பிரேம்சங்கர்

பிரேம்சங்கர்

“அற்ப அறிவுடையவர்களிடம் ஆயதங்களை ஒப்படைக்கக் கூடாது” கழுதை சுமந்த கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் ராஜா நித்தியானந்தன்

“அற்ப அறிவுடையவர்களிடம் ஆயதங்களை ஒப்படைக்கக் கூடாது” என கழுதை சுமந்த கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் நிகழ்விற்குத் தலைமை தாங்கிய ராஜா நித்தியானந்தன் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். நூலாசிரியர் க பிரேம்சங்கர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் போராளி. யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவன். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைவிட்டு வெளியேறிய போதும் அவர் கழக விசுவாசத்தை விட்டுக்கொடுக்காதவர். அந்த வகையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சமூக விஞ்ஞானக் கல்லூரியை T3S (Tamileelam School of Social Science) ஆரம்பித்த ராஜ நித்தியானந்தன் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் இக்கல்லூரியில் கற்ற நூலாசிரியர் க பிரேம்சங்கர் முன்னணியில் திகழ்ந்ததையும் அவரை ஏனைய மாணவர்களுக்கு விளக்கும் ரியுரராக நியமித்ததையும் ராஜ நித்தியானந்தன் நினைவு கூர்ந்தார்.

உலகின் முன்னணி பொருளியல் கற்கைக்கான பல்கலைக்கழகமான லண்டன் ஸ்கூல் ஓப் எக்கொனொமிக்ஸ் பல்கலைக்கழகத்தின் கோடைவிடுமுறைப் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சென்னையில் உருவாக்கப்பட்ட தமிழீழ சமூக விஞ்ஞானக் கல்லூரி – T3S உருவாக்கப்பட்டதாக ராஜ நித்தியானந்தன் அதன் வரலாற்றை சுருக்கமாகக் குறிப்பிட்டார். இக்கல்லூரியில் முதலாளித்துவக் கொள்கையின் தத்துவாசிரியரான அடம் சிமித், கொம்யுனிசக் கொள்கையின் தத்துவாசிரியரான கார்ள் மார்க்ஸ் ஆகியோர்களின் தத்துவார்த்த கோட்பாடுகள் பற்றிய அரசியல் பொருளாதாரம் மாணவர்களுக்கு புகட்டப்பட்டதாகத் தெரிவித்தார். கலை இலக்கியங்களைக் கொண்ட மேற்கட்டுமானம், பொருளாதார உற்பத்தி முறை பற்றிய கீழ்கட்டுமானம் என்று ஆழமான புரிதலை ஏற்படுத்தும் பாடத்திட்டங்கள் அங்கு கற்பிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இவற்றைக் கற்பிப்பதற்கு தமிழக பல்கலைக்கழகங்களில் இருந்து இந்த கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்து விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாகவே “அற்ப அறிவுடையவர்களிடம் ஆயதங்களை ஒப்படைக்கக் கூடாது” என்பதைக் குறிப்பிட்டு தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய தனது கருத்தை முன்வைத்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நடத்திய அமைப்புகளிடையே அரசியல் அறிவின்மையையும் அவ்வாறானவர்களிடம் ஆயதங்கள் ஒப்படைக்கப்பட்டதன் இன்றைய நிலையையும் அவர் நாசுக்காகச் சுட்டிக்காட்டினார். தனது குறுகிய நேர உரையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் உமா மகேஸ்வரனை குறைந்தது மூன்று தடவைகளாவது விதந்துரைத்திருந்தார். ஆனால் சமூக விஞ்ஞானக் கல்லூரியை உருவாக்கிய உமா மகேஸ்வரனும் கூட அற்ப அறிவுடையவர்களிடமே ஆயதங்களை ஒப்படைத்திருந்ததும் அவர்கள் படுகொலையாளர்களாக மாறியதும் வரலாறு.

மேலும் தமிழீழ சமூக விஞ்ஞானக் கல்லூரி கடவுள் கொள்கையை மறுத்திருந்தபோதும் அதனை உருவாக்கிய ராஜா நித்தியானந்தன் அங்கு கற்ற மாணவர்கள் சிலரும் இன்று ஆன்மீகத்தில் தடம் பதித்திருப்பது இன்னுமொரு முரண்நகை. ஐயப்பன் ஆலயத்தின் குரசாமி கிரிசாமியின் ஆசிஉரையுடள் நூல்வெயீட்டு நிகழ்வு ஆரம்பமானது.

