பெரியமாதவனை

பெரியமாதவனை

 3ஆவது நாளாக சித்தாண்டியில் தொடரும் மேய்ச்சல் தரைகளை கோரிய மக்கள் போராட்டம் !

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேச கால்நடை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (17) 3ஆவது நாளாக சித்தாண்டியில் தொடர்கிறது.

பண்ணையாளர்களும்,கால்நடைகளும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அநீதிக்கு எதிரான அறவழிப் போராட்டமாக இத் தொடர் போராட்டம் இடம்பெறுகின்றது.

மட்டக்களப்பு செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் உள்ள தங்களது மேய்ச்சல் தரைப் பிரதேசமான மயிலத்தமடு, பெரியமாதவனைப் பரப்பில் தொடரும் சட்ட விரோத குடியேற்றம் தடுக்கப்பட்டு மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத் தருமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இவ் அறவழிப் போராட்டத்தினை மயிலத்தமடு,பெரியமாதவனை கால்நடை வளர்ப்போர் அமைப்பு மற்றும் மட்டக்களப்பு கமல அமைப்புக்களால்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த 15.09.2023.அன்று காலை சித்தாண்டி பிரதான வீதியில் ஒன்று கூடியவர்கள் தங்களுக்கு எதிராக இளைக்கப்படும் அநீதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வழியாக கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் சித்தாண்டி முற்சந்தி பிள்ளையார் ஆலயத்தினை வந்தடைந்தனர்.

அங்கு பிள்ளையாரை வணங்கி தங்களது அறவழிப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என சிதறு தேங்காய் உடைத்து அறவழிப் போராட்டத்தினை ஆரம்பித்தனர். தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை இவ் போராட்டமானது சுழற்சியான முறையில் தொடருமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த பிரதேசத்தில் தொடர்ச்சியான முறையில் கால்நடைகள் பெரும்பான்மை சமூகத்தினரால் துப்பாக்கி சூடு நடாத்தி கொல்லப்படுவதுடன் இறைச்சிக்காக வெட்டப்படுவதும் களவாடப்படுவதுமான நிலை காணப்படுவதுடன் பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பொலநறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தோர் அப் பிரதேசத்திற்கு வருகை தந்து அத்துமீறிய குடியேற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களது பயிர் செய்கை நடவடிக்கைக்காக கால் நடை உணவாக உட்கொள்ளும் புற்களை உழவடித்து அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் கால் நடைகளுக்கு மேய்ச்சல் தரை அழிவடைந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். இவர்களது இச் செயற்பாட்டினால் பால் உற்பத்தி குறைவடைந்துள்ளதுடன் கால் நடைகளை விற்று விட்டு பிரதேசத்தினை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.