பென்ஜமின் நெத்தன்யாகு

பென்ஜமின் நெத்தன்யாகு

உலக யுத்தத்திற்கு மத்திய கிழக்கு தயாராகின்றது! : த ஜெயபாலன்

கிரிமினல் மோசடிக் குற்றவாளியான இஸ்ரேலின் ஆட்சித் தலைவர் பென்ஜமின் நெத்தன்யாகு தன்னுடைய பதவியைத் தக்க வைக்க, ஆரம்பித்த காஸாவுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தம் உலக யுத்தமாக மாறுகின்றது. யுத்தம் நிறுத்தப்பட்டால், தான் ஆட்சியில் இருக்க முடியாது; என்பதை நன்கு உணர்ந்த மேற்கின் நண்பனான பென்ஜமின் நெத்தன்யாகு லெபனானோடும் ஈரானோடும் வலிந்த மோதல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அமெரிக்க அரசின் முழு ஆதரவையும் பெற்றுள்ள, இஸ்ரேலுடைய இராணுவ பலம் மத்திய கிழக்கில் யாரையும் அடித்து வீழ்த்தும் அசுரபலம் கொண்டது. ஆனால் ஒரே காலகட்டத்தில் இஸ்ரேல் பல யுத்த முனைகளை ஆரம்பித்து இருப்பதும், அமெரிக்க, பிரித்தானிய அரசுகளின் ஆதரவைத் தவிர ஏனைய நாடுகளிடம் இருந்து இஸ்ரேல் அந்நியப்பட்டு நிற்பதும் இஸ்ரேலுக்குப் பாதகமான அம்சங்கள்.

மத்திய கிழக்கில் தங்களுடைய நலன் பேண, இஸ்ரேல் 1948 இல் உருவாக்கப்பட்டதையடுத்து பலஸ்தீன மண் திறந்த வெளிச்சிறைச்சாலையாகியது. இஸ்ரேலுடைய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக ஹமாஸ் மற்றும் ஈரானின் முழுமையான ஆதரவோடு இயங்கும் ஹிஸ்புல்லா, பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றது. இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல் இஸ்ரேல் தொடர்ச்சியாக பலஸ்தீன மக்களின் நிலத்தை அபகரித்து வருகின்றது. இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல், இப்பிரச்சினை மத்திய கிழக்கில் அமைதியின்மையை ஏற்படுத்தி, மத்திய கிழக்கை ஒரு யுத்தப் பிரதேசமாக வைத்ததுள்ளது. காலத்துக்குக் காலம் யுத்த மேகங்கள் கூடுவதும், கலைவதும் வழமையாகிவிட்டது. அமெரிக்க ஆயுத நிறுவனங்களுக்கு பழம் நழுவிப் பாலில் வீழ்ந்த கொண்டாட்டம்.

ஹமாஸ் – ஹிஸ்புல்லா அமைப்புகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தாக்குதலைத் தொடுத்து 1,200 பேர் வரையானவர்களை ஓக்ரோபர் 7, 2023 தாக்குதலில் படுகொலை செய்தது. இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய ஆங்கிலிக்கன், மற்றும் கத்தோலிக்க நாடுகள் தீவிர முனைப்புடன் முஸ்லீம்களான பலஸ்தீனியர்களை கடந்த ஓராண்டாக இனப்படுகொலை செய்து வருகின்றது. இஸ்ரேல் செய்வது இனப்படுகொலை என தென்னாபிரிக்க அரசு இஸ்ரேலுக்கு எதிரா சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து, கணிசமான வெற்றியையும் பெற்றது.

இஸ்ரேலின் முஸ்லீம் மக்களுக்கு குறிப்பாக பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மேலும் விரிந்து, பாலஸ்தீனம், லெபனான் மற்றும் ஈரானுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

ஈரானின் நெருக்கத்துடன் இயங்கும் ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் நன்கு திட்டமிட்ட பேஜர் தாக்குதலைத் தொடுத்து ஹிஸ்புல்லாவின் தலைமையை பலீனப்படுத்தியது. அடுத்த சில தினங்களில் கடந்த 30 ஆண்டுகளாக ஹிஸ்புல்லாவுக்கு தலைமை தாங்கிய ஹஸ்ஸன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டார். காஸாவில் கடந்த ஒரு வருடத்தில் சிறுவர், பெண்கள் உட்பட அமெரிக்க, பிரித்தானிய அரசுகளின் ஆதரவுடன் இயங்கும் இஸ்ரேல், நூறாயிரம் பேர்வரை படுகொலை செய்தது. தற்போது இஸ்ரேல் ஈரானையும் யுத்தத்திற்குள் இழுத்துவிட்டுள்ளது. ஒக்ரோபர் முதல்நாள் ஈரான், தனது நண்பனான ஹசன் நஸ்ரல்லாவின் இழப்புக்கு பழிவாங்கும் வகையில் ஈராக் மீது 200 வரையான ஏவுகணைகளை எய்து தாக்குதலை நடத்தியுள்ளது.

இச்சம்பவமானது, மத்திய கிழக்கில் 3வது யுத்தம் ஆரம்பிக்கப் போகின்றது என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் நேற்றைய தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி வழங்கும் என பென்ஜமின் நெத்தன்யாகு தலைமையிலான வலதுசாரிக் கூட்டமைப்பு சூளுரைத்துள்ளது. அதே போல் பாலஸ்தீனத்தில் குழந்தைகளையும் பெண்களையும் ஹிட்லரிலும் மோசமாகப் படுகொலை செய்து ஹொலக்கோஸ்டை நடத்தும் இஸ்ரேலும் அதற்கு முழு ஆதரவு வழங்கும் அமெரிக்க, பிரித்தானிய அரசுகளுக்கும் இதனை உடனடியாக நிறுத்தாவிட்டால் நிலைமைகள் பாரதூரமாக அமையும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய அரசுக்கு மிக நெருக்கமான பல்கலைக்கழகக் கலாநிதியொருவர் குறிப்பிடுகையில், ஈரான் தாக்கப்பட்டால் அமெரிக்காவும் அதில் ஈடுபட்டால் இஸ்ரேல் தாக்கப்படுவதுடன் மத்திய தரைக்கடலால் நடைபெறும் பெற்றோலியம் உட்பட்ட வர்த்தகங்கள் நிகழமாட்டாது என்றும் மேற்கினதும் உலகினதும் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்னும் சில நாட்களில் மூன்றாம் உலக யுத்தமொன்றை நோக்கி உலகம் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கும். இதனால் உலகம் பெரும் பொருளாதார நெருக்கடியொன்றைச் சந்திக்கக வாய்ப்புள்ளது.