இந்தக் கழுதை சுமந்த கவிதை அம்புலிமாமா கதைப்புத்தகம் போன்று அழகாக வடிவமைக்ப்பட்டு இருந்ததை மெச்சினார் வெளியீட்டுரையை வழங்கிய மாதவி சிவலீலன். காதலில் திளைத்தும் விடுதலைப் போராட்டம் என்று சென்று வந்து மார்க்ஸிஸக் கருத்துக்களை உதிர்த்தும் கவிதைகளை பல்வேறு தளங்களில் வடித்திருப்பதாக குறிப்பிட்ட மாதவி சிவலீலன், இக்கவிதைத் தொகுப்பு நவீன ஜனரஞ்சக இலக்கிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருந்ததாகத் தெரிவித்தார். யதாரத்தவாதி வெகுஜன விரோதியாகி விடுவது போல் சில கவிதைகள் அவருக்கு விரோதத்தை சம்பாதிக்கலாம் என்பதையும் மாதவி சிவலீலன் சுட்டிக்காட்டிச் சென்றார்.

நூலின் தலைப்பையும் அதில் சொல்லப்படும் பிராணியையும் வரலாற்று ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தி ஆய்வாளர் மு நித்தியானந்தன் சகல சமூகங்களிலுமே கழுதை ஒரு கேவலமான பிராணியாகவே கடந்த 2000 ஆண்டுகளாக அதே கழுதை என்ற பெயருடன் சித்தரிக்கப்பட்டு வருவதாகக் கூறி தமிழில் கழுதையை இழிவுபடுத்தும் வகையில் அமைந்த பழமொழிகள் பலவற்றைச் சுட்டிக்காட்டினார். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசணை. கழுதை கட்டெறும்பானது, … என பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டினார். கழுதை அவ்வளவு கேவலமான பிராணி அல்ல என்று குறிப்பிட்ட மு நித்தியானந்தன் கழுதை சுமந்த கவிதையின் அர்த்தத்தை வினவினார்? கழுதையை நூலாசிரியர் கேவலமாகக் கருதுகிறாhரா என்ற கேள்வி மு நித்தியானந்தனின் ஆய்வில் தொக்கி நின்றது. மன்னாரில் கழுதைக் காப்பகம் அமைக்கப்படுவதையும் அண்மையில் இந்தியாவில் காணாமல் போன கழுதைகளைத் தேடும் சர்ச்சையையும் சுட்டிக்காட்டி அந்தக் கழுதைகள் போல் நாங்கள் எல்லோரும் எதையோ சுமக்கின்றோம் என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்த சுமைகளை அறிவுகளை இல்லாமல் வாழ்க்கையை நாளாந்தம் சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். நாங்கள் வெற்றுப் பாத்திரத்தில் எதையும் ஊற்றிக் குடிக்க வேண்டுமே ஒழிய ஏற்கனவே அதற்குள் உள்ள ஏதோ ஒன்றுக்குள் ஊற்றி அருந்துவது போல் வாழ்க்கை அமையக் கூடாது எனத் தெரிவித்தார்.

க பிரேம்சங்கரின் கவிதைத் தொகுப்பில் 25 வீதமான கவிதைகள் காதலைச் சொல்வதைச் சுட்டிக்காட்டிய ஆய்வாளர் மு நித்தியானந்தன் தனக்கு அவருடைய சங்ககாலக் காதலில் உடன்பாடில்லை என்றார். புலியை வேட்டையாடி அதன் பல்லைக் கொண்டுவந்து காதலிக்கு அணிவித்து தான் காதலை வெளிப்படுத்த வேண்டுமானால் நாங்கள் யாருமே காதலிக்க முடியாது என நகைச்சுவையாகத் தெரிவித்தார். இக்கவிதைத் தொகுப்பில் மாட்டுப் பொங்கலுக்கூடாக மிருகவதை பற்றி படைப்பாளியின் சிந்தனையைச் சுட்டிக்காட்டிய மு நித்தியானந்தன் மலையக மக்கள் பற்றிய கவிதையையும் விதந்துரைத்தார்.

