பிரேமகுமார் ஆனந்தராஜா

பிரேமகுமார் ஆனந்தராஜா

லண்டன் ஹரோவில் இன்னுமொரு தமிழ் பெண்குழத்தைகள் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கின் தீர்ப்பு!!!

லண்டன் ஹரோவில் இன்னுமொரு தமிழ் பெண்குழத்தைகள் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கின் தீர்ப்பு! தாயகத்தில் வீடுகட்டி பாலியல் குற்றத்தை மறைக்க கோயில் ஆசாமிகள் எத்தனிப்பு!!!

வட்பேர்ட், லண்டனில் வாழும் அறுபது வயதான சபாரட்ணம் அருள்சிகாமணி என்பவர் பெண் குழந்தையை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு ஏழரையாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ஹாட்போர்ட்செயர் பொலிஸ் பிரிவு மார்ச் 21, வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கின்றது. அண்மைக்காலத்தில் நிகழாத பாலியல் துஸ்பிரயோகங்களை விசாரணை செய்யும் பிரிவினரே இவ்வழக்கை விசாரித்து குற்றவாளிக்குத் தண்டணை பெற்றுக்கொடுத்துள்ளனர். தற்போது பருவ வயதில் உள்ள இப்பெண் 2011ம் ஆண்டு தனக்கு நிகழ்ந்த அநியாயங்களை அண்மையில் பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்தே இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு மகளீர் தினமான மார்ச் மாதம் 8ம் திகதி ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

இச்சம்பவம் பற்றி வட்பேர்டில் வதியும் சபாரட்ணம் அருள்சிகாமணியின் நண்பரொருவர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் தனக்கு அருள்சிகாமணியை ஒரு குடும்பபொறுப்பானவராகவே தெரியும் என்றும் ஊரிலிருந்த தன்னுடைய உறவுகளுக்கு உதவிவந்ததாகவும் அவர்களை வெளிநாட்டுக்கும் அழைத்து அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் அந்நண்பர் தெரிவித்தார். அந்நண்பர் மேலும் தெரிவிக்கையில் அருள்சிகாமணி இவ்வாறான ஒரு செயலைச் செய்தமை தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். வட்டூர் தமிழர் ஒன்றியம் யூகே இன் செயலாளராக இருந்த அருள்சிகாமணி 2018இல் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக, அருள்சிகாமணியின் நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

அருள்சிகாமணி வட்டுக்கோட்டை வட்டூரைப் பூர்வீகமாகக் கொண்ட போதும் அவர் பெரும்பாலும் வாழ்ந்தது வட்டக்கச்சி, கிளிநொச்சியில் என்கிறார் அருள்சிகாமணியின் ஊரவர். அவர் மேலும் குறிப்பிடுகையில் திருமணமாகி ஒரு பெண் குழந்தையின் தந்மையுமான அருள்சிகாமணி க்கு வேறொரு பெண்ணோடு உறவு இருந்ததாகவும் தெரிவித்தார். அருள்சிகாமணியின் மகள் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்கின்றார். தந்தையரின் இத்தகாத செயல்கள் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்கிறார் அந்நண்பர்.

இதேபோன்று பாலியல் துஸ்பிரயோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரேமகுமார் ஆனந்தராஜாவின் பிள்ளைகளும் மிகுந்த அவமானத்தைச் சந்திக்க நேர்ந்தது. பிரித்தானிய ஆலயங்களுடன் நெருங்கிப் பணியாற்றிய பிரேமகுமார் ஆனந்தராஜாவின் தண்டனையைக் குறைக்க பிரித்தானிய சைவக் கோயில்கள், பக்தர்கள், அறிவுஜீவிகள் 40க்கும் மேற்பட்டவர்கள் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி தண்டனையைக் குறைக்கக் கோரிய போதும் அவருக்கு பின் தண்டனை அதிகரிக்கப்பட்டமையை தேசம்நெற் வெளிக்கொணர்ந்தது குறிப்பிடத்தக்கது. பிரேம்குமாரைத் தொடர்ந்து அவரோடு ஓரே வகுப்பில் கல்வி கற்ற சுப்பிரமணியம் சதானந்தனும் பெண்குழந்தையின் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்தமைக்காக சிறைத்தண்டனை பெற்றார்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான இந்த மூன்று பாலியல் துஸ்பிரயோகக் குற்றவாளிகளும் லண்டனின் ஹரோ – வெம்பிளிப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே. சபாரட்ணம் அருள்சிகாமணி வட்பேர்ட்டில் தற்போது வாழ்ந்தாலும் இவரும் ஹரோவில் நீண்டகாலம் வாழ்ததாக அவருடைய நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். நேரடியான உடல்ரீதியாக பாலியல் துஸ்பிரயோகங்கள் நிகழும் அதே சமயம் சமூக வலைத்தளங்களிலும் பெண்கள் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில ஆண்கள் சமூக வலைத்தளங்களை பெண்களுக்கு ஆபத்தானதாக மாற்றியிருப்பது தமிழ் சமூகத்தின் பிரச்சினை என்கிறார் தாயகம் மட்டக்களப்பைச் சேர்ந்த நளினி ரட்னராஜா. மகளீர் தினத்தையொட்டி அவர் தேசம்நெற்குக்கு வழங்கிய நேர்காணலில் நல்ல குடும்பச் சுழலில் இருந்து வராத ஆண்கள், பாலியல் வறட்சி கொண்டவர்கள் அதனால் வக்கிரமொழிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

லண்டன் ஹரோ வெம்பிளி பகுதியில் வாழ்கின்ற பார் உரிமையாளர் ரரின் கொன்ஸ்ரன்ரைன், புலிகளின் கோயிலாக இருந்ததை வெற்றிகொண்ட வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் போன்றோர் தங்களோடு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத பெண்களைப் பற்றிய அவதூறுகளை பரப்புவதுடன் பெண்களின் படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மைக்காலங்களில் பாலியல் உறுப்புகள் பற்றியும் இவர்கள் சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் பெரும்பாலும் அங்கம்பெறும் சமூகவலைத்தளங்களிலேயே இதனைச் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்ததாகவும் சொல்லி சம்பந்தப்பட்ட பெண்களுக்கு புலத்திலும் தாயகத்திலும் நெருக்கடிகளை உண்டுபண்ணும் வகையில் பதிவுகளை கடந்த சிலமாதங்களாகவே பகிர்த்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு காண்கிறீர்கள்.

