பொருளாதார சரிவு

பொருளாதார சரிவு

“மக்கள் விரும்பாத சில தீர்மானங்களை எடுக்கவுள்ளோம்.”- பொறுமை காக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை !

உலக பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டு செல்வதற்கு மக்கள் விரும்பாத தீர்மானங்களை எதிர்காலத்தில் எடுக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

இவ்வாறான தீர்மானங்கள் விமர்சிக்கப்பட்டாலும், எதிர்வரும் காலங்களில் இதன் பலனை பொது மக்கள் பெறுவார்கள். எனவே, நாட்டில் தற்போது மிகக் குறைந்த தெரிவுகளே உள்ளதால், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன நிலையில், அதனை பொது மக்கள் அங்கீகரியுங்கள்.

இலங்கையர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டின் தற்போதைய நிலைமையை உணர்ந்து கொள்ள வேண்டும். கொவிட் -19 தொற்று நோயால் சுற்றுலாத் துறையின் மூலம் ஈட்டப்பட்ட ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழந்துள்ளது.

சுற்றுலாத் துறையானது நேரடியாகவும் மறைமுகமாகவும் முப்பது மில்லியனுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. அபிவிருத்தி அல்லது அபிவிருத்தியடையாத என அனைத்து நாடுகளும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை சிறிய பொருளாதாரமாக இருப்பதால் இலங்கை அதன் தாக்கங்களில் பெரும் பகுதியை எதிர்கொண்டது. என தெரிவித்த அவர்,  அரசாங்கம் பொருளாதாரத்தை எவ்வாறு நிர்வகித்தது என்பதை ஜனாதிபதி ராஜபக்ஷ நினைவு கூர்ந்தார். இதேவேளை முக்கியமாக சுற்றுலா மூலம் பெறப்படும் வருமானம் மற்றும் வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணம் என்பன இழக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இவ்வாறான வருமான ஆதாரங்களை இழப்பதன் மூலம் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.