போராடுவதற்காக தம்மை அர்ப்பணித்த அப்போராட்டம் சறுக்கிய போது வெளிநாட்டுக்கு வந்து வீழ்ந்த இந்தப் படைப்பாளியைப் போன்றவர்களால் இந்த மண்ணில் ஒட்ட முடியவில்லை. வேற்றுலக மனிதர்களாகவே வாழ்கின்றனர். சகோதரப்படுகொலைகளைக் கடந்து வந்த இவர்களின் காலத்திலேயே போடுதல், போட்டுத் தள்ளுதல், தகடு வைத்தல் போன்ற சொற்பதங்கள் எமது சமூகத்தில் உருவாகிறது. தந்தையொருவர் தனது மகனைத் தேடிச்சென்று முகாமில் விசாரிக்கின்ற போது, அவரைத் போட்டுட்டாங்கள் என்று சொல்லப்பட்ட போது அந்த தந்தைக்கு அது விளங்கவேயில்லை என்பதை மு நித்தியானந்தன் அங்கு சுட்டிக்காட்டினார்.

இத்தொகுப்பில் கவிதைகள் ஒழுங்குமறையில் தொகுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நித்தியானந்தன் நூல் பற்றிய விபரங்கள் ஆங்கிலத்தில் வருவதன் அவசியத்தையும் விளக்கினார். அவ்வாறு நூல்விபரம் ஆங்கிலத்திலும் இருந்தாலேயே இலங்கையிலோ இலங்கைக்கு வெளியிலோ நூலகங்களில் இந்நூல் பதிவுக்கு உட்படுத்தப்படக் கூடியதாக இருக்கும் என்றார். மேலும் நூலில் ஓவியங்கள் காத்திரமானவையாக உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர் அவ்வோவியங்களை வரைந்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேற்கு லண்டன் தமிழ் பள்ளியின் அதிபர் செல்வராஜா உரையாற்றுகையில் மனிதவதை பற்றி மிக இறுக்கமாகக் குறிப்பிடும் படைப்பாளர் திபாவளியைக் கொண்டாடுங்கள் ஆனால் கொன்று கொண்டாடாதீர்கள் என்று வேண்டிக்கொள்வதைச் சுட்டிக்காட்டினார். இலக்கியச்சுவை காதல்சுவை காமச்சுவை நகைச்சுவை நிறையவே இருக்கின்றது ஆனால் ஆங்கிலப் பதங்களை சொற்பிழைகளைத் தவிர்த்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.

நாடகக் கலைஞர் சரத் சந்திரன் கவிநயத்தோடு பேசுகையில் வாசித்து வாசித்து கவிதை கொண்டு தன் தேடலுக்கு அணை கட்டியதாகத் தெரிவித்தார். வாழ்வின் பல பக்கங்களையும் படைப்பாளர் தட்டியதைச் சுட்டிக்காட்டிய சரத் சந்திரன் வடிவமைப்பின் கவர்ச்சியும் அதற்கான ஓவியங்களும் சொற்களின் வீரியத்தைக் குறைத்து விடுமோ என்று எண்ணத் தோண்றியதாகக் குறிப்பிட்டார்.

கிங்ஸ்ரன் கொன்சவேடிவ் கட்சி கவுன்சிலர் நந்தா பரம் கவிதை; தொகுப்பு பேசுகின்ற அரசியலுக்குள் சற்று ஆழமாகவே ஊடுருவிச் சென்றார். கொன்சவேடிவ் கட்சியின் கவுன்சிலராக இருந்த போதும் அவருடைய அரசியல் பார்வை முற்றிலும் அதன் கருத்தியல் நிலைப்பாட்டுக்கு முரணாணதாக இருந்தது. “கருத்தை கருத்தால் எடுத்தியம்ப வேண்டும் கசையடியாலல்ல…” என்ற கவிதையை மேற்கோள் காட்டிய நந்தா பரம் பிரேம்சங்கர் ஏன் உண்மையை மறைக்கிறார். அங்கு கசையடியா நடந்தது. உண்மையில் என்ன நடந்தது. ஆனந்தராஜா, ராஜினி ஆகியோரை இழந்திருக்க தேவையில்லை என்றார். தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட கல்விமான்களான அதிபர் ஆனந்தராஜா, யாழ் பல்கலைக்கழக மருத்துவ உடற்கூற்றியல் சிரேஸ்ட்ட விரிவுரையாளர் ராஜினி திரணகம ஆகியோரையே கவுன்சிலர் நத்தா பரம் அவ்விடத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.

