் எத்தனை குழந்தைகளை இச்சைக்கு உள்ளாக்கி இருப்பார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்” என்கிறார் மற்றுமொரு நண்பர். தன்னுடைய மகளின் அரங்கேற்றத்தைக்கூட பிரேமே ஏற்பாடு செய்து ஒத்துழைத்;ததாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “குழந்தைகள் வளர்ந்து எவ்வளவு மனவுளைச்சலையும் வேதனையையும் தமது வாழ்நாள் முழவதும் சுமப்பார்கள் என்பது மிகுந்த வலியை அவர்களிடம் ஏற்படுத்துவதுடன் சமூகம் பற்றிய அவநம்பிக்கையையும் ஏற்படுத்திவடும்” என்றார். “பிரேமகுமார் ஆனந்தராஜா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது அவர்களுடைய ரணத்தை ஓரளவு ஆற்றும்” என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தங்களுடைய வலியைக் கடந்து இந்தக் குற்றத்தை நீதிமன்றில் நிரூபிக்க அப்பிள்ளைகளும் குடும்பத்தினரும் எடுத்த முயற்சிக்கு தமிழ் சமூகம் நிச்சயம் தலைவணங்க வேண்டும் என ஈலிங் ஆலய செயற்குழு உறுப்பினர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். மீண்டும் இவ்வாறாண நிகழ்வுகள் நடந்துவிடாமல் இருக்க இவ்வாறான வழக்குகளின் தீர்ப்புகள் மிக அவசியமானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். பிரேமகுமார் அப்பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு தவறாமல் செல்பவர் என்றும் தெரியவருகின்றது.
இந்த அநீதி லண்டனில் இழைக்கப்பட்டதால் அதற்கான தண்டனையை சட்டமும் காவல்துறையும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. ஆனால் தாயக மண்ணில் மாணவிகளைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் இன்னமும் சுத்தமான சுவாமிப்பிள்ளைகளாக யாழ் மற்றும் வவுனியா பல்கலைக்கழக வளாகங்களில் வலம்வருகின்றார்கள். அவர்கள் போடும் தேசியவாதச் சாயம் கலர அவர்கள் அம்மணமாகும் நாள் விரைவில் ஏற்படும்.