புனர்வாழ்வு பணியக சட்டமூலம்

புனர்வாழ்வு பணியக சட்டமூலம்

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரகலயவில் ஈடுபட்டவர்களை இலக்குவைத்து உருவாக்கப்படவில்லை – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச

“புனர்வாழ்வு பணியக சட்டமூலம் தொடர்பில் கரிசனை உள்ள எவரும்  இது குறித்து கலந்துரையாட முன்வரலாம்.” என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

இந்த சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரகலயவில் ஈடுபட்டவர்களை இலக்குவைத்து அவர்களை தண்டிப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது என சிலர் கருத்துவெளியிட்டுள்ளனர். எனினும் அவ்வாறான நோக்கம் எதுவுமில்லை. புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை அரகலயவில் ஈடுபட்டவர்களை இலக்குவைத்து உருவாக்கவில்லை.

யுத்தத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் நபர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துவதற்கான  கட்டமைப்பு எதுவும் இருக்கவில்லை. இதன் காரணமாக நபர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயல்கின்றது.

புனர்வாழ்வு செயற்பாடுகள் நடைமுறையில் உள்ளன பல புனர்வாழ்வு நிலையங்கள் உள்ளன. முக்கியமான புனர்வாழ்வு பணியகம் கந்தக்காட்டில் உள்ளது.

நீதிமன்றம் தனது கருத்தினை வழங்கியதும் அது சபாநாயகரிடம் கையளிக்கப்படும். அதனை நாடாளுமன்றத்திற்கு தெரிவிப்பார், குறிப்பிட்ட சட்டமூலம் குறித்து அச்சம் உள்ளதால் பலர் அது குறித்த தங்கள் கரிசனைகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த சட்டமூலம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு முன்னர் கலந்தாலோசனைகளை மேற்கொள்ள நான் திட்டமிட்டுள்ளேன். நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம் கரிசனை உள்ள எவரும்  இது குறித்து கலந்துரையாட முன்வரலாம் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்