படைப்பாளியின் மாட்டுப்பொங்கல் பற்றிய கவிதையை இன்றைய முதலாளித்துவ சமூகத்தோடு ஒப்பிட்டு நந்தா பரம் வழங்கிய மதிப்பீடு அசத்தலாக அமைந்தது. வருடம் முழுவதும் மாட்டை சுரண்டி உழைக்கும் மனிதன் மாடு கன்று ஈன்றபின்னும் கன்றை மாட்டுக்கருகில் கட்டி வைத்து பால்சுரக்க வைத்து அதனையும் கறந்துவிடுகின்றான். அதற்காக வருடத்தில் ஒருநாள் மாட்டுக்கு பொங்கல் வைத்து மாட்டையும் ஏமாற்றி விடுகின்றான். இதே போல் தான் முதலாளி வர்க்கமும் தொழிலாளியைச் சுரண்டி அவன் உழைப்பை கறந்துவிட்டு போனஸ் கொடுத்து ஏமாற்றி விடுகின்றான் என்று நந்தா பரம் சுட்டிக்காட்டி கவிதைத் தொகுப்பை விதந்துரைத்தார். படைப்பாளியின் ஜீவராசிகள் மீதான காருண்யத்தையும் கவுன்சிலர் நந்தா பரம் தன்னுரையில் கோடிட்டுக் காட்டினார்.

ஆழகானவை எல்லாம் மனதுக்கு பிடிப்பதில்லை ஆனால் மனதுக்கு பிடித்தமானவை எல்லாம் அழகாகத் தோன்றும் என கழுதை சுமந்த கவிதைத் தொகுப்புப் பற்றி குறிப்பிட்டவர், மாற்றுக் கருத்துக்கு மரணமோ தீர்வு! என்ற படைப்பாளியின் ஆதங்கத்தை பொறுப்புடன் குறிப்பிட்டார். இவ்வாறான போர்க்கால வீரியம் மிகு கவிதைகள் ஈழத்திலேயே சாத்தியம் எனவும் குறிப்பிட்டார்.

வாசிப்பவர்களை பழைய நினைவுகளுக்கே கொண்டு செல்லும் இக்கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கு ஒரு உள்ளடக்கம் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி தன்னுரையை நிறைவு செய்தார் நிவஜோதி யோகரட்ணம்.

“இந்தக் கழுதையை அது சுமந்த கவிதையை அதன் கனவுகளை எல்லாம் எனக்கு நன்கு தெரியும்” என்று கவிநயத்தோடு தன்னுரையை ஆரம்பித்தார் படைபாளனின் பள்ளித் தோழன் ஜெகத் லக்ஷன். 1979இல் யாழ் இந்துக் கல்லூரியில் உருவான நட்பு நாற்பது ஆண்டுகளக் கடந்தும் பயணிக்கின்ற கதையை “கழுதை சுமந்த கவிதை” விமர்சனத்தினூடாக இன்னொரு கழுதையாக பயணித்த கதையை லக்ஸ்மன் தன்னுரையினூடாகக் கொண்டு வந்தார். தம்பையா மாஸ்ரரின் பின் வரிசைப் பிரமுகர்களில் ஒருவரான இந்தப் படைப்பாளிக்கு கம்பராமாயணம் மிகத் தெளிவாகத் தெரிந்தாலும் ‘கொங்கை’ க்கு விளக்கம் தெரியாமல் தவித்து, பிறகு பார்த்தால் மட்ராஸில் சமூக விஞ்ஞான கல்வி படித்ததாகக் கேள்விப்பட்டேன் என அன்றைய வாழ்க்கை போராட்டமானதைச் சுட்டிக்காட்டினார். அங்கு போராட்ட இலங்கியங்கள் படித்து சிவப்புப் புத்தகங்கள் படித்தது தான் மிச்சம் கப்பல் கடைசிவரை வரவில்லை என்றவர் எந்தக் கப்பல் வரவில்லை என்று கடைசிவரை குறிப்பிடவில்லை.

மீண்டும் 1991 இல் லண்டனில் தன் நண்பரைச் சந்தித்ததை நினைவுகூர்ந்த லக்ஷன் 1995இல் கவிதைத்தொகுப்பை வெளியிட எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. வாடகை வீடுகள் மாறியதில் கவிதைகளும் தொலைத்த சோகக் கதையைக் கூறினார். அதன் பின்னும் ஒரு கட்டுக்கவிதைகளோடு வந்து நின்றபோது வெளியிட தன்னால் முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியவர் ஏன் என்பதை தொக்கில் விட்டுவிட்டார். தற்போது வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்பில் தன்னிடம் தந்த கவிதைக்கட்டில்லிருந்த ஒரேயொரு கவிதையே இதில் உள்ளது என்பதை அழுத்தம் திருத்தமாக லக்ஷன் குறிப்பிட்டார்.

