புலி

புலி

தோற்றுப் போனவர்களின் கதைகள்: ‘தோற்றுத்தான் போவோமா…’ தொகுப்பு மலர் மீதான ஒரு பார்வை – வாகீசன்

‘தோற்றுத்தான் போவோமா….’ புகலிட தொகுப்பு மலரினை மீண்டுமொருமுறை மீள் வாசிப்புக்குட்படுத்தினேன். இது பிரான்சின் தலைநகர் பாரிசில் 1995 ம் ஆண்டு ஒரு மேதினத்திலன்று விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தோழர் சபாலிங்கம் நினைவாக, சுமார் 5 வருடங்கள் கழித்து 1999 ம் ஆண்டு பிரான்சில் இருந்து சபாலிங்கம் நண்பர்கள் வட்டத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. புலிகளின் வரலாற்றில் ஒரு கறை படிந்த அத்தியாயமாக ஒரு கறுப்புப் பக்கமாக இன்றும் விளங்குகின்ற தோழர் சபாலிங்கத்தின் படுகொலை ஆனது அன்று புகலிட சமூகத்தில் பெரும் அதிர்ச்சியினையும் திகைப்பினையும் ஏற்படுத்தியிருந்த விடயம் நாம் அறிந்ததே. இந்த படுகொலையினால் அன்று இங்கு புகலிடத்தில் மனித உரிமைகளை முன்னிறுத்தி தீவிரமாக செயற்பட்டு வந்த புலி எதிப்பாளர்களின் செயற்பாடுகளில் ஒரு தடுமாற்றமும் பயப்பிராந்தியும் ஏற்பட்டிருந்தது. ஆயினும் சுமார் 5 வருடங்கள் கழித்து தற்கொலைக்கு ஒப்பான ஒரு செயலாக இம்மலர் வெளியீட்டினை நிகழ்த்திய ‘சபாலிங்கம் நண்பர்கள் வட்டம்’ அமைப்பினரின் இப்பணியினையும் இதன் பின் உள்ள அர்ப்பணிப்பையும் துணிச்சலினையும் நாம் மறுக்கமுடியாது.

அனைத்து அராஜகங்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகவும் மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும் வெளியிடப்பட்ட இத்தொகுப்பு மலரில் ஈழம், புகலிடம், தமிழகம் என்ற பரப்பில் இருந்த பல்வேறு விதமான படைப்பாளிகளினதும் சமூக செயற்பாட்டாளர்களினதும் படைப்புக்கள் வெளியாகியிருந்தன. இந்நூலின் முன்னுரையில் வெளியீட்டாளர்கள் ‘இது வெறும் புலிகளுக்கு எதிரான குரல் அல்ல. பல்வேறு விதமான அரச அடக்குமுறைகள், பெண்களின் மீதான வன்முறை, குழந்தைகளின் மீதான அடக்குமுறை, என அனைத்து மனித நேயமற்ற செயல்களுக்கு எதிராகவும் எமது குரல் ஒலிக்கின்றது’ என்று அழுத்தம் திருத்தமாக கூறுகின்றனர்.

‘காலம் தாழ்த்திய ஒரு அஞ்சலி’ என்று இதன் ஆரம்பப் பக்கங்களிலேயே சமுத்திரன் ஒரு பதிவினை எழுதுகிறார். உண்மைதான். இது ஒரு காலந்தாழ்த்திய அஞ்சலிதான். நாம் ஏற்கனவே மேலே கூறியபடி இம்மலரானது சபாலிங்கம் படுகொலை செய்யப்பட்டு 5 வருடங்கள் கழித்து மிகவும் தாமதமாகவே வெளியிடப்பட்டிருகின்றது. ஆயினும் மிகவும் காத்திரமாகவும் சிறப்பாகவும் செம்மையாகவும் வெளிவந்திருக்கின்றது.

