பைசர் தடுப்பூசி

Thursday, September 23, 2021

பைசர் தடுப்பூசி

புதிய வகை கொரோனா வைரஸையும் அழிக்கும் திறன் கொண்ட பைசர் தடுப்பூசி – ஆய்வில் கண்டுபிடிப்பு !

சீனாவின் வுகானில் பரவ ஆரமபித்து உலகம் முழுவதும் கண்டறியப்பட்ட கொரோனா வைரசுக்கு எதிராக தற்போதுதான் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரத்தொடங்கி உள்ளன.

அந்த வைரசின் அச்சுறுத்தல் முடிவுக்கு வருவதற்குள் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ்கள் பரவுவது கண்டறியப்பட்டது.

இதில் இங்கிலாந்து வைரஸ் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரசுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் வேலை செய்யுமா? என்ற சந்தேகம் மருத்துவ நிபுணர்களிடம் இருந்து வந்தது. எனவே அதற்கான ஆய்வுகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதில் கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டுக்கு வந்துள்ள பைசர் தடுப்பூசி, இந்த உருமாறிய கொரோனாவையும் கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசி போடப்பட்ட 20 பேரின் ரத்த மாதிரிகளைக்கொண்டு மேற்படி வைரசுக்கு எதிராக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இந்த ரத்த மாதிரிகள் உருமாறிய புதிய வைரசை வெற்றிகரமாக தடுப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக பைசர் நிறுவன தலைமை விஞ்ஞானி டாக்டர் பிலிப் டோர்மிட்சர் தெரிவித்தார்.

அதேநேரம் இந்த ஆய்வு முடிவுகள் முதற்கட்டமாக கிடைத்த தகவல்கள்தான் எனவும், இது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவு தெரியவரும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஐரோப்பிய யூனியன் அனுமதி !

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் உள்பட பல நாடுகளிடம் பைசர் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது.

இதையடுத்து, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு அனுமதியளித்ததையடுத்து அந்நாடுகளில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், 27 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய யூனியனில் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிப்பது தொடர்பாக ஐரோப்பிய யூனியனியன் கமிஷன் நேற்று ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனை கூட்டத்தில் ஐரோப்பிய யூனியனில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கோண்டுவர அனுமதி வழங்கப்பட்டது.

இதன் மூலம் ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளுக்கும் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர் டிசம்பர் 27-ம் திகதி முதல் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. ஒரே நாளில் ஐரோப்பிய நாடுகளில் பைசர் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள சம்பவம் வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் முக்கியத்துவம் பெறுகிறது.

“புதிய வகை கொரோனா வைரஸையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பைசர் தடுப்பூசிக்கு உள்ளது” – ஜெர்மனி சுகாதாரத்துறை மந்திரி ஜென்ஸ் ஸ்பான் 

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா உட்பட பல நாடுகள் தடை செய்துள்ளன. இதற்கிடையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி கடந்த சில நாட்களுக்கு முன்னரே இங்கிலாந்து, அமெரிக்கா போன்று நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மார்டனா தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி ரஷியாவில் பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவுவதால் தற்போதைய தடுப்பூசிகள் பயனளிக்காமல் செல்லலாம் என பரவலான கருத்துக்கள் நிலவி வந்தன. இந்நிலையில், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளே தற்போதைய புதிய கொரோனா வைரசையும் கட்டுப்படுத்தும் என ஐரோப்பிய யூனியனில் உள்ள சுகாதாரத்துறை விஞ்ஞானிகள் நம்புவதாக ஜெர்மனி சுகாதாரத்துறை மந்திரி ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தற்போதுவரை நமக்கு கிடைத்த தகவலின்படி, புதியவகை கொரோனா வைரஸ் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியில் (பைசர் தடுப்பூசி) எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. புதிய வகை கொரோனா வைரசையும் தற்போதுள்ள தடுப்பூசிகள் கட்டுப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த பயோன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.