பா உ அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம், சிறிதரன் எல்லோரும் உதிரிகள் ! இவர்கள் யாழில் சில ஊர்களின் பிரதிநிதிகள் ! வடக்கு – கிழக்கு பிரதிநிதிகள் அல்ல !
ஆய்வாளர் வி சிவலிங்கம் அவர்களோடு ஒரு உரையாடல்
பா உ அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம், சிறிதரன் எல்லோரும் உதிரிகள் ! இவர்கள் யாழில் சில ஊர்களின் பிரதிநிதிகள் ! வடக்கு – கிழக்கு பிரதிநிதிகள் அல்ல !
ஆய்வாளர் வி சிவலிங்கம் அவர்களோடு ஒரு உரையாடல்
தமிழரசுக் கட்சியில் பா உ சிறிதரன் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் – ஆய்வாளர்கள் கணிப்பு !
தமிழரசுக் கட்சிக்குள் பா உ சிறிதரனும் எம் ஏ சுமந்திரனும் இருக்கும்வரை கட்சி வளர்ச்சியடையாது என தமிழ் தேசியத்தின் ஆய்வாளர்கள் என தங்களை முன்நிறுத்தும் ஊடகவியலாளர் நிலாந்தன் மற்றும் பொங்கு தமிழ் கணேசலிங்கம் ஆகியோர் டான் தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஆய்வாளர் வி சிவலிங்கம் பா உ எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்பட முடியாவிட்டால் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் அல்லது தானாக கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் எனத் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியிலிருந்து இவ்விருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவது தவிர்க்க முடியாதது. கட்சி தற்போது எம் ஏ சுமந்திரனின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாலும் மத்திய குழுவில் சுமந்திரனுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாலும் பா உ சிறிதரன் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு அல்லது வெளியேற்றப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பா உ சிறிதரன் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாராளுமன்றத்தில் அவர் ஆசனத்தை வென்று எம் ஏ சுமந்திரன் ஆசனத்தை இழந்தார்.
இருந்த போது பா உ சிறிதரனால் கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தற்போது உள்ளுராட்சி மாகாணசபைத் தேர்தலில் வேட்ப்புமனு தாக்கல் செய்வதில் இன்னுமொரு நெருக்கடிநிலை உருவாகும்.
ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். பா.உ சிறிதரன் இது தொடர்பில் மேலும் தெரிவித்த போது, மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதாக இருந்தால், முதலில் பாராளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால் 50 சதவீத தொகுதி மற்றும் விகிதாசார தேர்தல் முறைமைக்கு தென்னிலங்கையிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. நாமும் அதனை எதிர்க்கிறோம். மாகாணசபைத் தேர்தல் இவ்வாறானதொரு இழுபறி நிலையில் தான் இருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு நான் தயாரில்லை. அதேபோன்று எமது கட்சி வழக்கு நிலுவையில் இருக்கிறது. கட்சி உறுப்பினர்களே வழக்கினைத் தாக்கல் செய்திருக்கின்றனர். இது தாயை நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டு, தாயிடம் உணவு கேட்பதுபோல் உள்ளது. நாங்கள் செய்வது பதவிகளுக்கான அரசியல் அல்ல. மாறாக இனவிடுதலையை இலக்காகக்கொண்ட அரசியலாகும். பதவிகளுக்காக அரசியல் செய்வது தவிர்க்கப்படவேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
தங்களை தமிழ் தேசியத்தின் ஆய்வாளர்களாக முன்நிறுத்தும் நிலாந்தனும் பொங்குதமிழ் கணேசலிங்கமும் தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளுக்கிடையே உள்ள தனிப்பட்ட முரண்பாடுகளே தமிழ் தேசியம் பலவீனப்படுவதற்கு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கின்றனர். அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தன்னை வளர்த்துக்கொள்ளத் தவறிவிட்டது எனச் சுட்டிக்காட்டினர்.
தேசிய மக்கள் சக்திக்கும் பா உ அர்ச்சுனாவுக்கும் அச்சமடைந்து தான் தமிழ் தேசியக் கட்சிகள் புதிய கூட்டணிகளை உருவாக்குவதாக நிலாந்தனும் கணேசலிங்கமும் தெரிவிக்கின்றனர்.
அத்துமீறும் இந்திய மீனவர்களை பா உ சிறிதரன் பார்வையிட்டார் ! பாதுகாக்கும் படி பாஜாக தமிழகத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை ! பாதிக்கப்படும் இலங்கைத் தமிழ் மீனவர்களை தமிழ் தேசியக் கட்சிகள் கைவிடுகின்றது !