அழகலிங்கம் எழுதிய ‘அராயகமும் மார்க்சியமும்’ தி. உமாகாந்தனின் ‘சரியும் சர்வாதிகார சாம்ராஜ்ஜியங்கள்’ போன்ற காத்திரமான கட்டுரைகள் இம்மலரை சிறப்பிக்கின்றன. ‘சிந்தனை: அக்கினிக்குஞ்சு’ என்ற தலைப்பில் பேராசிரியர் மு.நித்தியானந்தன் சிந்தனைக்கு அஞ்சும் மனிதர்கள் குறித்தும் அச்சமும் பீதியும் கொண்டு மாற்றுக் கருத்துக்களை கண்காணிக்கும் மனிதர்கள் குறித்தும் எழுதி ராஜினி திரணகமவின் படுகொலையுடன் தொடர்பு படுத்தி ஒரு சிறப்பான கட்டுரையினை எழுதுகிறார். ‘புலம் பெயர்ந்தது தமிழர்கள் மட்டுமல்ல, வன்முறைகளும்தான்…’ என்ற கட்டுரையில் அழகு குணசீலன் இதுவரை காலமும் புலம்பெயர் தேசங்களில் இடம்பெற்ற அராஜகங்கள், வன்முறைகள், படுகொலைகள், மாற்றுச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், மீதான தடைகள் பற்றியும் தேடகம் எரிப்பும் குறித்தும் ஒரு அட்டவணையுடன் கூடிய விரிவான கட்டுரை ஒன்றினை எழுதுகிறார். அசோக் யோகன் கண்னமுத்து ‘துடைப்பானின் குறிப்புக்கள்’ என்ற தனது பதிவில் தேசியவாத உணர்வுகள் எப்படி தேசியவெறியாக உருமாறி, அது எவ்வகையில் மற்றவர்களின் மீது மேலாண்மை செலுத்துகின்றது என்பதினை விளக்கி, எமது தேசிய இனப்பிரச்சினைகளின் தீர்வாக மார்க்சிய வழிப்பட்ட அணுகுமுறையினை ஆராய்கின்றார். ‘காலுடைந்த சிவில் சமூகமும் தமிழ் புத்திஜீவிகளும்’ என்ற கட்டுரையில் இன்றய தமிழ் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகளின் போலித்தனங்கள் குறித்து ஸ்பார்ட்டகஸ்தாசன் விரிவான கட்டுரை ஒன்றினை சேரன், சி.புஷ்பராஜா, சமுத்திரன், தமிழரசன், செ.கணேசலிங்கன், சுவிஸ் ரஞ்சி, ப.வி.சிறிரங்கன், ஜோர்ஜ் குருசேவ், முதலானோரின் அரசியல் கட்டுரைகளுடன் அருந்ததி, சேரன், இளைய அப்துல்லாஹ், நா.விச்வநாதன், தமயந்தி திருமாவளவன், சி.சிவசேகரம், சோலைக்கிளி, உமா, இளைய அப்துல்லாஹ், றஞ்சனி, அ.ஜ.கான், முத்துலிங்கம், செல்வம் அருளாந்தம், இந்திரன் போன்றவர்களது கவிதைகளும் தமயந்தி, உமா, தயாநிதி, ரவீந்திரன், நிருபா, சந்துஷ், நா.கண்ணன் ஆகியோர்களின் சிறுகதைகளும் இம்மலரில் இடம் பிடித்துள்ளன.

