பிரதமர் தினேஷ் குணவர்த்தன

பிரதமர் தினேஷ் குணவர்த்தன

தமிழர் பகுதிகளில் பௌத்தமயமாக்கலை ஏற்படுத்துவது நமது நோக்கமல்ல – பிரதமர் தினேஷ் குணவர்த்தன

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத்தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களை அழிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சு அதிக கவனம் செலுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

போர்க்காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் நினைவேந்த முடியும் – ஜனாதிபதி  ரணில்

போர்க்காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகள் வரும்போது இன ரீதியான, மொழி ரீதியான, மத ரீதியான கருத்து மோதல்கள் வெடிக்கின்றன.

அந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது என்பதில் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார். நினைவேந்தல்களை இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அமைதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

அந்த நிகழ்வுகள் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாகவோ அல்லது இன ரீதியான கிளர்ச்சியைத் தூண்டுபவையாகவோ இருக்கக்கூடாது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர “வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானவை அல்ல. எனவே வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது.” என தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிரதமராகிறார் கோட்டாபய ராஜபக்ச..? – பிரதமர் தினேஷ் குணவர்த்தன விளக்கம் !

“பிரதமர் பதவி நான் தேடிச் சென்று பெற்ற பதவி அல்ல. இந்தப் பதவியே என்னைத் தேடியே வந்தது.” என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக்க ஆளும் தரப்புக்குள் சிலர் சூழ்ச்சி செய்கின்றனர் என்று வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் வதந்தி.

அதிபரின் விருப்பத்துடனும் ஆளும் கட்சியின் பெரும்பான்மைப் பலத்துடனும் நான் பிரதமர் பதவியை வகிக்கின்றேன். இது நான் தேடிச் சென்று பெற்ற பதவி அல்ல. இந்தப் பதவி என்னைத் தேடியே வந்தது. பிரதமர் பதவியிலிருந்து என்னை நீக்கத் திரைமறைவில் எந்தச் சூழ்ச்சியும் இல்லை. எவரினதும் அழுத்தமும் எனக்கு வரவும் இல்லை. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஏகோபித்த ஆதரவுடன் தான் நான் பிரதமர் பதவியை வகிக்கின்றேன்.

நாடு திரும்பியுள்ள கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்கும் முடிவை இன்னமும் எடுக்கவில்லை. அவர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார் எனவும், பிரதமராகப் போகின்றார் எனவும் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை நீக்கப்பட்டது எதற்காக..? – பிரதமர் தினேஷ் குணவர்த்தன விளக்கம் !

புலம்பெயர் தமிழர்களையும் அவர்களது அமைப்புக்களையும் தடைப்பட்டியலில் வைத்துக்கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர்களின் உதவிகளை பெற்று கொள்ள முடியாது. எனவே அவர்களின் உதவிகளை பெற்று கொள்வதற்காக முதற்கட்டமாக சில அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கியுள்ளோம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
 ‘பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியடைந்த எமது நாட்டை மீளக் கட்டியெழுப்ப வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் உதவிகளைப் பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்கவுரையில் அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், புலம்பெயர் அமைப்புக்கள் மீதும் தனிநபர்கள் மீதும் தடையை வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் உதவிகளை எதிர்பார்க்க முடியாது.
 இதைக் கருத்திற்கொண்டு முதற்கட்டமாகச் சில புலம்பெயர் அமைப்புக்கள் மீதும், தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க அரசு முடிவெடுத்துள்ளது. தொடர்ந்து தடையில் உள்ள ஏனைய புலம்பெயர் அமைப்புக்கள் குறித்தும், தனிநபர்கள் தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தும்’ என குறிப்பிட்டுள்ளார்.