சபாரட்ணம் அருள்சிகாமணியின் பாலியல் துஸ்பிரயோகத்தை விசாரணை செய்த புலனாய்வுக்குப் பொறுப்பான சார்ஜன்ட் மார்க் வில்மோர் இவ்வழக்குப் பற்றிக் குறிப்பிடுகையில்: “எனது குழு அண்மைக்காலத்தில் நடக்காத பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கின்றோம். சம்பவம் நடந்த போது பல்வேறு காரணங்களுக்காக அன்று அவர்கள் தங்களுக்கு நடந்ததை பொலிஸாருக்கு தெரிவிக்கவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம், குற்றம் எப்போது நடந்திருந்தாலும் என்ன மாதிரியான சூழ்நிலையில் நடந்திருந்தாலும் இவ்வாறான குற்றச்சாட்டுகளைத் தீர விசாரிப்போம். பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாவது என்பது ஒரு போதும் உங்களுடைய தவறு அல்ல. நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் இந்த விசாரணைக் காலகட்டத்தில் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தாலோ அவ்வாறாக பாதிக்கப்பட்டது பற்றி அறிந்திருந்தாலோ பொலிஸ்க்கு உடனடியாகத் தொடர்புகொள்ளவும். “ எனக் கேட்டுக்கொண்டார்.

இதே லண்டன் ஹரோ – வற்போர்ட் பகுதியில் மற்றுமொரு போலிச்சாமியாரின் பாலியல் துஸ்பிரயோக வழக்கு விரைவில் நீதிமன்றத்துக்கு வரவுள்ளது. லைக்கா சாமியார் என்று லண்டனில் பிரபல்யமான லைக்கா துணைத் தலைவர் பிரேமநாதன் சிவசாமியின் ஆதரவு பெற்ற ஓம் சரவணபவ என்ற கேரளாவைச் சேர்ந்த புலிக்கள் முரளிகிருஷ்ணன் என்ற ஆசாமி லண்டனில் தமிழர்களின் பணத்தை உண்டியல் இல்லாமலே அள்ளி எடுத்தார். அவரை வீட்டுக்கு கூப்பிட்டு பாத பூஜை செய்தால் அந்த வீட்டு நட்புகள், உறவுகள் எல்லாம் வந்து பணத்தை விசுக்க ஒரு விசிற்றுக்கு ஓரிரு மணித்தியாலத்தில் இலங்கை ரூபாயில் ஒரு கோடி வசூலாகும். பாத பூஜை என்ற பெயரில் இந்த ஆசாமியின் காலைக் கழுவிக்குடிக்கும் பழக்கத்தை தற்போது தாயகத்திலும் பழக்கியுள்ளனர். இந்தப் போலி ஆசாமியை நைநாதீவுக்கு அழைத்து வந்து காலைக் கழுவிக்கு குடிக்க வைத்த கஜன் தற்போது மீண்டும் தாயகம் வந்தள்ளார்.

இளம்பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு லைக்கா பிரேமின் பெயிலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள புலிக்கள் முரளிகிருஸ்ணன் கோஸ்டி தாயகத்தில் வீடுகட்டிக் கொடுக்கிறோம் என்ற பாணியில் புது லைன் ஓடுகின்றனர். லண்டன் வற்போர்டில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு நடக்க இருக்கின்ற சமயம் ஏழை மக்களின் வறுமையைப் பயன்படுத்தி லண்டன் வறட்போர்டில் இருந்து ஊருக்குச் சென்றுள்ள இந்த பாலியல் குற்றம்சுமத்தப்பட்ட ஆசாமி புலிக்கள் முரளிகிருஷ்ணனை வீட்டின் முகப்புச் சுவரில் பதித்து அந்த ஆசாமியைக் கடவுளாக்கும் கைங்கரியத்தை கஜன் என்பவரும் அவரது நண்பரும் மேற்கொள்கின்றார்கள். இந்தப் போலிக்கடவுளர்கள் பணம் கொடுத்தாலென்ன, வீடுகள் கட்டிக்கொடுத்தாலென்ன அதனை மறுக்காமல் தாயக மக்கள் வாங்க வேண்டும். ஏனெனில் அது அவர்களுடைய சொந்தப் பணம் கிடையாது. பிரித்தானியத் தமிழர்களிடம் இருந்து ஏமாற்றிக் கொள்ளையிட்ட பணம். அது தாயக மக்களுக்குச் சேரவேண்டிய பணம். ஆனால் அந்த வீடுகளில் உள்ள பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட ஆசாமியின் உருவப் படத்தை மாட்டாதீர்கள். அதனை உடைத்துவிட்டு உங்கள் மதிப்புக்குரியவர்களின் உருவப்படத்தை பதித்துவிடுங்கள்.

சபாரட்ணம் அருள்சிகாமணிக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டணை வழங்கப்பட்டதுடன் ஆயுள் காலத்துக்கும் அவர் பாலியல் குற்றவாளி என்ற பட்டியலிலும் இவரது பெயர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. புலிக்கள் முரளிகிருஷ்ணனின் வழக்கு விரைவில் பிரித்தானிய நீதிமன்றத்துக்கு வர உள்ளது.
வழித் தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைப்பது போல் புலம்பெயர்நாடுகளில் கோயில்கள் என்ற பெயரில் பெரும் உண்டியல் வியாபாரம் நடைபெறுகின்றது. கோயில்களை வைத்து வீடுகட்டுகிறோம் என்று சொல்லி படத்துக்கும் யூரியூப்புக்கும் எவ்விதிகுறைவுமில்லை. உண்டியல் பணத்தில் சாத்திரத்துக்கு வீடும் மிகுதியில் காம விடுதிகளும் அந்தப்புரங்களும் கட்டப்படுகிறது. இவர்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலேயே பெண்களை நிம்மதியாக இருக்கவிடுவதில்லை. இனி தாயகத்தில் கேட்கவா வேண்டும். கோயில் ஆசாமிகள் பற்றி மக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டும்.

பாலியல் குற்றவாளிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கும் கலாநித்திகளும் கல்லாநித்திகளும்! சிறுவயதில் பாலியல் கொடுமையை எதிர்கொண்டவர்களின் பகிர்வு!!