இன்று தீவிரமான புலி எதிர்ப்பாளர்களாக இருந்து புலிகளிற்கு எதிராக தமது உரத்த குரல்களை படைப்புக்களாக பதிவு செய்து வருகின்ற பலரது படைப்புக்கள் எதுவும் இதில் இடம் பெறாதது, இவர்கள் புலிகளின் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த அழிவிற்கு பின்பாகவே தீவிரமான புலி எதிப்பாளர்களாக மாறி புலிகளிற்கு எதிராக கம்பு சுத்தப் பழகி இருக்கின்றார்கள் என்ற உண்மையினையும் எமக்கு எடுத்துச் சொல்கின்றது. முக்கியமாக இன்று சிங்கள இனவாத அரசின் ஒத்தோடியாக மாறி, இலங்கை அரசின் அனைத்து அராஜகங்களுக்கும் செயல்களுக்கும் ஒத்து ஊதுகின்ற பாண்டி பஜார் போராளி அன்று சபாலிங்கம் இலண்டன் வந்து அவரைச் சந்திக்க விரும்பியபோது அவரைச் சந்திக்க மறுத்ததும் இதனை சபாலிங்கம் பாரிசில் தனது தோழர்களிடம் வேதனையுடன் பகிர்ந்து கொண்டதும் எமது புகலிட வரலாற்றில் நாம் மறைக்க முடியாத உண்மைகள்.

இம்மலரானது உண்மையில் ஒரு இரண்டு தசாப்தகால ஈழ-புகலிட சமூக, பண்பாட்டு அரசியல் களங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை வெளிப்படையாகப் பேசி நிற்கின்றது என்றே நாம் கருதுகின்றோம். சேரன் ‘காற்றை எதிர்த்து ஒரு காலடி’ என்ற ஒரு விரிவான கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அதில் அவர் இங்கு புகலிடத்தில் வெளியாகி இருந்த சிறுசஞ்சிகைகள் தவிர்ந்த அன்றைய அனைத்துப் பத்திரிகைகளும் புலிகளின் எதேச்சதிகாரங்கள், அராஜகங்கள் போன்றவற்றை எப்படி ஆதரித்து நின்றன என்பதினை தெளிவாக விளக்குகிறார்.

இதே வேளை இங்கு வெளியாகியிருந்த பெரும்பாலான சஞ்சிகைகள் அனைத்துமே புலி எதிர்ப்பாளர்களினாலேயே வெளி வந்திருந்தன என்பதுவும் நாம் மறுக்க முடியாத உண்மை. புலிகள் தமது இராணுவ வெற்றிகள் மூலமும் அர்ப்பணிப்புக்கள் தியாகங்கள் மூலமும் கட்டிக் காத்து வந்த பிம்பங்களை கட்டவிழ்ப்பதில் இவர்கள் மிக வெற்றிகரமாகச் செயற்பட்டார்கள் என்பதும் அதனை இவர்கள் இறுதிவரை சாதித்துக் காட்டினார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அத்துடன் புலிகளின் ஜனநாயக விரோத செயற்பாடுகளிற்கு எதிராக குரல் கொடுத்த இவர்களது பல்வகை அமைப்புக்களிலும் கூட ஜனநாயக விரோதப் பண்புகளே கோலோச்சி இருந்தது என்பதுவும் வரலாறு இன்று எமக்குக் காட்டி நிற்கும் உண்மைகள். இவர்கள் புலிகளின் பிம்பங்களை சிதைப்பதற்காக அவர்களிக்கு எதிராக பல்வேறு பிம்பங்களை சிருஷ்டித்தார்கள். ஆனால் அந்த பிம்பங்களின் பின்னால் உள்ள அதிர்ச்சிகரமான முகத்திலறையும் உண்மைகள் இப்போது ஒவ்வொன்றாக வெளி வந்து இன்று அந்த பிம்பங்களும் ஒவ்வொன்றாகச் சிதைவடையும் போது எமது அறிவு ஜீவிகளின் ஒரு 3௦ வருட கால ஏமாற்று வேலைகளும் பித்தலாட்டங்களும் எம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன.

தோழர் சபாலிங்கத்திற்கு அர்ப்பணம் செய்யப்படுள்ள இந்த அஞ்சலி மலரில் சபாலிங்கம் குறித்ததான எந்த விபரங்களோ அல்லது அவரது வாழ்க்கை வரலாறுகளோ இதில் இணைக்கப்படாதது கொஞ்சம் ஏமாற்றத்தினை அளிப்பதினை இங்கு அவசியம் குறிப்பிட்டேயாக வேண்டும்.