இலங்கையின் வடக்கில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகளை தமிழ் தேசியக் கட்சிகள் கைவிட்டுவிடு உள்ளுராட்சித் தேர்தலில் களமிறங்குகின்றன. ஆனால் தமிழகத்தின் பாஜாக தலைவர் அண்ணாமலை அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் வரும் மீனவர்களை நடுக்கடலில் வைத்து கைது செய்வதாகக் கூறி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்திய மீனவர்களைப் பாதுகாப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் அவ்வாறு கைது செய்யப்படுபவர்களை உடனடியாக நாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறும் அண்ணாமலை வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் அத்துமீறும் இந்திய மீனவர்கள், தங்கள் பொருளாதாரத்தை அழிக்கிறார்கள் என்று போராடிய போது அவர்களைக் கண்டுகொள்ளாத பா உ எஸ் சிறிதரன் அத்துமீறிய போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை யாழ் சிறையில் சென்று பார்வையிட்டு அவர்களது நலன்களை விசாரித்து அறிந்தார்.
அத்துமீறி வந்து வடக்கின் மீன்வளத்தை அழிக்கும் இந்திய மீனவர்களுக்கு அங்குள்ள கட்சிகள் பெரும் ஆதரவை வழங்குகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களைப் பற்றி தமிழ் தேசியக் கட்சிகள் மௌனமாகவே இருந்து வருகின்றன. பாராளுமன்றத்திலோ, மாகாணசபையிலோ, உள்ளுராட்சி சபைகளிலோ பன்மைத்துவ அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாததும் அதற்குக் காரணமாக உள்ளது என்கிறார் சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த். தமிழ் தேசிய அரசியலை சைவ வெள்ளாள மேட்டுக்குடி ஆண்களே பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஏனைய சமூகங்களின் வலியை இந்த தமிழ் தேசியவாதிகளால் உணரமுடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கிடையே நேற்று எழுவைதீவு அனலைதீவு கடற்பரப்பில் 200 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் காரைநகர் மற்றும் மன்னார் பேசாலையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வடக்கிற்கான கேரளா கஞ்ஞா மற்றும் போதைப்பொருட்களின் நுழைவாயிலாக வடக்கு கடற்பரப்பு உள்ளது. இந்திய மீனவர்களே அதனை இலங்கைக்கு கொண்டுவருகின்றனர் என்பதும் தற்போது உறுதியாகி உள்ளது.
வடக்கின் தமிழர்களின் எதிர்காலம் அழிக்கப்படுகின்ற போதும் தமிழ் தேசியத் தலைமைகள் இது விடயத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க மறுத்துவருகின்றனர். கடந்த வியாழக்கிழைமை வடக்கு மீனவர்கள் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் தமிழகத்தில் ராமேஸ்வரத்திலும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2024இலிருந்து 535 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
வடக்கு மீனவர்கள் விடயத்தில் தற்போது தேசிய மக்கள் சக்தியினர் மட்டுமே அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர். கிளிநொச்சி நீதமன்றமும் தண்டனைகளை அபராதங்களை சற்று கடுமையாக்கி வருகின்றது. தமிழரசுக் கட்சியின் பா உ ரவிகரன் மீனவர்கள் விடயத்தில் தனித்துக் குரல் எழுப்பியுள்ளார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராமுகமாகவே உள்ளனர்.
வடக்கு மீனவர்களின் பிரச்சினையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிபேதமில்லாமல் இந்திய அரசுக்கு அழுத்தங்களை வழங்கி வடக்கு மீனவர்களின் பிரச்சிகைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இது விடயத்தில் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் பிரச்சினையை சரியானமுறையில் இனம் கண்டுள்ளார். அவருடைய கூற்றுப்படி தமிழகத்தில் உள்ள அப்பாவி மீனவர்களைப் பயன்படுத்தி தமிழக அரசியல் செல்வாக்குடையவர்களும் பெரும் பணமுதலைகளும் லாபமீட்டுவதாகத் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இந்திய கடற்படை இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பிற்குள் அத்துமீறுவதற்கு முடிவுகட்ட வேண்டும். கேரளா கஞ்சா வடகடற்பரப்பிற்குள் நுழைவதற்கு முடிவு கட்ட வேண்டும்.
தொடரும் என்.பி.பி அலை – தேர்தலை பின்னுக்கு தள்ளி கால அவகாசம் கோருகிறார் பா.உ சிறிதரன் !
