போதைப்பொருள் பாவனை எதிர்ப்பு

போதைப்பொருள் பாவனை எதிர்ப்பு

“நான் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவன் அல்லது எதிரானவள்” – கிளிநொச்சியில் கவனயீர்ப்பு கை அடையாள செயற்றிட்டம் !

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் இலவச தொழிற்கல்வி நிறுவனமான லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான “நான் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவன் அல்லது எதிரானவள்” என்ற தொனிப்பொருளிலான கை அடையாள கவனயீர்ப்பு செயற்திட்டம் ஒன்று 17.12.2023 அன்று கிளிநொச்சி பிரதான பேருந்து தரிப்பிடம் மற்றும் பொதுச் சந்தை ஆகிய பகுதிகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டது.

 

கிளிநொச்சி உள்ளிட்ட இலங்கையின் வடபகுதியில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் இதனால் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் இதன் நீட்சியாகவே சமூக சீர்கேடுகள் மற்றும் சமூக வன்முறை சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாகவும் அண்மை ஆய்வுகள் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருப்பதாக செயற்திட்ட ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்திருந்தனர்.

 

காலை 10.00 மணியளவில் ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு செயற்றிட்டத்தில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்கள் மட்டுமன்றி சமூக ஆர்வலர்கள் – பொதுமக்கள் – மாணவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கை அடையாளங்களை போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பதிவு செய்திருந்தனர். குறித்த கவனயீர்ப்பு செயற்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளர் ஹம்சகௌரி அவர்கள் “லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையமானது கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களுக்கான தொழில்கல்வியையும் அத்துடன் இணைந்த வகையிலான சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்ற ஓர் நிறுவனமாகும்.

 

அண்மையில் நமது இளைஞர்கள் இடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கை அடையாள கவனயீர்ப்பு செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதற்கு பொதுமக்கள் தொடங்கி மாணவர்கள் அனைவருடைய ஆதரவும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் நிகழ்வுக்கான அனுமதி தந்து – இன்றைய தினம் பாதுகாப்பும் வழங்கி நமது சமூக மாற்றத்திற்கான முயற்சிக்கு ஆதரவு வழங்கிய கிளிநொச்சி மாவட்ட பொலிஸாருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என அவர் குறிப்பிட்டார்.