பதின்மூன்று வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பாலியல் குற்றவாளி பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு 42 பேர் நற்சான்றிதழ் வழங்கி குற்றவாளிக்கு கிடைக்க இருந்த அதிகபட்ச தண்டணையை குறைக்க அல்லது குற்றவாளியை தண்டணையில் இருந்து விடுவிக்க தீவிர முயற்சி எடுத்துள்ளமை தேசம்நெற் க்கு தெரியவந்துள்ளது. பாலியல் குற்றவாளி பிரேமகுமாருக்கு நற்சான்றிதழ் வழங்கும் முயற்சியில் முன்னின்றவர்களில் கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன் மிக முக்கியமானவர். சமூகத்தில் தன்னை மதிப்புக்குரியவராக கட்டமைத்து வைத்துள்ள கலாநிதி நித்தியானந்தன் டொக்டர் நித்தி என்றும் அறியப்பட்டவர். ரட்ணம் பவுண்டேசன் ஸ்தாபகர் மட்டுமல்ல மேற்கு லண்டன் தமிழ் பள்ளியை நிறுவி நீண்டகாலம் அதன் அதிபராகவும் செயற்பட்டவர். நித்தி, தன் பள்ளியில் கற்ற மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டுகொளாமல் அவர்களுக்கு எதிராகச் செயற்பட்டு ஒரு பாலியல் குற்றவாளிக்காக நற்சான்றிதழ் வழங்கி உள்ளார். இந்த நற்சான்றிதழ்களைப் பெறுவதற்குப் பெரும் முயற்சிகளையும் முடுக்கி விட்டிருந்தார். இது சமூகச்செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையையும் கடுமையான ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் குற்றவாளி பிரேமகுமாருக்கு தண்டனை வழங்கப்பட்ட பெப்ரவரி 2ம் திகதி குற்றவாளிக்கு நற்சான்றிதழ் வழங்கிய 42 பெயரின் விபரங்களும் நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது. அதில் நித்தி மிக முக்கியமானவர். இவரும் இவரது சகபாடிகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எதிராக வாதந்திகளையும் பரப்பி வருகின்றனர் எனத் தெரியவருகின்றது. “இவையள் காரில் கொண்டு திரிந்து ஏற்றி இறக்க கேட்க்கிறது… இவை ஒழுக்கா இருக்கவில்லை…” என்றெல்லாம் பொருள்படும் வகையில் கதைத்து நித்தி, பாலியல் குற்றவாளிக்கு தன்னுடைய முழு ஆதரவையும் வழங்கி வருகின்றார்.

பாதிக்கப்பட்டவரையும் அவருடைய தாயாரையும் கொச்சைப்படுத்தும் கதையாடல்கள் கலாநித்திகளாலும் கல்லாநித்திகளாலும் பரப்பப்பட்டுள்ளது. “அவவுக்கு பரீட்சையை எதிர்கொள்ளத் தைரியமில்லாமல் இப்படிச் செய்திருக்கிறா?”, “காரில் ஏத்தி இறக்க கேட்கிறவைக்கு ஒரு பாடம் படிப்பிக்கத் தான் நான் கரக்டர் சேட்டிபிக்கற் குடுத்தனான்”, என்றொல்லாம் வாந்தி பரப்பினதோடு நில்லாமல் ஒரு இணையத்தில் “கள்ளக் காதலியின் 13 வயது மகளோடு உறவு” என்ற அளவுக்கு கதைகள் பரப்பப்பட்டு செய்திக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. பிரான்ஸில் இருந்து இச்செய்தியை வெளியிட்டவர்களின் தொடர்பு இலக்கம்: 0033753627270 இவ்விலக்கத்துக்கு உரியவர்கள் வெளிக்கொணரப்படுவது அவசியம்.

மேலும் ஆச்சுவே உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்தில் குற்றவாளியான பிரேமகுமாரை விடுவிக்க வேண்டும் தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் விசேட பூசைகள் நடத்தப்பட்டு உள்ளது. மேலும் பாலியல் குற்றவாளியான பிரேமகுமாருக்கு நற்சான்றிதழ் வழங்கியபட்டியலிலலும் ஆச்சுவே உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்துடன் தொடர்பானவர்கள் சிலர் உள்ளனர். இப்பட்டியலில் சில மருத்துவர்களும் பெண்களும் சமூக செயற்பாட்டாளர்களும் அடங்குகின்றனர். இவர்களின் முழமையான பதிவு விரைவில் தேசம்நெற்றில் வெளியிடப்படும்.

தனக்கு ஜேர்மனியில் இழைக்கப்பட்ட பாலியல் துஸ்பிரயோகத்தை பகிர்ந்து கொள்ளும் தமிழ் பெண் ஜென்னி ஸ்ரேக், “எனக்கு நிகழ்ந்த கொடுமையை அறிந்தும் தமிழ் சமூகம் என்னோடு நிக்கவில்லை. அது என்னை மிகவும் வருத்தியது. நான் கைவிடப்பட்டது போலவும் உணர்ந்தேன்” எனத் தெரிவித்தார். “ஐந்து வயதில் தொடங்கியது எனக்கு ஞாபகம் இருக்கின்றது. பின்னிரவில் யாருக்கும் சத்தம் கேட்டுவிடாமல் என்னை காப்பற் (carpet) போடப்பட்ட மாடிப்படிகளால் தூக்கிக் கொண்டு வந்த வரவேற்பறையில் உள்ள சொகுசு இருக்கையில் படுப்பார் தன் மீது என்னை படுக்கவைப்பார். நீண்ட ரஸ்க்கை உமிந்ததைவிட எதுவும் தெரியாத அந்த வயதில் தன்னுடையதை என்னுடைய தொண்டைக்குள் திணித்தது இன்னமும் மங்கலாக ஞபகம் இருக்கின்றது” என்று தனக்கு இளம் வயதில் நடந்ததை விபரித்தார் ஜென்னி.

ஜென்னி மேலும் குறிப்பிடுகையில் “அந்த வயதில் இருந்து குழப்பம், கோபம், அவமானம், மறுதலிப்பு. என்னுடைய குழந்தைப் பருவம் எங்கே?” என்று கேள்வி எழுப்பினார். “அவரை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போதும் அல்லது நினைக்கும் போதும் என்னுடைய உணர்வுகள் காட்டுத்தனமாகப் அலைமோதும்” என்றவர் “எனக்கு 17 வயதிருக்கும் போது அவர்கள் என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள். அடிக்கும் போது பயத்தில் கதைக்கவே வராது. கதைத்தால் அதற்கும் அடிவிழும் என்ற பயம். ஒரு கனப்பொழுதில் ஒரு தைரியம் வந்து அவரை நிறுத்தச் சொன்னேன். அவருக்கு என்னில் கை வைக்க உரிமையில்லை என்றேன். எனது அம்மாவின் முகத்தில் அதிர்ச்சியைப் பார்த்தேன். அம்மாவுக்கு எதுவும் சொல்ல முடியவில்லை. நான் சொன்னால் அதிலிருந்து எதிர்பாராத ஆபத்துக்கள் வந்துவிடும் என்று பயம். என்னுடைய சகோதரன் என்னை இன்னுமொரு அறைக்கு அழைத்துச் சென்றான். அவனிடம் சொன்னேன். எனக்கு நடந்ததை விபரிக்க தமிழில் எனக்கு வார்த்தைகள் தெரிந்திருக்கவில்லை. என்னுடைய சகோதரனின் கண்ணில் கண்ணீர். அது அவனுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது” என்றார் ஜென்னி.

