தையிட்டி விகாரை: தமிழ் தலைவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயக்கம் ! பிச்சைக்காரன் புண்ணை குணப்படுத்த மாட்டான் பா உ அர்ச்சுனா !
யாழ். தையிட்டி விகாரை இடித்து அகற்றக் கோரும் போராட்டம் சமூக வலைத்தளங்களில் செய்திகளில் பேசப்பட்ட அளவுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் நேற்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் பிசுபிசுத்துப் போனதொரு கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
”பௌத்தம் உன் மதம். வழிபடு. தையிட்டி என் மண். வழி விடு !”, ”சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை உடனடியாக அகற்று” , ”கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை நிறுத்து” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையை வழமை போல் வாக்குவாதம் ஏற்பட்டு முறுகலான நிலை தோற்றுவிக்கப்பட்டது.
இதேவேளை யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற முடியும் என அரகலயா போராட்டத்தில் முன்னின்ற மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் போராட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த விகாரையின் கட்டுமானம் நிறைவடைந்துள்ளது ஆகவே இந்த விகாரையை அகற்ற முடியாது என பலரும் பல்வேறு கருத்துக்ளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் தென்னிலங்கையில் இருந்த பல சட்டவிரோதமான விகாரைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினுடைய வழக்கின் மூலம் வீதி அபிவிருத்திக்காக அகற்றப்பட்டிருக்கின்றது.
எனவே அவர்களுக்கு ஒரு நீதி, இங்கிருக்கின்ற மக்களுக்கு ஒரு நீதி என்றால், சிங்களப் பேரினவாதத்தினுடைய ஆக்கிரமிப்புப் போக்கும் தமிழருக்கு எந்த ஒரு இடத்தையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற நிலைமையும், தமிழ் மக்கள் எந்தவொரு இடத்திலும் தங்களின் பூரண இனச்சுதந்திரத்துடன் வாழ முடியாத ஒரு சூழ்நிலையியை ஏற்படுத்துகின்ற சிந்தனையை இது வெளிப்படுத்துகின்றது’’ எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தையிட்டி விகாரை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இனவாத கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறி தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் உறுப்பினர் அஜித் ரணசிங்க தெரிவித்துள்ளதுடன் இதுதொடர்பாக அவர் பொலிசில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளார் .
இதேவேளை நேற்றைய தினத்தில் தொடர்ந்த தையிட்டி விகாரை தொடர்பான போராட்டத்திலும் விகாரையை அகற்ற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் எந்தவொரு பேச்சுக்களும் கலந்து கொண்ட தலைவர்களால் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பா.உ இராமநாதன் அர்ச்சுனா, பிச்சைக்காரன் காயத்தை குணப்படுத்த மாட்டான். ஏனெனில் அப்போதா தான் அதை வைத்து பிச்சை எடுக்கலாம். அந்த பிச்சைக்காரன் போலத்தான் பல அரசியல்வாதிகள் தையிட்டி பிரச்சினையை தீர்க்காமல் வைத்திருந்தால் தான் தங்களால் அரசியல் செய்ய முடியும் என்பதற்காகவே அதனை தீர்க்காது தூண்டி விடுகின்றார்கள் என குற்றஞ்சுமத்தியுள்ளார்.