மனுசநாணயக்கார

மனுசநாணயக்கார

“1956இன் தனிச்சிங்கள சட்டமே நாட்டை வீழ்த்தியது.” – மனுச நாணயக்கார

1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே நாடு இன, மத ரீதியாக பிளவடைய பிரதான காரணமாக காணப்படுவதாக தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

நமக்கு நாம் மட்டுமே என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நல்லிணக்கம் மனிதநேயத்தின் ஆரம்பம் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சில் இடம்பெற்றது.

 

“அரசியல் நோக்கத்திற்காகவும் பொருளாதார நோக்கத்திற்காகவும் இனவாதமும் மதவாதமும் சமூகத்தில் பரப்பப்பட்டன.

 

இதனை அரசியல்வாதிகளும் தங்களின் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த நாடு வீழ்ந்தபோது, அனைவரும் ஒன்றிணைந்து தான் இந்நாட்டை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பேச்சில் மட்டுமன்றி, செயற்பாட்டிலும் எமது ஐக்கியத்தை நாம் காண்பித்துள்ளோம். எதிர்க்காலம் குறித்து மட்டும் குறைகூறிக் கொண்டிருக்காமல், புதிதாக சிந்திக்கும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும்.

1956 இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்துதான், இந்நாடு பல இனவாத மோதல்களுக்கு முகம் கொடுத்தது.

 

இங்கு தான் நாம் பிரிந்தோம். இதன் பின்னர்தான் ஆயுதம் ஏந்தப்பட்டு, கொடிய யுத்தமும் நாட்டில் ஏற்பட்டது. இவை தான் நாடு முன்னேற்றமடைய தடையாக இருந்தன.

 

1956 இற்குப் பின்னர் நாட்டை விட்டு பல புத்திஜீவிகள் வெளியேறினர். 1983 இலும் 2022 இலும் இதேபோன்று புத்திஜீவிகள் உள்ளிட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

 

நாம் நம்மை உணராத காரணத்தினால்தான், அடுத்தவரின் குறைகளை பெரிதாகக் காண்கிறோம். நாம் ஏனையவரின் மத, இன, கலாசாரத்தை மதித்தால் மட்டுமே, இந்நாட்டை முன்னேற்ற முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி – முடிவுக்கு வந்த அரசின் 07 மாத நாடகம் !

இரசாயன உரம், களை கொல்லி மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்  வெளியாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் இரசாயன உரம், களை கொல்லி மற்றும் திரவ உரம் என்பவற்றை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில் இரசாயன உர நடனம் இன்றுடன் முடிந்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

இரசாயன உரத்தை எக்காரணம் கொண்டும் மீண்டும் இறக்குமதி செய்ய மாட்டோம் என்றும் இதனைச் செய்ய முடியாதவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் கூறினர்.

வாயால் வற்றாலை  நடுவது போல்தான் இருந்தது அவர்களின் கருத்து. தற்போது நாங்கள் உதவித் தொகை வழங்கப்போவதில்லை. இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் இரசாயன உரம், களை கொல்லி மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்படும் என்றும் ஆளும் தரப்பினர் கூறினர்.

நாட்டில் கடந்த 7 மாத காலமாக நடித்த நாடகம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நடித்த நாடகமும் தட்டிய தாலமும் இன்று இல்லை. அரசாங்கம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நடனம் ஆடியது என்றும் தோ்தலின்போது “அரசாங்கம் பாம்பு நடனம் ஆடியது”,” கொரோனா பாணி நடனம் ஆடியது”, ”இப்போது காபனிக் நடனம் ஆடுகிறது” என்றும் காபனிக் நடனம் இன்றுடன் முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிளவுபட்ட இலங்கையை விக்னேஸ்வரன் ஊக்குவிக்கின்றார் ! – பாராளுமன்றில் மனுசநாணயக்கார.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த விக்னேஸ்வரன், தமிழர்கள் பூர்வீக குடிகள் என்றும், தமிழர்களின் இருப்புத் தொடர்பிலும் விளக்கமாக உரையாற்றியிருந்தார். இந்நிலையில் இன்று பாராளுமன்றம் கூடிய போது நாடாளுமன்றத்தின் கன்னியுரையில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தொடர்பில் ஆராயப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தென்னிலங்கையில் காரசாரமான விவாதங்கள் எழும்பின. இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பின மனுசநாணயக்கார விக்னேஸ்வரனின் உரையை நாடாளுமன்ற குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடிய போது, மனுசநாணயக்கார வெளியிட்ட கரிசனைகளை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இன்று நாடாளுமன்றம் கூடியவேளை விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு பதிலளிக்கவேண்டும் என கோரிய மனுசநாணயக்கார பிளவுபட்ட இலங்கையை விக்னேஸ்வரன் ஊக்குவிக்கின்றார் என தெரிவித்தார்.

எனினும் இதனை நிராகரித்த சபாநாயகர் விக்னேஸ்வரனின் உரை குறித்து ஆராயப்படும் என தெரிவித்தார். எனினும் சபாநாயகரின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்த நாணயக்கார விக்னேஸ்வரனின் நிலைப்பாட்டிற்கு தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

இதேவேளை இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கருத்து சுதந்திரத்தினை நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் மதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோன்று, அவர் சபாநாயகரின் நிலைப்பாட்டை வரவேற்றார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.