“நான் படுக்கையில் கிடந்தேன் துவாயையும் கடந்து இரத்தம் வடிந்தோடியது. அம்மா வந்தார். அவரால் நம்ப முடியவில்லை. சிரித்தார். கண்ணீர் எனது முகத்தை நனைத்தது. இதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும். இரவு அம்மா அவரோடு முரண்பட்டார். என்னை தங்கள் படுக்கையறைக்கு அழைத்தார். என்னை வைத்துக்கொண்டு அம்மா கேட்டார். எல்லாவற்றையும் அவர் மறுத்தார். நாட்கள் ஓடியது. ஏன் தனக்கு முதலிலேயே சொல்லவில்லை என்று அம்மா அடிக்கடி கேட்பார். சொல்லி இருந்தால் தன்னால் காப்பாற்றியிருக்க முடியும் என்றார். இதனை நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை. நான் ஒரு குழந்தை என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை.

ஆண்டுகள் ஓடி இரண்டு ஆண்டுகளில் எதுவுமே நடக்காதது போல் அவர்கள் நடந்துகொண்டனர். அவர் இப்போதெல்லாம் முன்னர் எனக்குக் காட்டிய கொடுமைக்காரன் அல்ல. எங்களின் அப்பா, அம்மாவின் கணவர், எங்களின் குடும்பத்தில் ஒருவர். ஓற்றுமையான குடும்பத்தைத்தானே நானும் எதிர்பார்த்தேன். ஆனால் இல்லை. எனது இதயத்தில் கத்தியைச் செருகி திருப்பியது போல் இருக்கும். 19 வயதில் வீட்டைவிட்டு வெளியேறினான்” என்று தனக்கு 13 ஆண்டுகள் இழைக்கப்பட்ட வார்த்தைகளால் விபரிக்க முடியாத பாலியல் கொடுமையை பகிர்ந்துகொண்டார் ஜென்னி ஸ்ரேக். பின் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர் தன் குடும்பப் பெயரை நீக்கிவிட்டு ‘ஸ்ரேக்’ என்ற ஜேர்மன் பெயரை சுவீகரித்துக்கொண்டார். உளவியல் துறையில் பட்டப்படிப்பை முடித்து தற்போது சமூகசேவகியாக பணியாற்றுகின்றார்.

ஜென்னி போன்ற பிரேமகுமாரினால் பாதிக்கப்பட்ட சிறுமி உட்பட்டவர்களின் கொடூர அனுபவங்கள் இப்படியிருக்க இந்த நவீன சிதைகளையும் அவர்கள் பெற்ற பெண் குழந்தைகளையும் தீக்குளிக்கும் படி கேட்கின்றது தமிழ் சமூகம். குற்றவாளிக்காக நற்சான்றிதழ் கையெழுத்து வேட்டையை முன்னின்று நடாத்திய இந்தக் கலாநித்திகளும் கல்லாநித்திகளும் தமிழ் சமூகத்தின் சாபக்கேடு என்கிறார் லண்டனில் வாழும் சமூக அரசியல் ஆர்வலரும் ஊடகவியலாளருமான பா நடேசன்.

குற்றவாளிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்ட விடயம் தொடர்பாக பிரேமகுமாருக்கு தண்டனை வழங்கப்பட்டு சில மணிநேரங்களில் தேசம்நெற் நித்தியோடு தொடர்புகொள்ள முயற்சித்தது முடியவில்லை. மறுநாள் அவரோடு தொடர்பு கொண்டு “நீங்கள் பாலியல் குற்றவாளியான பிரோமகுமாருக்கு கரக்ரர் சேட்டிபிகற் (நற்சான்றிதழ்) கொடுத்தனீங்களா?” என்று கேட்ட போது, “ஓம் நான் கொடுத்தனான் தான்” என்றார். “ஒரு பாலியல் குற்றவாளிக்கு நீங்கள் எந்த அடிப்படையில் கரக்டர் சேட்டிபிக்கற் கொடுதீங்கள்?” என்று தேசம்நெற் கேள்வி எழுப்பியது. “அதையெல்லாம் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. அது பிரைவேட் மற்றர் (தனிப்பட்ட விடயம்)” என்றார் நித்தி. “14 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் துஸ்பிரயோம் செய்த குற்றவாளிக்கு கரக்டர் சேற்றிபிக்கற் குடுப்பது உங்களுக்கு வேண்டுமென்றால் ப்ரைவேட் மர்ரராக இருக்கலாம் ஆனால் இதுவொரு சமூகப் பிரச்சினை. நீங்கள் சமூகத்திற்கு பதிலளிக்க வேண்டும்” என்று தேசம்நெற் வலியுறுத்திக் கேட்ட போதும் “ இது பிரைவேட் மற்றர்” என்று சர்வசாதாரணமாக, பாதிக்கப்பட்ட சிறுமிமீது எவ்வித கரிசனையும் இல்லாமல் பதிலளித்தார் நித்தி. “நீங்கள் இந்த கரக்டர் சேர்டிபிக்கற்றை, பிரேமகுமாரது பாலியல் தண்டணை நிரூபிக்கப்பட முதல் கொடுத்தீங்களா அல்லது பிரேமகுமார் பாலியல் குற்றவாளி என்று தெரிந்துகொண்டும் கொடுத்தீங்களா?” என்று தேசம்நெற் வினவியபோது, அதுவும் “ப்ரைவேட் மர்ரர்” என்று கூறி பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி நித்தியின் பேத்தியின் வயதையொத்தவர். நித்திக்கும் ஒரு பெண்பிள்ளை இருக்கின்றார். அத்தோடு பாதிக்கப்பட்ட சிறுமி டொக்டர் நித்தியின் தமிழ் பள்ளியில் தமிழ் படித்தவர். தன்னையொரு சிறந்த நிர்வாகியாக தக்க வைத்த நித்தி “நெஞ்சினில் ஈரமும் இதயமுமற்ற மனிதாபிமானமற்ற ஆணவம்பிடித்தவொருவர்” என்கிறார் ஈரோஸ் அமைப்பின் ஆதரவாளர். நித்தி ஈரோஸ் (Eelam Revolutionary Organization of Students) உடன் தொடர்புடையவர் என்று சொல்வதே எமக்கு அவமானம் என அவர் தெரிவித்தார்.

பரிஸில் வாழும் பெண்ணியச் செயற்பாட்டாளரான ஜெயந்தி தளையசிங்கம் பூரணி, சூரியா ஆகிய பெண்கள் அமைப்புகளில் பணியாற்றியவர், இது தொடர்பாக தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் “ஒரு சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பாலியல் குற்றவாளிக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் மனநிலையை என்னவென்று சொல்வது?” என்று கேள்வி எழுப்பியதோடு “இந்தக் கீழான மனநிலைகொண்ட மனிதர்களை சமூகம் ஓரம்கட்டி ஒதுக்கி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

“மோரலி பாங்கிரப்ற் (morally bankrupt) ஆன நித்தி ஒரு பக்கத்தில் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு துணைபோய்க்கொண்டு மறுபக்கத்தில் தந்தையின் பெயரில் ரட்ணம் பவுண்டேஸனை வைத்துக்கொண்டு சிறார்களுக்கு பள்ளிக்கு ஸ்மார்ட் போர்ட் (smart board) கொடுத்து சமூகத்தை ஏமாற்ற முயற்சிக்கின்றார்” என்கிறார் எட்ச்வெயரைச் சேர்ந்த நித்தியின் நண்பர்.

