மங்கள சமரவீர

மங்கள சமரவீர

“புலிகளுடனான போர் நடத்தப்பட்ட முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் தனது அமைச்சரவைப் பதவியை இழந்தவர் மங்களசமரவீர .” – இரங்கல் யெ்தியில் கூட்டமைப்பு !

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறப்புக்கு தமிழ்அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர்.

முக்கியமாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மரணம் தமிழர்கள் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பாரிய இழப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“முன்னாள் அமைச்சரும் தமிழ் மக்களின் உண்மையுள்ள நண்பருமான மங்கள சமரவீரவின் எதிர்பாராத மறைவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

1989 இல் அரசியலில் கால் பதித்த மங்கள சமரவீர, 1994 இல் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசில் அமைச்சராகப் பொறுப்பேற்றார். மேலும், தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காகப் பிரசாரம் செய்யும் ‘சுது நெலும்’ இயக்கத்தையும் முன்னெடுத்துச் சென்றார். அவர் இறக்கும் வரையிலும் இனவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்திருந்தார்.

மங்கள சமரவீர, விடுதலைப்புலிகளுடனான போர் நடத்தப்பட்ட முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் தனது அமைச்சரவைப் பதவியை இழக்க நேரிட்டது.

பின்னர் அவர் 2015 இல் வெளிவிவகார அமைச்சராக மீண்டும் பதவியேற்று, நீதி, பொறுப்பு மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி அயராது உழைத்தார். இன, மொழி, சாதி, மதம், அல்லது நம்பிக்கை வேறுபாடுகளுக்கப்பால் ஒவ்வொரு குடிமகனும் சமமாக நடத்தப்படும் ஓர் இலங்கையே அவரது தரிசனமாகக் காணப்பட்டது. மங்கள சமரவீரவின் மரணம் நம் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பாரிய இழப்பாகும்” என்றுள்ளது.

 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ,

சக நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவையில் இணைந்து செயற்பட்ட காலத்திலும் அமரர் மங்கள சமரவீர இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற யதார்த்தத்தினை உணர்ந்து செயற்பட்டிருந்தார்.அன்னாரின் இழப்பினால் துயருற்று இருக்கின்ற அவரின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்கூறியிருந்தார்.

சமரவீரவின் மறைவையொட்டி பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள இரங்கற்செய்தியில் குறிப்பிட்டுள்ள போது “தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்தமைக்குச் சிங்களவர்கள் காரணமே தவிர தமிழர்கள் அல்லர். ஆரம்ப காலத்தில் தமிழர்கள் மொழியுரிமை கேட்டார்களே தவிர தனிநாட்டைக் கோரவில்லை. மொழியுரிமை உரியவாறு வழங்கப்படாத நிலைமையிலேயே அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தார்கள் எனத் தெரிவித்ததன் மூலம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மையை வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட மங்கள சமரவீர பேரினவாதச் சேற்றில் மலர்ந்த ஒரு வெண்தாமரை.அன்னாரின் ஆத்மா இயற்கை அன்னையின் மடியில் சாந்தியடையட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.” என தெரிவித்துள்ளார்.

 

 

“மியன்மாரில் இடம்பெற்ற விடயங்கள் இலங்கைக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கை” – முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எச்சரிக்கை !

மியன்மாரில் இடம்பெற்ற விடயங்கள் இலங்கைக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கை என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இராணுவத்தை சிவில் நிர்வாகத்தின் தாழ்வாரத்திற்குள் கொண்டுவந்தால், இராணுவம் மக்கள் ஆணையின் செல்லுபடியை தீர்மானிப்பதில் நீதித்துறையினதும் தேர்தல் ஆணைக்குழுவினதும் பங்களிப்பை தவிர்க்க விரும்புவார்கள் இது தவிர்க்க முடியாதவிடயம் என டுவிட்டரில் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

மியன்மாரிலிருந்து இலங்கைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை இது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“கொரோனாவின் மூன்றாம் அலை நாட்டைத் தாக்கியபோது, நாட்டை முழுமையாக முடக்காமல் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த அரசே கொரோனாவைப் பரப்பியது” – மங்கள சமரவீர குற்றச்சாட்டு !

“கொரோனாவின் மூன்றாம் அலை நாட்டைத் தாக்கியபோது, நாட்டை முழுமையாக முடக்காமல் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த அரசே கொரோனாவைப் பரப்பியது” என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

போலியான வாக்குறுதிகளை வழங்கி அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசு, இன்று அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திக்குமுக்காடுகின்றது.