பிக்பொஸ் பார்க்க நிறைய நேரம் செலவழிக்கும் நாம் பிக்பொஸ்ஸாக யோசிக்க மாட்டோம் என்கிறோம் என மனவருத்தப்பட்டுக்கொண்ட லக்ஷன், மேலும் மேலும் படைப்புகள் எம்மத்தியில் இருந்து வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு தன்னுரையை நிறைவு செய்தார்.

பேனா நண்பராக ஏற்பட்ட நட்பு சமூக விஞ்ஞானக் கல்லூரியில் சந்தித்து லண்டனில் இன்று வரை தொடர்வதை தயாமயூரன் நினைவு கூர்ந்தார். சமகாலத்தில் விடுதலைக்காகப் புறப்பட்ட தாங்கள்; மனிதநேயம் உயிர் நேயம் கொண்டு துன்பங்கள் துயரங்கள் கடந்து பயணத்தைத் தொடர்வதை தயாமயூரன் நினைவுகூர்ந்தார். தயாமயூரனும் சிறந்த முறையில் கவிதை புனைபவர் என்று குறிப்பிட்ட ராஜா நித்தியானந்தன் அவரும் தனது கவிதை நூலைக் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இப்போது எம்மோடு இல்லாத எனது சகோதரன் வசந், பிரேம்சங்கர், தயாமயூரன் ஆகியோர் சமகாலத்தில் தமிழீழ சமூக விஞ்ஞானக் கல்லூரியில் பயின்றவர்கள். இந்த நூல் வெளியீட்டுக்கு என்னை அழைத்தபோதும் எனது சகோதரனின் சார்பாக என்னை வரும்படியே பிரேம்சங்கர் அழைத்து இருந்தார். நட்பு இரத்த உறவுகளுக்கும் மேலானதாக அமைந்துவிடுகின்றது. அதுவும் போராட்ட அமைப்புகளில் கருக்கொள்ளும் நட்புகள் இரத்தமும் சதையுமாகிவிடுகின்றது. இக்கவிதைத் தொகுப்பு நிகழ்விலும் அதனைக் காணமுடிந்தது.

இறுதியாக உரையாற்றிய வேணுகோபால் இந்நட்பை விதந்துரைத்திருந்தார். நல்ல நண்பர்கள் அமைவதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார். “கவிக்கூத்தன் பிரேம் ஒரு கம்பன் கவிதை எழுதுவதில் அவன் ஒரு வம்பன்” என்று குறிப்பிட்ட வேணுகோபால், “அடைந்தால் மகாதேவி இல்லாவிட்டால் மரணதேவி அல்ல அடுத்த தேவி” என்ற கவிதையைச் சுட்டிக்காட்டி கவிஞ்ஞனுக்கு பொய்யும் அழகு என்று குறிப்பிட்டு தன்னுரையை முடித்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஜெஸ்ரீ என்பவர் “கழுதை சுமந்த கவிதை” க்கு ஒரு கவிதை தந்தார்.

இறுதியாக ஏற்புரை வழங்கிய கவிக்கூத்தன் பிரேம்சங்கர் இலங்கையின் இலக்கிய வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆவால் இப்போது தனக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் இனிமேல் இன்னும் தரமாக கவிதைகளை தர வேண்டும் என்ற பொறுப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். நாம் மட்டும் அல்ல எமது பிள்ளைகளையும் அவர்களுக்கு பரீட்சயமான மொழியிலேயே எழுதத் தூண்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு நிகழ்வை நிறைவுக்கு கொண்டுவந்தார்.

150 பேருக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மண்டபம் நிறைந்த கவிக்கூத்தன் க பிரேம்சங்கரின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு ஹரோ ஐயப்பன் ஆலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கலை, இலக்கிய, அரசியல் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்ட நிகழ்வு கோவிட் கால முடக்கத்திற்குப் பின் இடம்பெற்ற மிகச்சிறப்பான கலை, இலக்கிய, அரசியல் நிகழ்வாக அமைந்தது. முரண்பட்ட கருத்துக்கள் கொண்ட பல்தரப்பினரும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர். மேலும் புதிய பேச்சாளர்கள் பலரும் கலந்துகொண்டு கவிதைத்தொகுப்பு வெளியீட்டை கவித்துவத்தோடு நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.