“என்னுடைய சாமத்திய வீட்டுக்கு புகைப்படக்காரராக வந்தவர் மூடிய கதவுகளுக்குப் பின்னால் என்னை தன்னுடைய ஆதிக்கத்தைப்பயன்படுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்தார். இப்போது இந்த விசாரணைகள் நடந்துகொண்டிருப்பதால் இதற்குமேல் இது பற்றி கதைக்க முடியாது” என்கிறார் குழந்தைப் பருவத்தில் பாதிக்கப்பட்ட தர்சிகா இளம்கீரன். அவர் மேலும் குறிப்பிடுகையில் இளம்வயதில் நடந்த இந்த பாலியல் துஸ்பிரயோகம் என் அடையாளத்தை கேள்விக்கு உட்படுத்திவிட்டது. நிகழ்காலம் உறைந்துவிட்டது. எதையும் எல்லாவற்றையும் எல்லோரையும் கேள்விக்கு உட்படுத்த ஆரம்பித்தேன். வலி, தடுமாற்றம், நிலையின்மை, குழப்பம், வெட்கம், கோபம் இந்த உணர்வுகளே என்னை உலுப்பியது. இதைச் சொல்வதற்கான மொழி எனக்குத் தெரியவில்லை. பல ஆண்டுகளாக நான் இதை யாருக்கும் சொல்லவில்லை. பகலில் எதுவுமே நடக்காதது மாதிரி நடந்துகொள்வேன். இரவில் எல்லோரும் தூங்கும்போது அழுவேன்” என்று தன்மீது நடத்தப்பட்ட அநீதியை விபரித்தார் தர்சிகா இளங்கீரன். தற்போது தர்சிகா இளன்கீரன் உளவியல் நலன்பேணுபவராக பணிபுரிகின்றார்.

ஜென்னி ஸ்ரேக் உம் தர்சிகா இளன்கீரனும் தங்களுக்கு நிகழ்ந்ததையிட்டு துவண்டுவிடவில்லை. அவர்கள் இருவரும் இணைந்து தங்களைப் போன்ற இளம்வயதில் பாலியல் துஸ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலொசனைகளும் ஆறதலும் வழங்கி வருகின்றனர். அன்பு – Abuse Never Becomes Us – ANBU என்ற இந்த அமைப்பு பாலியல் துஸ்பிரயோகங்களில் இருந்து மீண்டெழுந்த இவ்விரு பெண்களாலும் உருவாக்கப்பட்டு 2016 முதல் கனடாவிலும் தற்போது பிரித்தானியாவிலும் இயங்கி வருகின்றது.

இவ்வாறு எல்லோராலும் மீண்டெழுந்துவர முடிவதில்லை. அவர்களும் மீண்டெழுந்துவர சமூகத்தில் மாற்றம் வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு துணைபோகின்ற, பாதிக்கப்பட்டவர்கள் மீது பழி போடுகின்ற கலாநித்திகளும் கல்லாநித்திகளும் சமூகத்தில் இருந்து துடைத்தெறியப்பட வேண்டும். பெண்களை இழிவு செய்யும் மடமையை கொழுத்த வேண்டும்.

லண்டனில் தன் இளம் வயதில் தன் வீட்டில் இலங்கையில் இருந்து வந்து தங்கியிருந்த தூரத்து உறவினரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானவர் தர்ஷனா நவேந்திரன். சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளான மற்றைய சிறுமிகளைப் போலவே இவரும் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை வெளியே தன் பெற்றோருக்கும் வெளிப்படுத்தவில்லை. அதே சமயம் அந்த வலி அவரை மன உளைச்சலின் எல்லைக்கே இட்டுச்சென்றது. தன் வலியை தனிக்க அவர் கலையையும் ஆக்கப்படைப்பையும் நாடினார். தர்ஷனா தன் வலியோடு பிரசவித்தது தான் Bags of Pain என்ற அவருடைய கவிதை நூல். தன்னுடைய வாழ்வின் வெவ்வேறு காலகட்டத்தில் புனைந்த அக்கவிதைகளை பாலியல் கொடுமைகளில் இருந்து மீண்டெழுந்த வெவ்வேறு நிலைகளில் இருந்த இருவர் உரையாடும் பாணியில் அக்கவித்தைகள் தொகுக்கப்பட்டு உள்ளது. தன்னுடைய சினேகிதி பற்றி குறிப்பிடும் மயுரி திரவியநாதன், தன்னுடைய வாழ்க்கையில் மோசமான நிலைகளைக் கடந்துவந்த தர்ஷனா மிகவும் அறிவுபூர்வமான பெண் என்றும் பாலியல் குற்றங்களில் இருந்து மீண்டெழுந்து வருபவர்களுக்கு உதவுவதையே அவர் தன்னுடைய இலக்காகக் கொண்டிருப்பதும் மிகவும் முக்கியமானதொரு அம்சம் எனத் தெரிவிக்கின்றார். தர்ஷனா தனது சமூகவலைத்தளங்களை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து மீண்டெழுந்து வருபவர்களுக்கு குரல்கொடுக்க பயன்படுத்துகின்றார்.

லண்டன் தமிழ் நிலையத்தினால் நடத்தப்படும் தமிழ் பள்ளியின் அதிபராக பணியாற்றும் திருமதி மாதவி சிவலீலன் தேசம்நெற்கு அனுப்பிவ வைத்த குறிப்பில் , “இது போன்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பல நடைபெற்ற போதும் இதற்கு நியாயம் கேட்டுப் பெற்றோரோ பிள்ளைகளோ வெளியில் வருவதில்லை. எம் சமூகம் அவர்களையே குற்றவாளிகளென முத்திரை குற்றிவிடுகின்றது. இத்தகைய சமூகத்தில் இருந்து பெண்குழந்தைகளாயினும் ஆண்குழந்தைகளாயினும் இவர்களை எவ்வாறு காப்பாற்றி வளர்த்தெடுப்பதென்பது வேதனைக்கும் ஆபத்துக்குரியதாக இருக்கின்றது.

