சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்துக்கு அமைய நாட்டின் அரசியலமைப்பு இயற்றப்படவில்லை.ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்ட நடவடிக்கைகள் நிறைவுப் பெறும் வரை எந்த தேர்தலையும் நடத்த போவதில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது.
சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் செயற்பாடுகள் எதிர்வரும் ஜூலை மாதம் நிறைவடைவதாக குறிப்பிடப்படுகிறது.பொதுத்தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.அதற்கு முன்னர் எந்த தேர்தலும் நடத்தப்படாது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு தான் ஜனாதிபதி அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்துக்கு அமைய நாட்டின் அரசியலமைப்பு இயற்றப்படவில்லை.ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தேர்தல் வாக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் ஜூலை மாதம் முன்னெடுக்கும்.
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பில் சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஊடாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என்றார்.