பிரதமர் தினேஷ் குணவர்தன

பிரதமர் தினேஷ் குணவர்தன

ஸ்ரீலங்கன் விமானச் சேவையை வரி செலுத்தும் மக்களுக்குச் சுமை இல்லாதவாறு முன்னெடுப்போம் – பிரதமர் தினேஷ் குணவர்தன

ஸ்ரீலங்கன் விமானச் சேவை மற்றும் விமான நிலையத்தை அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் மக்களுக்குச் சுமை இல்லாதவாறு முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது எனப் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) பிரதமரிடம் கேள்விக்கான வேளையின் போது எதிர்க்கட்சி எம்பி ஹேஷா விதானகே எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கன் விமானச் சேவை மற்றும் விமான நிலையத்தை அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் நிறுவனமாகவும் மக்களுக்குச் சுமை இல்லாதவாறு முன்னெடுப்பதற்குத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

அதன் பிரகாரம் பயிற்சிகளுக்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணங்களை மட்டுப்படுத்தல், மிக அத்தியாவசியமான ஆட்சேர்ப்பை மட்டும் மேற்கொள்வது, அனாவசிய கொள்வனவுகளை மட்டுப்படுத்தல், சம்பளத் திருத்தம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குதல் போன்ற விடயங்களை மேற்கொள்ள இருக்கிறோம்.

அதேவேளை, ஸ்ரீலங்கன் விமானச் சேவை நிறுவனம் அரசாங்க வங்கிகள் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கவுள்ள கடன் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு ஹேஷா விதானகே எம் பி எழுப்பிய கேள்விக்குப் பிரதமர் பதிலளிக்கையில்,

ஸ்ரீலங்கன் விமானச் சேவை நிறுவனம் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரை இரண்டு அரச வங்கிகளுக்கும் 385.12 மில்லியன் டொலர் வழங்கப்பட வேண்டியுள்ளது.

அந்த வகையில் இலங்கை வங்கிக்கு 217.42 மில்லியன் டொலரும் மக்கள் வங்கிக்கு 167. 71 மில்லியன் டொலரும் கடனாக வழங்க வேண்டியுள்ளது எனினும் 2024 மார்ச் 31ஆம் திகதி வரை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்திற்குக் கடன் வழங்க வேண்டியதில்லை என்றார்.

இலங்கையை வந்தடைந்தார் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி  !

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி  சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.

ஈரானுக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக மத்தல சர்வதேச விமான நிலையத்தை ஈரான் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் வந்தடைந்துள்ளனர். பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

 

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

 

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைசாத்திடப்படவுள்ளது.

 

அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகைதந்துள்ள ஈரான் ஜனாதிபதி, அங்கிருந்து உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித்திட்டத்தை திறந்துவைத்துவிட்டு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக கொழும்பை வந்தடையவுள்ளார்.

கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு சந்திப்பை நடாத்தவுள்ள ஈரான் ஜனாதிபதி, பின்னர் நாடு திரும்பவுள்ளார்.

ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உமா ஓயா பல்நோக்குத்திட்டத்தைத் திறந்துவைப்பதே ஈரானிய ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயத்தின் நோக்கமாகும்.

உமா ஓயா பல்நோக்குத்திட்டம் 2011 ஆம் ஆண்டு ஈரானின் ஏற்றுமதி மேம்பாட்டு வங்கியின் கடனுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இருப்பினும் அதனைத்தொடர்ந்து பூகோள அரசியல், பொருளாதாரத்தடைகள் ஈரானில் தாக்கங்களை ஏற்படுத்தியதன் விளைவாக, உமா ஓயா திட்டத்துக்கான நிதி உள்நாட்டு திறைசேரி ஒதுக்கீடுகளுக்கு மாற்றப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் புஹல்பொல நீர்த்தேக்கத்திலிருந்து சேகரிக்கப்படும் நீர், 4 கிலோமீற்றர் சுரங்கப்பாதையின் ஊடாக டயரபா நீர்த்தேக்கத்துக்குச் செல்கிறது.

அங்கிருந்து 15.5 கிலோமீற்றர் சுரங்கப்பாதை ஊடாக எல்ல, கரந்தகொல்ல பகுதியில் உள்ள 2 நிலத்தடி விசையாழிகளுக்குச் செல்கிறது.

இவ்விசையாழிகள் ஒவ்வொன்றும் 60 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், அவை தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.

“நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை தாக்கி உயிராபத்தை ஏற்படுத்திய அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.” – பிரதமர் தினேஷ் குணவர்தன

திருகோணமலையில்  திலீபனின் ஊர்தி பவனியின் போது நாடாளுமன்ற உறுப்பினருக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அந்தச் சம்பவங்களின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது குண்டர் குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாக்குவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. கொட்டன்கள் கொண்டு தாக்கி நாடாளுமன்ற உறுப்பினருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குழுவினர் கைது செய்யப்படுவார்கள்.