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அநுர அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதத்தில் தேர்தலை நடத்துவது என்பது என்னை பொறுத்தவரை நெருக்கடியாக இருக்கும். இதற்கான காரணம் என்னவெனில், ”சாதாரண தரப் பரீட்சை, வரவு செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு போன்ற சமய நிகழ்வுகள் குறித்த காலப்பகுதியில் வருவதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் அத்துடன் தேர்தல் திருத்தங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழக்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், பெண்களுக்கு 25 வீதம் வழங்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.
தேர்தலை பின்தள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, எந்த தேர்தலுக்கும் முகம்கொடுப்பதற்கு நாங்கள் பின்வாங்கியதில்லை. தேர்தல் பிரசார காலப்பகுதி யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வேட்புமனு கோருமாறு கேட்கிறோம் என தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடங்கி மாகாண சபை தேர்தல்கள் வரை அனைத்திலும் என்.பி.பி அலையே தொடரும் என அரசியல் அவதானிகள் கூறி வருகின்றனர். ஆனால் இன்னமும் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி பூசல் கூட முடிந்தபாடில்லை. பாராளுமன்றத்தேர்தல்களை போலவே உள்ளூராட்சி தேர்தல்களிலும் தமிழரசுக்கட்சியை விட என்.பி.பி ஆதிக்கம் செலுத்த வாய்புள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தான் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்தேசிய கட்சிகளை விட தேசியக்கட்சி ஒன்று தன் ஆதிக்கத்தை பெரும்பான்மை ஆசனங்கள் மூலம் உறுதி செய்திருந்தது. இதனை தொடர்ந்தும் தக்க வைக்கும் நோக்கில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் என அடுத்தடுத்து ஒவ்வொரு வார இடைவெளியிலும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பகுதிகளுக்கு திடீர் விஜயம் செய்து என்.பி.பி தன்னுடைய வாக்கு வங்கியை பலப்படுத்திவருகிறது. இதனால் உள்ளூராட்சி தேர்தல் தமிழ்தேசிய கட்சிகளுக்கு சவாலாக மாறியுள்ளது.
மக்களின் கவனத்தை ஈர்த்த உண்ணா விரதப் போராட்டம் – பா உ சிறிதரன் அணி அச்சத்தில் !
முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் முன்னாள் போராளியான அழகரத்தினம் வர்ணகுலராசா பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை பெப்ரவரி 14 ஆம் திகதி தொடக்கம் நடத்தி வந்தார். நீர் மற்றும் உணவு தவிர்த்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அவர் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளில் அரைவாசி தானும் நிறைவேறினால் போதும் என்ற நிலைப்பாட்டுடன் வர்ணகுலராசாவின் சாகும்வரை போராட்டம் முன்னாள் போராளிகளின் தலமையிலான மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக அமைப்பால் நீர்ராகரம் கொடுத்து நேற்றைய தினம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தன்முனைப்போடு ஈடுபட்ட முன்னாள் போராளிக்கு பல தரப்பிலிருந்தும் தமிழ் மக்கள் இடத்திலிருந்தும் ஆதரவு பெருகி வந்திருந்தது. உண்ணாவிரதம் இருந்த அழகரத்தினத்தின் உடல்நிலையை கருதி அவர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட இருப்பதாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்த தீபன் கருத்து தெரிவித்தார்.
இந்த விடயத்தில் கிளிநொச்சி எம்பி சிவஞானம் சிறிதரனின் சார்பு ஊடகவியலாளர் ஒருவர் மூக்கை நுழைத்து கேள்வி கேட்பதாக கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு சர்சையை உருவாக்கினார்.
பெரும் காசு கொலிக்கும் மாவீரர் துயிலுமில்ல வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் எம்பி சிவஞானம் சிறிதரனிடமிருந்து மாவீரர் துயிலும் இல்லங்களை மீட்க மல்லுக்கட்டும் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக அமைப்பினர் அழகரத்தினம் வர்ணகுலராசாவின் உயிரில் காட்டிய அக்கறையை கேலிக்குள்ளாக்கினார்.
அவருடைய கேள்விகளை இடைமறித்த மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக உறுப்பினர் ”நான் மூன்று நாளாக இங்கே நிற்கிறேன், நீர் இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, றோவினால் நடத்தப்படும் போராட்டம் என பதிவு போட்டு வருகிறீர்’’ என காட்டமாக பதிலளித்தார். சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக் கொண்டுவரப்ட்டுள்ளது. வர்ணகுலராசா முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பிலான போராட்டங்கள் மாற்றுவழியில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தையிட்டி விகாரையை அனுமதித்த நல்லாட்சி அரசின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தையிட்டி இடிப்பில் கைகோர்த்தார் !
