மனித உரிமை மையங்கள்

மனித உரிமை மையங்கள்

இலங்கையின்அனைத்து பல்கலைகழகங்களிலும் மனித உரிமை மையங்கள் !

பகிடிவதை மற்றும் பிற வன்முறைகள் தொடர்பான சம்பவங்களைக் கையாள்வதற்காக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மனித உரிமை மையங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதை மற்றும் பிற வன்முறைகள் தொடர்பாக எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து அதன் உறுப்பினர்களிடம் ஆலோசனை பெறுவதற்காக அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்திருந்தார்.

பல்கலைக்கழகங்களில் உள்ள இந்த மனித உரிமை நிலையங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘தற்போதுள்ள சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதே மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரை. ஆனால் நடந்தது என்னவென்றால், பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பாக புதியவர்கள் தாங்கள் துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைக்க பயப்படுகிறார்கள். புகார் அளித்த பின்னர் அவர்கள் மீண்டும் வளாகத்திற்கு வர பயப்படுகிறார்கள். அத்தகைய மாண்வர்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், தங்கள் புகார்களை தெரிவிக்க முன்வருமாறும் கேட்டுக்கொள்கிறோம். இலங்கையில் உள்ள வேறொரு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு அல்லது அரசாங்க புலமைப்பரிசில்கள் மூலம் கல்வியைத் தொடர வெளிநாடுகளுக்கு அனுப்பும் வாய்ப்பை வழங்குவதன் மூலம் அந்த மாணவர்களுக்கு எந்தவிதமான சலசலப்புமின்றி கல்வியைத் தொடர உதவுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம், ”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.