காற்றாலை மின் உற்பத்திக்கு மன்னார் பொருத்தமான பிரதேசம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த விசேட கூட்டம் இன்று காலை மன்னாரில் இடம் பெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மெலும் தெரிவிக்கையில்,
“காற்றாலை மின்சாரம் அமைக்கலாம். ஆனால் அதற்கான உகந்த இடங்களை தெரிவு செய்து முன்னெடுக்க வேண்டும்.
ஆனால் மன்னார் தீவு என்பது கடல் மட்டத்தில் இருந்து சற்று குறைவான இடத்தில் காணப்படுகின்றது.இத் தீவு இச்செயல் திட்டத்திற்கு பொருத்தமானதாக இல்லை.
மன்னாரில் இரண்டு பாரிய அச்சுறுத்தல்களை மக்கள் எதிர் கொள்கின்றார்கள். காற்றாலை அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் செயல் திட்டத்தில் மூன்று திட்டங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
காற்றாலை அமைப்பதன் மூலம் இப்பிரதேசங்களில் எற்படுகின்ற பல விதமான பாதிப்புக்களை மக்கள் ஏற்கனவே நேரடியாக அனுபவிக்கின்றார்கள்.
குறிப்பாக மீன்பிடி சமூகம் அவர்கள் பிடிக்கும் மீன்களின் தொகைகளில் மாற்றம் காணப்பட்டு குறைகின்றமை மற்றும் நீரோட்டங்களின் திசைகள் வழமை போல் இல்லாது மாற்றமடைவது உள்ளடங்கலாக பல்வேறு காரணிகளால் பிடிக்கப்படுகிற மீன்களின் தொகை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.