பேராசிரியர் திஸ்ஸ விதாரண

பேராசிரியர் திஸ்ஸ விதாரண

அரசில் இருந்து வெளியேறப்போவதாக அறிவித்துள்ள பங்காளிக் கட்சி !

லங்கா சமசமாஜக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக திஸ்ஸ விதாரண   தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பிரதான கூட்டணிக் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்கள் குறித்து கலந்துரையாட சந்தர்ப்பத்தை கோரிய போதிலும் பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் அதற்கு எந்த பதிலையும் வழங்கவில்லை.

இப்படியான நிலைமையில், அரசாங்கத்தின் கீழ் கூட்டணியில் இருக்க கூடாது என்பது தனது நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், லங்கா சமசமாஜக் கட்சியின் அடுத்த அரசியல் சபைக் கூட்டத்தில் அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பான யோசனையை முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவித்துள்ளார்.

“மாகாண சபை தேர்தல் தொடர்பில் தமிழ்- முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாகும்..” – பேராசிரியர் திஸ்ஸ விதாரண

“மாகாண சபை தேர்தல் தொடர்பில் தமிழ்- முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாகும்.” என  லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிட்டதாவது,

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் பல சிக்கல் நிலை காணப்படுகிறது. . தேர்தலை விரைவாக நடத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் வெற்றிப் பெறாத அளவிற்கு பல பிரச்சினைகள் ஏதாவதொரு வழியில் தோற்றம் பெறுகிறது.  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன்  பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வுகாண  எதிர்பார்த்தோம் அதுவும்  வெற்றிப்பெறவில்லை.

மாகாண சபை தேர்தல் உட்பட  பல பிரச்சினைகளுக்கு   தீர்வுகாண பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க பங்காளி கட்சி தலைவர்கள் அனுமதி  கோரியுள்ளார்கள். எதிர்வரும் வாரம் பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கு அனுமதி கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கிறோம்.

மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான  சாத்தியப்பாடுகள் ஏதும்  கிடையாது. தேர்தல் முறைமை தொடர்பில் கட்சி தலைவர்கள் இதுவரையில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனை முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.  யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு சில விடயங்களுக்கு 11 பங்காளி கட்சி தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். மாகாண சபை தேர்தலில் உள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் தேர்தலை நடத்த முடியாது.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை பெறுவதுடன் , சிறு கட்சிகளின் ஆலோசனைகளையும் பெற வேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை தேர்தல் முறைமை கொண்டு வரப்பட்டது. ஆகவே மாகாண சபை தேர்தல் தொடர்பில் தமிழ்- முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாகும்.

மாகாண சபை தேர்தலில் காணப்படும் சிக்கல் நிலைக்கு தீர்வு கண்டு தேர்தலை விரைவாக நடத்த லங்கா சமசமாஜ கட்சி முழுமையான ஆதரவை வழங்கும். மக்களின் ஜனநாயக தேர்தல் உரிமையினை பாதுகாப்பது அனைத்து தரப்பினது பொறுப்பாகும் என்றார்.