இந்தச் சம்பவங்களின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.

நாட்டில் இன வன்முறையை மீண்டும் தூண்டச் சிலர் முயற்சிக்கின்றனர். அதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது.” என்றார்.

மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ச..?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் குழுவொன்று ஆலோசனைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன. இந்த நிலையில், குறித்த செய்தி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வார இறுதி பத்திரிகைக்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார். பொதுஜன முன்னணியில் தான் ஒரு கட்சித் தலைவர் என்றும் அக்கட்சியுடன் தொடர்புடைய அரசியல் முன்னணியின் தலைவரும் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனவே கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு தலை வணங்குவதே தமது கொள்கை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறாயினும், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தனது கடமைகளை சிறப்பாக செய்து வருவதாகவும், அவரை பதவியில் இருந்து நீக்க எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உலகில் சுற்றுலாப்பயணிகள் முதலில் விஜயம் செய்யும் நாடாக இலங்கை !

ஊடகங்கள் காட்டுவது போல் இலங்கையில் மோசமான சூழல் இல்லை என்பதால் உலகின் தற்போதைய நிலைவரப்படி சுற்றுலாப்பயணிகள் முதலில் விஜயம் செய்யும் நாடு இலங்கை என்று ஆசிய ஊடக மற்றும் கலாசார சங்கம் (ACMA) தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அந்தச் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் சுற்றுலாத்துறையை விரைவாக மீட்டெடுப்பதற்கு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக அந்த சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையிலிருந்து விடுபட இலங்கைக்கு உடனடியாக நிதி மறுசீரமைப்பு வசதிகளை வழங்கியமைக்காக இந்தியாவுக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

நீக்கப்படுகிறது இலங்கையர்கள் வெளிநாட்டவர்களை திருமணம் செய்வதற்கு இருந்த தடை !

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதை காரணம் காட்டி வெளிநாட்டில் உள்ளவர்கள் இலங்கையர்களை திருமணம் செய்வது தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை உடனடியாக மீள எடுக்குமாறு இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன பதிவாளர் நாயகத்தை அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக ‘பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழை பெற வேண்டும் என்ற நடைமுறை காரணமாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய எதிர்ப்பார்க்கும் எந்தவொரு இலங்கையரும், அந்தத் திருமணத்தை பதிவு செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் ‘பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்’ பெறுவது கடந்த ஜனவரி மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் இலங்கையர்களை திருமணம் செய்ய விரும்பும், வெளிநாட்டவர்கள், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ‘பாதுகாப்பு அனுமதி அறிக்கையை’ பெற, பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என ஆறு மாதங்களுக்குள் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இலங்கைக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் தமது வாழ்க்கைத் துணையின் நுழைவு விசாவை பயன்படுத்தி நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாலேயே இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி நாட்டிற்குள் அடிப்படைவாதம் வேரூன்றுவதைத் தடுப்பதற்கு இலங்கை மக்கள் திருமணம் செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளிடமிருந்து தடைநீக்கல் சான்றைப் பெற்றுக்கொள்ளுமாறு உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வெளிநாட்டில் உள்ளவர்கள் இலங்கையர்களை திருமணம் செய்வதற்கான தடைகளை நீக்குமாறு, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது பிரதமர் ஆலோசனையை வழங்கியுள்ளார்.

குடிசைகள் இல்லாத இலங்கையை உருவாக்குவதே இலக்கு – பிரதமர் தினேஷ் குணவர்தன

குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

‘மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் யாரையும் எதனையும் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் அலரி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற 36ஆவது உலக வாழ்விட தின தேசிய கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக வாழ்விட தின கொண்டாட்டத்துடன் இணைந்து 650 வீட்டு உரிமைப் பத்திரங்களும் வழங்கப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மனித உயிர்களுக்கு பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் நம்பிக்கை உள்ள வீட்டில் பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் வசதி குறைந்த 1200 தோட்டங்களுக்கு நிரந்தர வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

“ரணில் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு தருவார்.”- பிரதமர் தினேஷ் குணவர்தன

சர்வகட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளமையை தற்போதைய அரசாங்கத்தின் சார்பில் மனதார வரவேற்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“சர்வகட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்தை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முழுமனதுடன் வரவேற்கின்றோம்.

நாட்டிலுள்ள தேசிய பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வுகாண சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே ஒரே வழி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்து நியாயமானதும், பாராட்டத்தக்கதும்.

இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார். எனவே, ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு என்ற வேறுபாடின்றி நாடாளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கம் அமைய முழுமையான ஆதரவை வழங்க முன்வரவேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.