மன்னார்

மன்னார்

மன்னார் நகருக்குள் மதுபான சாலைகள் வேண்டாம் – மக்கள் போராட்டத்தில் !

மன்னார் மாவட்டத்தில் நகரப்பகுதிக்குள் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்று மன்னார் நகர் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரஜைகள் குழு, மகளீர் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்தே இந்தப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

மன்னார் நகர மத்திய பகுதியில் ஆரம்பித்த இந்தப் போராட்டம் நகர பகுதி ஊடாக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் வரை நீடித்தது.

மன்னாரில் உள்ள கத்தோலிக்க மற்றும் இந்து ஆலயங்கள், பாடாசாலை மற்றும் அதிக மக்கள் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் மதுபான சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான பகுதிகளில் மதுபான சாலைக்கு அனுமதி வழங்குவதினால் அப்பகுதியில் விபத்துக்கள், முரண்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்புகள் காணப்படுவதாக போராட்டக்காரர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டது.

குறித்த போராட்டத்தில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர், இந்து ஆலய குருக்கள், சட்டத்தரணிகள், நகரசபை உறுப்பினர்கள், மெசிடோ நிறுவன ஊழியர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தின் இறுதியில் மதுபான சாலை அமைக்கு திட்டத்தை நிறுத்த கோரியும் மன்னார் நகர பகுதியில் மதுபான சாலைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்றும் வலியுறுத்தி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்புவதற்கான மகஜர் ஒன்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் பிரதேச செயளாலரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் சிறுவர்களை இலக்கு வைத்து சுற்றித்திரியும் வாகனங்கள் – மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் எச்சரிக்கை !

மன்னாரில் அண்மை காலங்களாக சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றி திரிவதாகவும் சிறுவர்களை இலக்கு வைத்து அவர்களை கடத்தும் நோக்கில் சிலர் மன்னார் மாவட்டத்திற்குள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் (8) துரித விசாரணை முன்னெடுக்கப்பட்டதோடு காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவரை வாகனம் ஒன்றில் வந்தவர்கள் இனிப்பு பண்டங்களை வழங்கி பலவந்தமாக ஏற்றிச் செல்ல முயற்சி செய்யப்பட்டதாக குறித்த மாணவர் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த மாணவன் கல்வி கற்கும் பாடசாலைக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் இன்றைய தினம் (8) காலை குறித்த பாடசாலைக்குச் சென்று மாணவனிடம் விசாரணைகளை மேற்கொண்டேன்.

இதன் போது மேலும் ஒரு மாணவனை இன்று திங்கட்கிழமை(8) காலை பாடசாலைக்குச் செல்லும் போது இனிப்பு பண்டங்களை வழங்கி வாகனத்தில் ஏற்ற முற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடையம் குறித்து மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதோடு,பாடசாலை பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

மாணவர்கள் கவனம் தொடர்பாக பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் குறித்து மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் என்னுடன் தொடர்பை ஏற்படுத்தி துரித நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள்.” என தெரிவித்தார்.

இதேவேளை, கல்முனை – உடையார் வீதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் ஒருவரும் நேற்றையதினம் காணாமல்போயுள்ள நிலையில், தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் கடலட்டை இனப்பெருக்க நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் திறந்து வைப்பு !

கடற்றொழில், கைத்தொழிலை மேம்படுத்தும் வகையில் மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட கடலட்டை இனப்பெருக்க நிலையம் நேற்று (30.03.2021) முற்பகல் 10.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

தேசிய நீர் வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஜயந்த விஜேரத்தின வின் அழைப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோர் இணைந்து கடலட்டை இனப்பெருக்க நிலையத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கடலட்டை உற்பத்தியை நேரடியாக பார்வையிட்டதோடு உரிய தரப்பினருடன் கலந்துரையாடினர்.

இதன்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.திலீபன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல், மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் உட்பட திணைக்களத் தலைவர்கள், அமைச்சின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.