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்கள் நடத்தவுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
தையிட்டிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை என்பது சட்ட ரீதியான அனுமதிகள் எவையும் பெற்றுக் கொள்ளப்படாமல், எமது மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் பூர்வீக நிலங்களை இழந்துள்ள மக்கள் தங்களுடைய காணிகளை மீட்பதற்கு தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பை நிறைவற்றுவதற்கான முயற்சிகள் எம்மால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மக்களுடைய காணிகள் மக்களுக்கே சொந்தம் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதி மாத்திரமன்றி கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது திடமான நிலைப்பாடாக இருக்கின்றது. அந்த அடிப்படையில், காணி உரிமையாளர்களின் அமைதி வழிப் போராட்டத்திற்கு பூரண ஆதரவளிக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரை அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஆகியோர் அங்கத்துவம் வகித்து ஆட்சிக்கு கொண்டு வந்த நல்லாட்சி அரசு காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. நல்லாட்சி அரசில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க தலைமையில் அறிவிக்கப்பட்ட ஆயிரம் விகாரை திட்டத்தை முன்னோக்கி நகர்த்தியவர் அப்போதைய புத்தசாசன அமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆவார். இந்த ஆயிரம் விகாரை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசுக்கான ஆதரவை வழங்கியதுடன் குறித்த நல்லாட்சியில் தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் என குறிப்பிட்ட பா.உ சிறிதரனும் கைகோர்த்திருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் நல்லாட்சி அரசில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய விவகார அமைச்சராக செயலாற்றிய டக்ளஸ் தேவானந்தா அடுத்து பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச அரசிலும் அமைச்சராக பணியாற்றினார். எனினும் அண்மையில் ஏற்பட்ட என்.பி.பி அலையில் காணாமலாக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா மீண்டும் தனது கட்சியின் அரசியலை நிலைநாட்ட திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்தவர் போல தையிட்டி விகாரையை இடிக்கும் பேரணியில் கைகோர்ப்பதாக அறிவித்துள்ளதாக அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.
பா உ சிறிதரனை கட்சியிலிருந்து நீக்க, திருமலையில் தமிழரசுக் கட்சி கூடுகின்றது ! பா உ சிறிதரன் கலந்துகொள்ளவாரா ?
நாளை 18, திருகோணமலையில் தமழரசுக் கட்சியின் மத்திய குழு கூடி, உள்ளுராட்சித் தேர்தல், கட்சியின் முடிவுகளுக்கு புறம்பாகச் செயற்பட்டவர்கள் தொடர்பிலான முடிவுகள், கட்சி மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் வைக்கப்படும் தமிழர் பேரவைத் தீர்வுத் திட்டம் தொடர்பான கட்சி நிலைப்பாடு, முன்னைய மட்டு மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது என்பன பற்றி ஆராயப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ் கிளிநொச்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பா உ சிறிதரன் கட்சி நிலைப்பாடுகளுக்கு மாறாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தது, மற்றும் கட்சி நிலைப்பாடுகளுக்கு புறம்பாக நடந்துகொள்வதற்கு எதிரான குற்றச்சாட்டுகள் விவாதிக்கப்பட்டு, பா உ சிறிதரனை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றே தமிழரசுக் கட்சி வட்டாரங்களில் இருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட குழப்பநிலைகளாலும் பா உ சிறிதரனுக்கு ஆதரவு தெரிவக்கக் கூடியவர்கள் கட்சியிலிருந்து ஏற்கனவே வெளியேறியும் உள்ளனர். கட்சி மத்திய குழவிற்குள் தற்போது பா உ சிறிதரனின் ஆதரவுத்தளம் என்ன நிலையில் இருக்கின்றது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் நாளைய மத்திய குழக் கூட்டத்தில் பா உ சிறீதரன் கலந்துகொள்ளமாட்டார் எனவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இவற்றை உறுதிப்படுத்த முடியவில்லை. ஜனவரி 18 பா உ சிறிதரனின் முடிவெடுக்கும் நாளாக அமையலாம், இல்லையேல் இந்த இழுபறி இன்னும் தொடரலாம். எம் ஏ சுமந்திரன் மீதான அடுத்த கட்டத் தாக்குதலுக்கு புலம்பெயர் அனுசரணையில் இயங்கும் ஊடகங்கள் தயாராகி வருகின்றன.