இம்மலர் வெளிவந்து இன்று 20 வருடங்களாகின்றன. வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது ஏமாற்றமும் சோகமும்தான் எஞ்சுகின்றது. இந்த தொகுப்பில் தமது படைப்புகளை வெளிக்கொணர்ந்த தி.உமா காந்தன், திருமாவளவன், சி.புஷ்பராஜா, செ.கணேசலிங்கன் போன்றோர் இன்று உயிருடன் இல்லை. தோழர் அ.ஜ.கான் மிக அண்மையில்தான் தமிழகத்தில் கோவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணமடைந்து, எம்மையெல்லாம் துயரத்தில் ஆழ்த்தி இருந்தார். இதில் எம்மை அதிக துயரத்திலும் வேதனையிலும் ஆழ்ந்தும் விடயம், அன்று இந்த இதழில் தமது படைப்புக்கள் மூலம் அதிகாரத்திற்கு எதிராகவும், படுகொலைகள், வன்முறைகள் என்பவற்றிட்கெதிராகவும் தமது உரத்த குரல்களை பதிவு செய்த பலரும், இன்று இலங்கை பேரினவாத சிங்கள அரசின் ஆதரவாளர்களாக மாறி இலங்கை அரசின் அராஜகங்களையும் படுகொலைகளை நியாயப்படுத்தும் மனிதர்களாக மாறியுள்ளமைதான். இவர்கள் இன்றும் சிங்கள பேரினவாத அரசு ஈழப்போரின் இறுதியில் நிகழ்த்திய இனப்படுகொலையை அது இனப்படுகொலை இல்லை என்று மறுதலிப்பவர்களாகவும், அந்த அரசின் அனைத்து வகை செயற்பாடுகளிற்கும் ஆதரவளிப்பவர்களாகவும் மாறியுள்ளமை உண்மையில் எம்மை திகைப்பில் ஆழ்த்தும் விடயங்களாகும்.

இதற்குமப்பால் இவர்களில் பெரும்பாலோர் மற்றவர்களின் மாற்றுக் கருத்துக்களுக்கு சிறிதேனும் மதிப்பளிக்காதவர்களாக, ஜனநாயகம், பேச்சு சுதந்திரம் குறித்து எந்தவித அக்கறையுமற்றவர்களாக, தம் மீதான சிறு அளவு விமர்சனங்களை கூட ஏற்றுக் கொள்ளாதவர்களாக, மற்றவர்களின் மீது வசை பாடுபவர்களாக, அந்த வசைகளை பாடுவதற்காக எந்த எல்லைகளையும் மீறுபவர்களாக தொடர்ந்தும் இருந்து வருவது எமக்கு தொடர்ந்தும் வேதனையளிக்கும் விடயங்களாகும். இவர்களது இன்றைய இத்தகைய செயல்கள் இவர்களது அன்றைய செயற்பாடுகளை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைக்கின்றது. இவையாவும் இன்று எம்மை இவர்களது அன்றைய எழுத்தக்களை மீண்டும் ஒரு மறுவாசிப்பிற்கு உட்படுத்தப் பட வேண்டிய அவசியத்தினை எம்மிடம் வலியுறுதி நிற்கின்றது. இதற்குமப்பால் இவர்களில் சிலர் இன்று புலி ஆதரவாளர்களாக, அனுதாபிகளாக மாறியிருப்பதுவும் கூட வரலாற்றின் ஒரு முரண்நகையே.

முடிவாக, ‘தோற்றுத்தான் போவோமா…’ என்று அறைகூவல் இட்டு பல தசாப்த காலங்களாக அராஜகங்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகவும் மனித உரிமைகளிற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்த இவர்கள், இறுதி யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பாகவே தம்மளவில் தாமே தோற்றுப் போயிருந்தது எமது வரலாற்றின் ஒரு துயர சம்பவமே.

தோல்விகளின் வரலாறுகளையே தொடர்ந்தும் எழுதுவதுதான் எமது தலையெழுத்தா என்ன ???