புமியோ கிஷிடா

புமியோ கிஷிடா

ஜப்பானிடம் மன்னிப்பு கோரிய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க !

ஜப்பானின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படவிருந்த கொழும்பு இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் (LRT) இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் அரசாங்கத்திடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவிற்கும் இடையில் நேற்று (25) டோக்கியோவில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே ஜனாதிபதி தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

இரு தரப்பினரின் உடன்பாடு இல்லாமல் பாரிய திட்டங்களை நிறுத்தவோ அல்லது ரத்துச் செய்யவோ முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தினார்.

ஜனாதிபதியை ஜப்பான் பிரதமர் அன்புடன் வரவேற்றதுடன், இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஜப்பான் வழங்கிய ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்ததுடன், ஜப்பானிய பிரதமரின் உதவிக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் குறித்தும்  இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.