நல்லாட்சி அரசை எப்படியெல்லாம் விமர்சிக்க முடியுமோ அப்படியெல்லாம் அன்று விமர்சித்தது ராஜ்பக்ச அணி. இன்று பௌத்த தேரர்களும், நாட்டு மக்களும் இந்த அரசைத் தூற்றும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் நலன் கருதி –  சர்வதேசத்தின் உறவைப் பேணிக்காத்து நல்ல வேலைத்திட்டங்களை நாம் அன்று முன்னெடுத்தோம். ஆனால், இந்த அரசோ எந்தவித வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றது.

கொரோனாவின் மூன்றாம் அலை நாட்டைத் தாக்கியபோது, நாட்டை முழுமையாக முடக்காமல் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த அரசே கொரோனாவைப் பரப்பியது. இன்று அமைச்சர்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

கொரோனாவை சுயலாப அரசியலுக்குப் பயன்படுத்த எத்தனித்த அரசு, இன்று கொரோனாவால் ஆட்சியை முன்கொண்டு செல்ல முடியாத நிலையை எதிர்நோக்கியுள்ளது.

சிங்களவர்களின் மனதில் இடத்தைப் பிடிக்கும் நோக்குடன் தமிழ், முஸ்லிம்களின் மத, கலாசார, பண்பாட்டு உரிமைகளில் இந்த அரசு கைவைத்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு முஸ்லிம் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. அதேபோன்று போரில் உயிரிழந்தவர்களை நினைவேந்துவதற்குத் தமிழ் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது – என்றார்.

“இறுதிப்போரில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லையெனில் ஐ.நாவின் கூட்டு உடன்படிக்கையில் அன்று மஹிந்த கையெழுத்திட்டிருக்கக்கூடாது” – மங்கள சமரவீர காட்டம் !

“இறுதிப்போரில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லையெனில் ஐ.நாவின் கூட்டு உடன்படிக்கையில் அன்று மஹிந்த கையெழுத்திட்டிருக்கக்கூடாது” முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் படுகொலைகளில் ஈடுபடவில்லை. போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. இதை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரிய சாட்சியங்களுடன் இந்த முறை நிரூபிப்போம். நாம் எதற்கும் அஞ்சமாட்டோம்’ என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தன மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார். அது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக இருந்த பான் கீ – மூனிடம் இணைந்து ஆவணங்களில் மஹிந்த கைச்சாத்திட்டும் இருந்தார். போர்க்குற்றங்கள் தொடர்பான விவகாரத்துக்கு மஹிந்தவே முழுப்பொறுப்பு. இறுதிப்போரில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லையெனில் ஐ.நாவின் கூட்டு உடன்படிக்கையில் அன்று மஹிந்த கையெழுத்திட்டிருக்கக்கூடாது.

போர்க்குற்றங்கள் தொடர்பில் பேசுவதற்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. ஏனெனில், அவரும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய நபராவர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஒவ்வொரு தடவையும் வாய்க்கு வந்த மாதிரி பேசுகின்றார். போர்க்குற்றங்கள் தொடர்பில் பேசுவதற்கு அவருக்கும் எந்த அருகதையும் கிடையாது. அவரின் பொறுப்பற்ற கருத்துக்கள் சர்வதேச அரங்கில் இலங்கையைத் தலைகுனிய வைக்கும் .

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை மீதான சர்வதேச விசாரணையைத் தவிர்க்கும் வகையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நல்லாட்சி அரசு இணை அனுசரணை வழங்கியிருந்தது. அதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், இராணுவ அதிகாரிகளையும் மின்சாரக் கதிரையில் இருந்து காப்பாற்றினோம்.

கோட்டாபய அரசு தற்போது கூறுவது போல் ஜெனிவாவில் இராணுவத்தினரையும் ராஜபக்ச குடும்பத்தினரையும் நல்லாட்சி அரசு காட்டிக்கொடுக்கவில்லை. அன்று பான் கீ – மூனுடன் இணைந்து மஹிந்த ராஜபக்சவே நாட்டைக் காட்டிக் கொடுத்தார்.

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து கோட்டாபய அரசு விலகிக்கொண்டமை முற்றிலும் தவறானதாகும். இதனால் பாரிய விளைவுகளை இம்முறை ஜெனிவாவில் இந்த அரசு சந்திக்கப் போகின்றது.

இது பொருளாதார ரீதியில் மோசமான நிலைமையையும் இலங்கைக்குத் தோற்றுவிக்கக்கூடும். சர்வதேச மட்டத்தில் இலங்கை தனிப்படுத்தப்படுத்தப்படவும் கூடும். இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டிய விடயத்தை இன்று அரசு சர்வதேச அரங்கில் ஊதிப்பெருப்பித்துள்ளது – என்றார்.