எங்கள் மத்தியில் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூகச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள், பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் போன்போர் கருத்தரங்குகள், விவாதங்கள், பயிற்சிப்பட்டறைகள், ஆலோசனைகள் வழங்கியும் சிறு மாற்றத்தியேனும் ஏற்படுத்த முடியவில்லையெனும் போது, கவலையாக இருக்கின்றது” எனத் தெரிவித்து இருந்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் “நீண்டகாலமாகச் சமூகம் சார்ந்து கருத்துச் சொல்லும் நான் ஒரு பாடசாலை தலைமையாசிரியராக, பெண்ணியச் செயற்பாட்டளாராக இத்தகைய இழி செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன். பெற்றோர் மட்டுமல்ல, நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க வேண்டும். ’மனதுக்கண் மாசிலன் ஆதல்’. எனத் திருக்குறளில் ஒரு வரி வரும். உன் மனச்சாட்சிக்கு குற்றமில்லாமல் இரு அதுவே அறம் ஆகுமென்று. இது ஒவ்வொருவரும் தான் செய்யும் தவறை உணர்ந்து கொள்ளச் சந்தர்ப்பம் தருவதுடன் திருந்தி வாழவும் உதவக் கூடும்.

இத்தகைய ஈனச்செயலை அந்நியர்கள் வீட்டிற்குள்ளோ பொது இடங்களிலோ செய்வதில்லை. குடும்பத்துடன் நெருங்கிப் பழகும் உறவுகளாலேயே பெரும்பாலும் நடைபெறுகின்றது. அந்தவகையில் பெற்றோர் மிக மிக அவதானமாகப் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அது பிழையென்று தெரிந்தும் அதனை எதிர்க்கும் வல்லமையற்றவர்களாகப் பெற்றோருக்குச் சொல்லப் பயந்தவர்களாக இருந்து விடுகின்றனர். பின்னர் விபரம் அறிந்த வயதில் அவர்கள் இது பற்றிக் கூற முற்படுகையில் இந்தச் சமூகம் அதனை ஜீரணிக்க முடியாமல் அவர்கள் மீதே அவப் பெயரைச் சுமத்துகின்றது.

உங்கள் குடும்ப உறுப்பினர் மீது இத்தகைய அநியாயம் நடைபெற்றால் உங்கள் எதிர்வினை எவ்வாறு அமையும்? சிந்தித்துப் பாருங்கள். ஒரு தாயின் தந்தையின் மனவலியை, ஒரு பாதிக்கப்பட்ட பிள்ளையின் வாழ்நாட் மன உழைச்சலைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் துணிந்து, தன்னைப் போல் பிற பிள்ளைகளும் பாதிக்கப்படக் கூடாதென நீதிமன்றம் ஏறி நியாயம் கேட்டுப் போராடிய அந்தப் பிள்ளையையும் அந்தப் பெற்றோரையும் போற்றி வணங்குகின்றேன்” என்று குறிப்பிட்ட மாதவி சிவலீலன், “ஒருவர் குற்றவாளியென நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய பின்னர் அவரைக் காப்பாற்றத் துணைபோகும் அனைவரையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். எங்கள் குழந்தைகளுக்கு அச்சமற்ற வாழ்க்கையைக் கையளியுங்கள்” என்ற கோரிக்கையையும் மாதவி சிவலீலன் இங்கு பதிவு செய்துள்ளார்.

அன்று சிறுமியாக பிரேமகுமாரினால் பாதிக்கப்பட்ட பெண் தற்போது தனது கல்வி பயிற்சிக்காலத்தை முடித்துக்கொண்டு மருத்துவராக பணியாற்ற ஆரம்பித்து விட்டார். இந்த உணர்வுரீதியான அலைகள் ஓய்ந்ததும் தன்னைப்போல் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளானவர்களை வெளியே கொண்டுவந்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாதுகாப்பளிக்கும் செயற்பாடுகளை தான் முன்னெடுக்க விரும்புவதாக பாதிக்கப்பட்ட அன்றைய சிறுமி இன்று மருத்துவராகக் கடமையாற்றுபவர் தன்னுடைய சினேகிதிக்கு தெரிவித்தள்ளார். ஜென்னி ஸ்ரேக், தர்சிகா இளன்கீரன், தர்ஷனா நவேந்திரன் ஆகியோரின் வழியில் இவ்விளம் பெண்ணும் பாலியல் கொடுமைகளில் இருந்து மீண்டெழும் பெண்களுக்கு நம்பிக்கையழிக்க முன்வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

பல்கலைக்கழக மாணவியை சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆனந்தம் கிரியேசன் ஆனந்தராஜவுக்கு 30 மாதங்கள் சிறை!!!

பெப்ரவரி 2இல் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசாமிக்கு 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அறியாப் பருவத்தில் பெண் பிள்ளையை தன் பாலியல் இச்சைக்கு உட்படுத்திய தமிழ் வர்த்தகப் பிரமுகரான பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கே 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பிரேமகுமார் ஆனந்தராஜா ( Anandarajah Bremakumar ) வுக்கு எதிரான பாலியல் இம்சைக் குற்றச்சாட்டு டிசம்பர் முற்பகுதியில் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு இருந்தது முதற் தடவையாக தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. வூட் கிரீன் கிரவுண் நீதிமன்றில் நடந்த பிரேமகுமார் ஆனந்தராஜாவின் வழக்கின் முடிவில் இன்று பெப்ரவரி 02இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு 30 மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவருடைய பெயர் பாலியல் துஸ்பிரயோகம் செய்வோர் பட்டியலிலும் சேர்க்கப்படும் எனவும் அதனால் இவர் சிறுமிகள் சிறுவர்கள் உள்ள பொது இடங்களில் நடமாடவும் தடை செய்யப்படும் எனவும் தெரியவருகின்றது.

அறுபத்தியொரு வயதான பிரேமகுமார் ஆனந்தராஜா சம்பந்தப்பட்ட சிறுமியைவிடவும் ஏனைய சிலருடனும் தவறாக நடந்துகொண்டவர் என்றும் அனால் மற்றையவர்கள் நீதிமன்று வரை செல்லவில்லை எனவும் தெரியவருகின்றது. பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு டயபிற்ரீஸ் மற்றும் நோய்க் காரணங்களைச் சுட்டிக்காட்டி அவருக்கு வழங்கப்பட்ட தண்டணை மனிதாபிமான அடிப்படையில் 30 மாதங்களுக்குக் குறைக்கப்பட்டது. தண்டனை வழங்கும் போது தனது குற்றத்தை பிரேமகுமார் ஆனந்தராஜா ஒத்துக்கொண்டிருக்க வேண்டும் என நீதிபதி சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. மேலும் குற்றவாளியின் தரப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய தாயின் நன்நடத்தையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடந்துகொண்டதையும் நீதிபதி வன்மையாகக் கண்டித்திருந்தார்.

பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மனைவி, சகோதர சகோதரிகள் மற்றும் ஆச்சுவே ஆலயம் சார்ந்தவர்கள் அவருடைய மோசமான பாலியல் துஸ்பிரயோகத்தை அறிந்திருந்தும் அவருக்கு சாதகமாகச் செயற்பட்டனர். இவருடைய தங்கைகளில் ஒருத்தி அண்ணனுக்கு கொஞ்சக்காலம் தான் தண்டனை கொடுக்கப்பட்டு உள்ளது என்று அதற்குள் பெருமையடித்துள்ளார். பிரேமகுமார் ஆனந்தராஜா இவ்வாறான மோசமான பாலியல் துஸ்பிரயோகம் செய்த போதும்: அவருடைய பண வசதி, சமூகத்தில் ஆனந்தம் கிரியேசன் என்ற அமைப்பினூடாக பரதநாட்டியம், அரங்கேற்றம் போன்ற நிகழ்வுகளை நடாத்தி பெற்றுவந்த செல்வாக்கு, ஆலயங்களுக்கு மேளம் நாதஸ்வரம் போன்ற இசைக் கலைஞர்களை வரவழைத்துக் கொடுப்பது என்று பிரேமகுமார் ஆனந்தராஜா சமூக அந்தஸ்தைப் பெற்றிருந்தார். அதனைப் பயன்படுத்தியே இவர் இந்தப் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தார்.

2022 டிசம்பர் முற்பகுதியில் இவ்வழக்கில் பிரேமகுமார் ஆனந்தராஜா குற்றவாளியாகக் காணப்பட்டு 2023 பெப்ரவரி 2இல் அவருக்கு தண்டணை வழங்க்பட்ட போதும் இவ்வழக்கின் வரலாறு 13 ஆண்டுகள் நீண்டது. 2010இல் அப்போது 13 வயதேயான குழந்தையான சிறுமிiயையே பிரேமகுமார் ஆனந்தராஜா அவளே அறியாத பருவத்தில் துஸ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மனைவியும் மிக நெருங்கிய நண்பிகள். பாதிக்கப்பட்ட சிறுமியின் பூப்புனித நீராட்டுவிழாவில் கூட அக்குழந்தையின் தாய்மாமனாகவும் மாமியாகவும் ஆனந்தராஜா தம்பதிகளே அழைக்கப்பட்டுடிருந்தானர். அவ்வளவு நம்பிக்கையோடு பழகியவர்களின் வீட்டுச் சிறுமியையே பிரேமகுமார் ஆனந்தராஜா அனுபவிக்க முற்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் சிநேகிதி தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். 2010இல் சிறுமிக்கு 13 வயதாக இருக்கும் போதே இத்துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றது. ஆனாலும் அது வேறு யாருக்குமே தெரியாது.

சிறுமி தனது 21வது பிறந்த தினத்தன்று தாயாருக்கு தனக்கு ஏற்பட்ட அக்கொடிய அனுபவங்களை சொல்லியுள்ளார். அதனைக் கேட்டு கதிகலங்கிய தாயார் தன்னுடைய நெருக்கமான தோழியான ஆனந்தராஜாவின் மனைவிக்கு இதனைத் தெரிவித்து நியாயம் கோரியுள்ளார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம் கெஞ்சி மன்றாடிய ஆனந்தராஜாவின் மனைவி தன்னுடை பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் அதற்கு அப்பால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவிடாமல் தடுத்தார்.

அதன் பின் மருத்துவத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண், ஒரு விரிவுரையின் போது பெண் பிள்ளைகள் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாவதை எவ்வாறு அறிந்துகொள்வது என்பது பற்றிய விரிவுரை நடந்தது என்றும் அதன் போது சம்பந்தப்பட்ட பெண் அழ ஆரம்பிக்கவே பல்கலைக்கழகம் அப்பெண்ணின் நிலையை உடனேயே அறிந்து கொண்டனர். பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அன்று சந்தேக நபரான பிரேமகுமார் ஆனந்தராஜாவை விசாரணைக்கு வருமாறு கோரியும் இருந்தனர். அப்போது மருத்துவத்துறையில் பயின்று கொண்டிருந்த அப்பெண் தன் கல்வி முன்னேற்த்தை எதுவும் தடைப்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக நடவடிக்கையில் இறங்கவில்லை. தன்னுடைய இறுதித்தேர்வின் இறுதிப் பரிட்சையையும் முடித்துக்கொண்ட பின் நேரடியாக் பொலிஸாரிடம் சென்று பிரேமகுமார் ஆனந்தராஜா மீதான குற்றச்சாட்டை மீள்புதுப்பிக்கும்படி கோரி; பொலிஸாருக்கு முழமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

அதனைத் தொடர்தே பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கி சந்தேக நபரைக் கைது செய்து அவர் குற்றவாளி என்பதையும் நிரூபித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணோடு கூடப் படித்தவர் இது பற்றித் தெரிவிக்கையில் “அவர்கள் அனுபவித்த துயரை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது” எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பாதிப்பு வலியுடன் இருக்கின்ற போது பிரேமகுமார் ஆனந்தராஜாவை காப்பாற்றும் சில முயற்சிகளிலும் சில சமூகப்பெரும் புள்ளிகள் ஈடுபட்டுள்ளனர். அது பற்றி பாதிக்கப்பட்டவர் “இவங்களுக்குள்ளையா நாங்கள் வளர்ந்தனாங்கள்” என்று மனம் வெதும்பியதாக அப்பெண்ணின் சிநேகிதி தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இவ்வழக்கு தொடர்பான மேலதிக விபரங்கள் அடுத்த பதிவில்.

அறியாப் பருவ பெண் பிள்ளையை பாலியல் இச்சைக்கு உட்படுத்திய லண்டன் கொலின்டேல் ஆனந்தம் கிரியேசன் நிறுவனரின் குற்றம் நிரூபணமானது!

அறியாப் பருவத்தில் பெண் பிள்ளையை தன் பாலியல் இச்சைக்கு உட்படுத்திய தமிழ் வர்த்தகப் பிரமுகருக்கு எதிரான பாலியல் இம்சைக் குற்றச்சாட்டு நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இவர் குறைந்தது ஓரு பெண் பிள்ளையையாவது பாலியல் இம்சைக்கு உட்படுத்தியது தற்போது லண்டன் வூட் கிரீன் கிரவுண் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இவருக்கு எதிரான இவ்வழக்கு நவம்பர் 28 முதல் ஏழு வேலை நாட்களுக்கு வூட் கிரீன் கிரவுண் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தண்டனைக் காலம் அடுத் அமர்வில் ஜனவரி 3 2023இல் தீர்மானிக்கப்படும் எனவும் மெற் பொலிஸார் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.

லண்டனின் வசதிபடைத்த பகுதிகளில் ஒன்றான ஹரோ உள்ளுராட்சிப் பிரிவுக்குள் கொலின்டேல் பகுதி வருகின்றது. இப்பகுதியில் இளையவர்களுக்கான இசை, நடனம் அவற்றை அரங்கேற்றுவது போன் கலைத்துறைசார்ந்த தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பிரமுகர் பிரேமகுமார் ஆனந்தராஜா. இவர் கலை கலாச்சாரத்தை வளர்க்கின்றேன் என்ற பெயரில் ஆனந்தம் கிரியேசன் யுகே என்ற நிகழ்வு ஓழங்கமைப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர். இந்த பிரேமகுமார் ஆனந்தராஜா என்ற இந்நபரே தற்போது பெண் குழந்தை மீது பாலியல் இச்சையோடு நடந்துகொண்டமை நிரூபிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆனந்தம் கிரியேசன் யூகே 2015இல் யூரியூப்பில் சில கலை நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது.

