“தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் பேரில் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ள வேண்டும்.” என மனோ கணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச. 08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்நது தெரிவிக்கையில்,
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தெரிவிக்கும்போது, இன்னும் 40 பேரே அவ்வாறு சிறைச்சாலைகளில் உள்ளதாகவும் அவர்கள் தொடர்பான விசாரணைகள் சம்பந்தமாகவும் தெரிவித்தார்.
எனினும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களை கட்டங்கட்டமாக அல்லாமல் ஒரே தடவையில் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க முடியும். அத்தகைய நம்பிக்கையளிக்கும் நடவடிக்கைகள் மூலமே தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியும்.
ஏற்கனவே கடந்த தீபாவளியின் போது எட்டுப் பேரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தது போன்று எதிர்வரும் பொங்கல் தினத்திலும் மேலும் சிலரை விடுதலை செய்யுமாறு நாம் அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.
அதேவேளை அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பின் பேரில் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன் வரவு -செலவுத் திட்டத்தில் மலையக தோட்டப்பகுதி மக்கள் தொடர்பில் எத்தகைய வேலை திட்டங்களும் முன் வைக்கப்படவில்லை.
தற்போதைய நிலைமையில் நிவாரணங்களை வழங்க முடியாது என்றாலும் குறைந்தபட்சம் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றாவது குறிப்பிட்டிருக்க வேண்டும்.
நாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் பேசப்படும் நிலையில், கிராமப் புறங்களில் அது 36 வீதமாகவும் நகர்ப்புறங்களில் அது 46 வீதமாகவும் காணப்படுவதுடன் மலையகத் தோட்டப்புறங்களில் அது 53 வீதமாகவும் காணப்படுகின்றது.
அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்துவதுடன் தோட்டப் பகுதி மக்களுக்காக அரசாங்கம் எத்தகைய திட்டத்தை முன்னெடுக்கப் போகின்றது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
அதேபோன்று கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சமுர்த்தி உதவி வழங்குவது முறைப்படுத்தப்பட வேண்டும் அதற்காக தற்போதுள்ள சமுர்த்தி பட்டியலை நீக்கிவிட்டு மின் கட்டண பட்டியலை வைத்து அதற்கான செயற் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் நியாயமானதாக அமையும் என்பதால் அதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.