இச்சம்பவம் பற்றி பிரேமகுமார் ஆனந்தராஜாவின் குடும்ப நண்பர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் இவ்வாறான ஒரு கீழ்த்தரமான மனநிலை கொண்ட ஒருவரோடு தாங்கள் குடும்ப நண்பராக இருந்தது தற்போது நினைக்கின்ற போது அருவருப்பாக உணர்வதாகத் தெரிவித்தார். “எனக்கும் பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களோடும் இவர் பழகி உள்ளார். ஆனால் நாங்கள் ஒரு போதும் யாருடனும் பிள்ளைகளைத் தனிய அனுமதிப்பதில்லை” என்றும் “பிரேம் இம்சைக்கு உட்படுத்தியதாக அறியவருபவர்கள் இவருடைய நண்பர்களின் குழந்தைகளே” என்றும் மிகுந்த கோபத்தோடு அவர் பதிலளித்தார். “பிரேம் தன்னுடைய குடும்பத்துக்கும் எங்களைப் போன்ற நண்பர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்துள்ளார்” என வாரத்தைகள் தடம்புரள சினத்தோடு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

யாழ்ப்பாணம் புங்குடு தீவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரேமகுமார் ஆனந்தராஜா 1961 பிறந்தவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். தற்போது 61வது வயதையெட்டுபவர். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட மலேசியப் பெண்ணை 1990க்களில் மணந்தவர். பதின்ம வயதைக் கடந்த கலைத்துறையில் ஆர்வமுள்ள இரு ஆண் குழந்தைகளின் தந்தை. இவருக்கு கொலின்டேலில் கடையும் உள்ளது. இரு சகோதரர்கள் மூன்று சகோதரிகள் என்று அவர்களும் கொலிடேலிலும் லண்டனின் ஏனைய பாகங்களிலும் வர்த்தக நிறுவனங்களைக் கொண்டுள்ளவர்கள்.

பிரேமகுமார் ஆனந்தராஜாவின் தீயசெயல் அவரைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நெருக்கடியையும் அவருடைய மனைவி பிள்ளைகளுக்கு மிகுந்த அவமானத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மற்றுமொரு நண்பர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். அவருடைய ஒரு மகளும் வேறொருவரால் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகி இன்றும் மனவேதனையில் இருப்பவர். பிரேம் இப்படிப்பட்ட ஒருவன் என்ற சந்தேகம் முன்னம் உங்களுக்கு இருந்ததா என்று கேட்டபோது, “அவ்வாறன ஒருவன் என்று எந்த சந்தேசமும் தனக்கு ஏற்பட்டதில்லை” என அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பிள்ளைகளை நான் எண்ணி வருந்துகிறேன். அதேநேரம் அவன் ஏன் இப்படி நடந்துகொண்டான் என்று எண்ணும் போது எனக்கு மிக வேதனையாக இருக்கின்றது” என்றார். “அவன் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சேர்த்து நாசமாக்கிவிட்டான்” என்று மிகவும் மனம் புலங்கினார்.

பிரேமகுமார் ஆனந்தராஜாவின் இச்செயல் தமிழ் சமூகத்திற்குள் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதில் ஆச்சரியமில்லை. பெரும்பாலும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் இம்சைகள் குடும்ப உறவுகள் நட்புகளினாலேயே ஏற்படுத்தப்படுகின்றது என்ற உண்மையை இச்சம்பவம் மேலும் ஒருமுறை உறுதிப்படுத்தி இருக்கின்றது. தமிழ் சமூகங்களினுள் இவ்வாறான பல சம்பவங்கள் பரவலாக இடம்பெற்ற போதும் இவ்வாறான சம்பவங்கள் அக்குடும்பங்களின் கதவுகளைத் தாண்டி வெளியே வருவதில்லை என்கிறார் மருத்துவ கலாநிதி ஆர் ராமநாதன்.

பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மூத்த மகன் தனது முகநூலில் ”always my legend“ என்று தந்தையுடன் தான் நிற்கின்ற படத்தை போட்டு பதிவு செய்திருந்தார். அந்த எண்ணங்கள் அத்தனையும் சுக்குநூறாகும் விதத்தில் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் செயல்கள் அமைந்துவிட்டது. “பிரேமகுமார் ஆனந்தராஜா இன்னும் எத்தனை குழந்தைகளை இச்சைக்கு உள்ளாக்கி இருப்பார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்” என்கிறார் மற்றுமொரு நண்பர். தன்னுடைய மகளின் அரங்கேற்றத்தைக்கூட பிரேமே ஏற்பாடு செய்து ஒத்துழைத்;ததாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “குழந்தைகள் வளர்ந்து எவ்வளவு மனவுளைச்சலையும் வேதனையையும் தமது வாழ்நாள் முழவதும் சுமப்பார்கள் என்பது மிகுந்த வலியை அவர்களிடம் ஏற்படுத்துவதுடன் சமூகம் பற்றிய அவநம்பிக்கையையும் ஏற்படுத்திவடும்” என்றார். “பிரேமகுமார் ஆனந்தராஜா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது அவர்களுடைய ரணத்தை ஓரளவு ஆற்றும்” என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தங்களுடைய வலியைக் கடந்து இந்தக் குற்றத்தை நீதிமன்றில் நிரூபிக்க அப்பிள்ளைகளும் குடும்பத்தினரும் எடுத்த முயற்சிக்கு தமிழ் சமூகம் நிச்சயம் தலைவணங்க வேண்டும் என ஈலிங் ஆலய செயற்குழு உறுப்பினர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். மீண்டும் இவ்வாறாண நிகழ்வுகள் நடந்துவிடாமல் இருக்க இவ்வாறான வழக்குகளின் தீர்ப்புகள் மிக அவசியமானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். பிரேமகுமார் அப்பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு தவறாமல் செல்பவர் என்றும் தெரியவருகின்றது.

இந்த அநீதி லண்டனில் இழைக்கப்பட்டதால் அதற்கான தண்டனையை சட்டமும் காவல்துறையும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. ஆனால் தாயக மண்ணில் மாணவிகளைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் இன்னமும் சுத்தமான சுவாமிப்பிள்ளைகளாக யாழ் மற்றும் வவுனியா பல்கலைக்கழக வளாகங்களில் வலம்வருகின்றார்கள். அவர்கள் போடும் தேசியவாதச் சாயம் கலர அவர்கள் அம்மணமாகும் நாள் விரைவில் ஏற்படும்.